விகாரி வருட ராசிபலன் மிதுனம் 2019-2020

24 October 2019 ராசிபலன்
mithunam.jpg

மிதுன ராசியானது ராசிக் கட்டத்தில் மூன்றாவது ராசியாகும். இது ஒரு ஆண் ராசி. இது ஒரு நில ராசியும் கூட. இதன் அதிபதி புத பகவான் ஆவார். இந்த விகாரி தமிழ் புத்தாண்டில், குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி என மாபெரும் கோள்களின் பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன.

இந்த தமிழ் புத்தாண்டு மே 15 வரை குரு பகவான், சனி மற்றும் கேது பகவானுடன் இணைந்து குரு சண்டாள யோகத்தை தனுசு ராசியில் உண்டு பண்ண உள்ளார். இது உங்கள் ராசிக்கு ஏழாம் இடமாகும். மே 15க்குப் பின் மீண்டும், விருச்சிக ராசிக்கே சென்று விடுகிறார். பின்னர், அக்டோபர் மாதம் 28ம் தேதி தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

அங்கு சனி பகவான் மற்றும் கேது பகவானுடன் இணைந்து மீண்டும் குரு சண்டாள யோகத்தை உண்டு பண்ண உள்ளார். அதே போன்று, சனி பகவான் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். ஆக மொத்தம், இந்த விகாரி வருடத்தில் கிட்டத்தட்ட, இரண்டு மாபெரும் கிரகங்களின் பெயர்ச்சிகள், நடைபெறுகின்றன.

சரி, இந்த விகாரி வருடத்தில், உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்றுப் பார்ப்போம். ஆண்டு தொடக்கத்தில் மூன்று பெரும் கோள்களான, கேது, சனி மற்றும் குரு ஆகியோர் ஒன்றாக இருக்கின்றனர்.

ஏப்ரல் முதல் மே வரை குரு பகவான், சனி பகவான் மற்றும் கேது பகவான் ஆகியோர் ஒன்றாக, தனுசு ராசியில் இருக்கின்றனர். ராகு பகவான், தொடர்ந்து உங்கள் ராசியிலேயே, இருக்க உள்ளார். மற்ற கிரகங்கள் அதன் காலத்திற்கு ஏற்றபடி, சுழன்று கொண்டே இருக்க உள்ளன.

தனுசு ராசி ஒரு மூல ராசியாகும். இதனை உபய ராசி என அழைப்பர். இந்த உபய ராசியில் மாபெரும் கிரகங்கள் முதல் மாதம் இருக்கின்றன. இவைகளின் சேர்க்கை, குரு சண்டாள யோகத்தை உண்டு பண்ணும். மேலும், குருவின் பார்வையால், முதல் மாதம், ராகுவால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். இந்த குரு சண்டாள யோகம், மீண்டும், தீபாவளிக்குப் பின்பு, ஆரம்பிக்கும்.

ஆண்டு தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு செவ்வாய் பகவான், பன்னிரெண்டில் இருக்க உள்ளார். இதனால், காவல் துறையினர், சட்டத்துறையினர், போன்றோர் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். யாரிடமும் தேவையற்ற வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம். செவ்வாய் பெயர்ச்சி அடைந்ததும், அனைத்தும் சுபமாக மாறும்.

ராஜ கிரகங்களான, சனி, குரு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் நெருப்பு ராசியில், அதுவும் உபய ராசியில் சஞ்சரிக்கின்றன. இந்த சஞ்சாரம் உங்களுக்கு வலிமையைத் தரும் அமைப்பாகும். இந்த அமைப்பால், திருமணத்திற்காக, காத்திருந்தவர்களுக்கு நல்ல திருமண வரம் அமையும்.

குறிப்பாக, சனிப்பெயர்ச்சிக்குப் பின் சிறப்பான வாழ்க்கைத் துணை வரனாக அமையும் என்பதில், மாற்றுக் கருத்தில்லை. அதேசமயம், தொழிலில் மட்டுமல்ல, வாழ்க்கையின் மற்ற அனைத்து விஷயங்களிலும், ஆண்களாக இருந்தால், பெண்களாலும், பெண்களாக இருந்தால், ஆண்களாலும், பல நன்மைகள் ஏற்படும்.

ராகு பகவான், உங்கள் ராசியிலேயே இருக்கின்றார் இது உபய ராசி மட்டுமல்ல, காற்று ராசியும் கூட. இதனால், உங்களுடைய ஆசைகளையும், தேவைகளை அடையும் வழிகளையும் இந்த ராகு பகவான் காட்டுவார். தொடர்ந்து ராகு காலத்தில், ஸ்ரீதுர்க்கையை வணங்கி வரவும்.

இருப்பினும், உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், கண்டிப்பாக எவ்விதப் பிரச்சனையும் இன்றி, சுமூகமான முறையில் தேவைகளும், உங்கள் ஆசைகளும் பூர்த்தி ஆகும். இருப்பினும், நீங்கள் கவனமாகத் தான் இருக்க வேண்டும். ஏனென்றால், கொடுப்பவர் ராகு. முதல் மாதம் குருவின் பார்வையப் பெறுவதால், ராகுவால் எவ்விதப் பிரச்சனையும் ஏற்படாது.

ஆனால், முதல் மாதம் முடிந்த பின்பு, அதாவது மே மாதத்திற்குப் பின், ராகு பகவான், மிகவும் பலமடைகின்றார். இதனால், நீங்கள் சற்றுக் கவனமுடன் இருந்தாலே,பிரச்சனைகளில் இருந்து தப்பித்துவிடாலம். எதை செய்தாலும், திருட்டு வழியில், அல்லது குறுக்கு வழியில் செய்ய வேண்டாம். கஷ்டமாக இருந்தாலும், நேர்வழியிலேயே செய்யவும்.

சுக்கிரன் ஆண்டு முழுக்க நல்ல நிலைமையிலேயே இருக்கின்றார். இதனால், பெண்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். மே மாதத்திற்குப் பிறகு, குரு பகவான் மீண்டும், ஆறாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இதனால், கடன் தொல்லை தீரும். எதிரிகளால் பெரிய அளவிலான தொல்லைகள் இருக்காது.

தீபாவளி வரை, குரு பகவான் தொடர்ந்து இதே நிலையில், இருக்க உள்ளார். மேலும், தீபாவளிக்குப் பிறகு வரும் குருப்பெயர்ச்சியின் காரணமாக, குரு பகவான் சர்வ வல்லமையுடன், தன்னுடைய முதல் ஆட்சி வீடான தனுசு ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். அங்கு கேது மற்றும் சனி பகவானுடன் இணைகின்றார்.

அங்கு அவ்வாறு இணைந்தாலும், தன்னுடைய வீட்டிற்கு செல்வதால், கெடுதல்களை செய்யவிட மாட்டார். மேலும், இந்த சமயத்தில், நீங்கள் ஏதேனும், தவறு செய்தீர்கள் என்றால், கண்டிப்பாக, மாட்டிக் கொள்வீர்கள். எனவே, தேவையற்ற, தகாத, அரசுக்குப் புரம்பான, சட்டத்திற்கு விரோதமான வழிகளில் செல்ல வேண்டாம். குருவின் பார்வையை உங்கள் ராசிக்குப் பதினொன்றாம் இடம் பெறுவதால், நல்லதொரு வருமானம் கிடைக்கும். பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. அரசாங்க வருமானம் உண்டாகும். மனதில் ஒருவித மகிழ்ச்சியும், அமையும் உருவாகும்.

ராகுவினால், ஏற்படும் பாதிப்புகளும் குறையும். மேலும், 2020ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியினால், சனி பகவான் உங்கள் ராசிக்குப் எட்டாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இது மறைவு ஸ்தானத்தில் ஒரு முக்கியமான ஒன்றாகும். இது மறைமுக வருமானத்தை அளிக்கக் கூடிய ஒன்றும் கூட. சனி இங்கு அமர்வதால், கண்டிப்பாக, ஆயுள் பிரச்சனைகள் தீரும்.

உடல்நிலைப் படிப்படியாக சீராகும். மனதில் ஒழுக்கத்தில் வளர்த்துக் கொள்ளவும். மறைமுக உறவுகளினால், நீங்கள் மாட்டிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். எனவே, மறைமுக உறவுகள், மறைமுகத் தொழில்களை தவிர்க்கவும்.

பணவரவு இந்த ஆண்டும், தற்பொழுதுள்ள நிலையே நீடிக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி ஆகியவை நன்றாகவே இருக்கும்.

ஆக மொத்தம், இந்த விகாரி ஆண்டு, உங்கள் மிதுன ராசிக்கு நூற்றுக்கு 91% நன்றாகவே உள்ளது. மேலும், பல நன்மைகள் நடக்க, முதலில் உங்கள் குல தெய்வத்தை வணங்கவும். பின்னர், மகா விஷ்ணுவையும், விநாயகரையும் வணங்கி வர, வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.