கலைகட்டிய பரமபத வாசல் திறப்பு விழா! திருமால் பக்தர்கள் பரவசம்!

07 January 2020 கோவில்கள்
vaikundaekadasi1.jpg

நேற்று வைகுண்ட ஏகாதசியானது, தென் இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம், திருமலை திருப்பதி, கள்ளழகர் திருக்கோயில் உட்பட 108 திவ்ய தேசங்களிலும் நேற்று காலை மற்றும் மாலையில், சொர்க்கவாசல் எனப்படும் பரம்பத வாசல் திறக்கப்பட்டது.

மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவானது, கடந்த 26ம் தேதி அன்று தொடங்கியது. இதனையடுத்து, டிசம்பர் 27 முதல் பகல்பத்து உற்சவம் அனைத்து வைணவ திருக்கோயில்களிலும் நடைபெற்றது. இதனையடுத்து, நேற்று வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட்டது. ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் அதிகாலை நான்கு மணியளவில், பாண்டியக்கொண்டை அணைந்தி, கிளி மாலை, நவரத்தினம் பதித்த அங்கி உட்பட பிரம்மாண்ட அலங்காரத்துடன், பரமபத வாசல் வழியாக நம்பெருமாள் உலா வந்தார். அப்பொழுது அங்கு திரண்டிருந்த பக்தர்கள், ரெங்கா, கோவிந்தா என விண்ணதிர முழங்கினர்.

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் வைகுண்ட வாசல் திறக்கப்பட்டு, அங்கு ஸ்ரீநிவாசன் காட்சியளித்தார். பின்னர், தங்கத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதே போல், பாண்டி நாட்டுத் திருத்தலங்களில் முக்கிய திருத்தலமான கள்ளழகர் திருத்தலத்தில், காலை ஆறு மணிக்கு, பரமபத வாசல் திறக்கப்பட்டு, சுந்தர்ராஜப் பெருமாள் உலா வந்தார். காலையில் ஒரு சிலக் கோயில்களிலும், மாலையில் ஒரு சிலக் கோயில்களிலும் பரமபத வாசல் திறக்கப்பட்டது. இந்த விழாவில் பல லட்சம் பேர் கலந்து கொண்டு திருமாலை தரிசனம் செய்தனர்.

திருமலையில் உள்ள திருப்பதியில், சுமார் 2 லட்சம் பேர் திரண்டதால் பக்தர்களை தங்க வைக்கும் இடங்கள் நிரம்பி வழிந்தன. இதனால், தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டு அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.