வைகுண்ட ஏகாதசி பற்றிய விரிவானப் பார்வை!

06 January 2020 சாஸ்திரங்கள்
vaikundaekadasi.jpg

விஷ்ணு பக்தர்கள் அனைவராலும், பெரிய அளவில் கொண்டாடப்படும் திருவிழாவாக, இந்த வைகுண்ட ஏகாதசி உள்ளது. மார்கழி மாதம் வருகின்ற ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என அழைக்கப்படுகின்றது. அந்த நாள் விரதம் இருந்தால், திருமால் தன்னுடைய வைகுண்டத்தில் இடம் அளிப்பார் என்ற நம்பிக்கை தீவிரமாக நம்பப்பட்டும் வருகின்றது.

மார்கழி மாதம் வருகின்ற முதல் பத்து நாட்கள் பகற்பத்து சேவை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. அந்த பத்து நாட்களும், பெருமாள் கோவிலைச் சுற்றிலும் வலம் வருவார். பின்னர், அவர் முன்னால் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் பாடப்படும். பகற்பத்து முடிந்த அடுத்த நாள், வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகின்றது. அதற்கு அடுத்த பத்து நாட்கள், இராப்பத்து சேவை கொண்டாடப்படுகின்றது.

இந்த மார்கழி மாதம் நடைபெறும், ஏகாதசி விரதத்தினைப் பற்றி சுவாரஸ்யமான வரலாறும் உள்ளது. சத்ய யுகத்தில், முரன் என்ற அசுரன் இருந்தான். அவனுடையத் தொல்லையைத் தாங்காமல் முனிவர்களும், தேவர்களும் திருமாலின் உதவியினை நாடினர். அப்பொழுது அவர்களுக்காக மனம் இறங்கி வந்த திருமால், முரனை அழிப்பேன் என கூறினார். பின்னர், முரனின் படைகளை எல்லாம் அழித்தார். கடைசியாக, முரன் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு அழித்தார்.

அப்பொழுது, பத்ரிநாத் உள்ள ஒரு குகையில், படுத்து உறங்கினார். அப்பொழுது, அவரைத் தேடி அங்கு வந்த முரன் அவரைக் கொல்ல முயற்சித்தான். அப்பொழுது, திருமாலின் உடலில் இருந்து ஏகாதசி என்ற பெண் வெளியில் வந்தாள். அவளைப் பார்த்த முரன் எள்ளி நகையாடினான். அப்பொழுது, அப்பெண் ஹூம் எனக் கூறினாள். அவ்வளவு தான். முரன் கணப்பொழுதில் சாம்பலானான்.

அப்பொழுது கண்விழித்த திருமாலை ஏகாதசி வணங்கினாள். அவளை ஆசிர்வாதம் செய்த பகவான், அப்பெண்ணிற்கு வரம் அளித்தார். அப்பெண்ணிற்கு ஏகாதசி என்றுப் பெயர் சூட்டினார். மேலும், ஏகாதசி நாளில் என்னை நோக்கி, விரதம் இருந்து வேண்டுபவர்களுக்கு, பாவங்கள் நீக்கப்படும். வைகுண்டத்தில் இடம் கொடுக்கப்படும். அவர்கள் புனிதம் அடைவர் என அருள் வழங்கினார். அன்று முதல், ஒவ்வொரு மாதமும் வருகின்ற ஏகாதசி அன்று, விரதம் இருப்பர். ஆனால், அவ்வாறு இருக்க முடியாதவர்கள், மார்கழி மாதம் வளர்பிறையில் வருகின்ற ஏகாதசியின் பொழுது விரதம் இருப்பர். மாதங்களில் நான் மார்கழி என, கிருஷ்ண அவதராத்தில் பெருமாள் கூறியதால், அந்த மாதத்தில் வருகின்ற ஏகாதசிப் பிரசித்திப் பெற்றது. மார்கழி மாதம் வளர்பிறையில் வருகின்ற ஏகாதசி வைகுண்ட ஏகாதசி எனப்படும். தேய்பிறையில் வருகின்ற ஏகாதசி உற்பத்தி ஏகாதசி எனப்படும். ஏகாதசி என்றால் 11 என்று பொருள்.

வைகுண்ட ஏகாதசியின் பொழுது, மரணம் அடைபவர்களுக்கு மோட்சம் ஏற்படுகின்றது என, இந்து மதத்தினர் பெரும்பாலானோர் நம்புகின்றனர். இந்த வைகுண்ட ஏகாதசியின் பொழுது, பெருமாள் கோயில்களின் வடக்குப் பகுதியில் உள்ள பரமபத வாசல் திறக்கப்படும். அதன் வழியாக, கோயிலில் உள்ள உற்சவ பெருமாள் வலம் வருவார். அவரைத் தொடர்ந்து, பக்தர்களும் அனுமதிக்கப்படுவர்.

முழுமையான வைஷ்ணவ ஆச்சார்யர்கள், வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய நாள், வைகுண்ட ஏகாதசி மற்றும் வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த நாளும், விரதம் இருப்பர். ஆனால், பெரும்பாலானோரால் அவ்வாறு இருக்க இயலாது. அதனால், வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து, பெருமாளை கோயிலுக்குச் சென்று வழிபடுவர். விரதத்தினை ஆரம்பிக்கும் முன், விநாயகரையும், குல தெய்வத்தினையும் வணங்க வேண்டும். பின்னர், திருமாலை மனதில் நினைத்து விரதத்தினைத் தொடங்கலாம். விரதம் இருக்கும் நாளன்று, பழச்சாறு, பால், பழம் முதலானவைகளை உண்ணலாம். கர்ப்பிணி பெண்களுக்கு, இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது. ஒரு வேளை மட்டும் ஒரு சிலர் உணவருந்தி, விரதம் இருக்கின்றனர்.

இரவு முழுவதும் உறங்காமல் பெருமாள் புகழைப் பாடி பெருமாளை வணங்க வேண்டும். பின்னர், கோயிலுக்குச் சென்று பெருமாளை வணங்கி விரதத்தினை முடிக்க வேண்டும்.

இந்த ஏகாதசித் தினத்தினை முன்னிட்டு, பெரும்பாலான கோயில்களில் காலையிலும் ஒரு சிலக் கோயில்களில் மாலையிலும், பரம்பத வாசல் திறக்கப்படும். அதன் வழியாக, பெருமாள் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். பின்னர், அதன் வழியாக தன்னுடைய பக்தர்களுடன் வருவார். உலகிலேயே இந்த விழாவானது, ஸ்ரீரங்கத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படும். அங்குள்ள வாசல் வழியாக நம்பெருமாள் வலம் வருவார். அங்கு மட்டுமின்றி, திருமலை திருப்பதியிலும் வைகுண்ட ஏகாதசி வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும்.