விபரீத ராஜயோக பலன்கள்!

10 February 2020 ஜோதிடம்
moneyrain1.jpg

பெயரில் இருந்தே, இதன் வலிமையினை நீங்கள் அறிய இயலும். இது ஒரு ராஜயோகம் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் லக்கனத்திற்கு, ஆறாம் இடம், எட்டாம் இடம் மற்றும் 12ம் இடத்தினை அசுப ஸ்தானங்கள் என்பர். இந்த இடங்களின் மூலம், விரயங்கள், விபத்துக்கள், நோய், கடன்கள் முதலியவை உண்டாகும். இந்த இடங்களின் அதிபதிகள், இதற்கு முக்கியக் காரகத்துவம் வகிக்கின்றனர். இந்த ஆறாம் அதிபதி, எட்டாம் அதிபதி மற்றும் 12ம் இடத்து அதிபதிகள், தங்கள் இடத்திற்கு பதிலாக, லக்கின்றத்திற்கு ஆறு, எட்டு, 12 இடங்களில் மாறி அமர்ந்தால் இந்த பலன்கள் உருவாகும்.

ஆறாம் அதிபதி, அல்லது எட்டாம் அதிபதி அல்லது 12ம் அதிபதியின் காலங்களில், திடீரென்று ஏற்படும் விபரீதங்கள் மற்றும் அவைகள் மூலம் ஏற்படும் எதிர்பாராத நல்ல பலன்களே விபரீத ராஜயோகம் ஆகும். மொத்தம் மூன்று விதமான விபரீத ராஜயோகப் பலன்கள் உள்ளன. விபரீத ஹர்ச ராஜயோகம், விபரீத சரளா ராஜயோகம் மற்றும் விபரீத விமலா ராஜயோகம்.

விபரீத ஹர்ச ராஜயோகம்

இந்த யோகமானது, ஆறாம் அதிபதியினால் ஏற்படக் கூடிய ராஜயோகம் ஆகும். ஆறாம் அதிபதி எட்டாம் இடத்திலோ அல்லது 12ம் இடத்திலோ இருந்தால், இந்த விபரீத ஹர்ச ராஜயோகம் ஏற்படும். அதுவும், அந்த ஆறாம் அதிபதியின் தசா மற்றும் புத்தியிலேயே ஏற்படும்.

ஆறாம் அதிபதி, எட்டாம் இடத்திலோ அல்லது 12ம் இடத்திலோ இருந்தால், நல்ல உடல்நலம் உண்டாகும். இயற்கையிலேயே, ஏதாவது நோய் வந்தால், உடனடியாக சரியாகும். இவர்களை எதிரிகளால் வெல்ல இயலாது. இவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் மிகவும் குறைவாகவே இருக்கும். மருத்துவச் செலவுகள் ஏற்படாது. மறைமுக எதிரிகள் இருக்கமாட்டார்கள். கடன் தொல்லை இருக்காது.

ஆறாம் அதிபதிக்கு, லக்னத்திற்கு எட்டாம் இடம் என்பது மூன்றாம் இடம் ஆகும். அதே போல், 12ம் இடம் என்பது ஏழாம் இடம் ஆகும். இதனால், இது இரண்டாம் தர விபரீத ராஜ யோகம் ஆகும்.

விபரீத சரள ராஜயோகம்

இந்த யோகமானது, எட்டாம் அதிபதியினால் ஏற்படக் கூடிய ராஜயோகம் ஆகும். எட்டாம் அதிபதி 12ம் இடத்திலோ அல்லது ஆறாம் இடத்திலோ இருப்பதனால் இந்த யோகம் ஏற்படுகின்றது. இந்த யோகமானது, அந்த எட்டாம் அதிபதியின் தசா மற்றும் புத்தியிலேயே செயல்படும்.

இந்த யோகத்தினை உடையவர்களுக்கு, எதிரிகளின் மூலம் தொல்லை ஏற்படாது. இவர்களால், எவ்வளவுப் பெரிய கடனையும் எளிதாக அடைக்க இயலும். வழக்குகள் மூலம், இந்த யோகத்தினை உடையவர்களை வெல்ல இயலாது. வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எட்டாம் அதிபதிக்கு 12ம் இடம் என்பது ஐந்தாவது ஆகும். அதே போல், எட்டாம் அதிபதிக்கு 6ம் இடம் என்பது 11ம் இடம் ஆகும். இவை இரண்டுமே, அதிக நல்லப் பலன்களை வழங்க வல்லவை என்பது குறிப்பிடத் தக்கது. இருக்கின்ற விபரீத யோகங்களிலேயே, இந்த விபரீத சரள ராஜயோகமே வலிமையானது ஆகும்.

விபரீத விமல ராஜ யோகம்

12ம் இடத்தின் அதிபதியானவர், லக்னத்திற்கு, ஆறாம் இடத்திலோ அல்லது எட்டாம் இடத்திலோ, இருப்பதால் இந்த யோகம் உண்டாகும். இந்த யோகத்தின் மூலம் பல நன்மைகள் உண்டாகும்.

இந்த யோகத்தினை உடைய ஒரு ஜாதகருக்கு, அதிக வழக்குகளை சந்தித்தாலும், அனைத்திலும் இவரே வெல்வார். கட்டப்பஞ்சாயத்துக்கு சென்றாலும், இவர் தரப்பினருக்கே வெற்றி கிடைக்கும். மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் சூழ்நிலை உண்டாகும். இருப்பினும், அதற்குப் பின்னர், ஜதாகரின் உடல்நிலை வலிமை அடையும். மறைமுக எதிரிகளால் இவரை வெல்ல இயலாது.

விபரீத ராஜ யோகங்களிலேயே இது மட்டுமே சற்று சுமாரானது. 12ம் இடத்து அதிபதிக்கு, லக்னத்திற்கு ஆறாம் இடம் என்பது ஏழாம் இடம் ஆகும். அதே போல், எட்டாம் இடம் என்பது ஒன்பதாம் இடம் ஆகும். எனவே, தான் சற்று சுமாரானப் பலன்கள் உண்டாகின்றன.