பிரம்மோற்சவ திருவிழா முடிந்தது! லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

24 October 2019 கோவில்கள்
thirumalai1.jpg

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ திருவிழா நேற்று மாலையில் நிறைவடைந்தது. இந்த திருவிழாவில், சுமார், 7 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

செப்டம்பர் 30ம் தேதி, கொடியேற்றத்துடன் ஏழுமலையான் கோவிலில், பிரம்மோற்சவக் கொடி ஏற்றப்பட்டது. முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் அழைப்பு விடுப்பதற்காக, இந்த கொடி ஏற்றப்பட்டது. பின்னர், தொடர்ந்து எட்டு நாட்களாக நடைபெற்று வந்த, பிரம்மோற்சோவ திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

காலை மற்றும் மாலை என, இரண்டு வேலைகளிலும் மலையப்ப சுவாமிகள் வெவ்வேறு வாகனங்களில் வந்து, பக்தர்களுக்குக் காட்சியளித்தார். ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் உபயநாச்சியார்களுடன் மாட வீதிகளில் வலம் வந்த மலையப்ப சுவாமிக்கு, பல்வேறு அலங்காரங்களும் செய்யப்பட்டன.

பெரிய ஷேச வாகனம், சிறிய ஷேச வாகனம் என்று ஒரு நாளும், அன்ன வாகனம், சிம்ம வாகனம் என ஒரு நாளும், முத்துப் பந்தல் வாகனம் மற்றும் கற்பக விருட்ச வாகனம் என ஒரு நாளும், கருட வாகனம் மற்றும் அனுமந்த வாகனம் என ஒரு நாளும், கஜ வாகனம், சூரிய பிரபை வாகனம் என ஒரு நாளும், மாறி மாறி வாகனங்களில் வந்தார்.

நேற்று, திருமலை சக்கரத்தாழ்வாருக்கு, தீர்த்த அபிஷேகமானது, புஷ்கரணியில் நடைபெற்றது. அதில், பல ஆயிரம் பக்தர்கள் புனித நீராடினர். பின்னர், மாலையில், மலையப்ப சுவாமிகள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் இரவு மாட வீதிகளில் வலம் வந்தார். அதன் பின், கோவிலில் பிரம்மோற்சவ திருவிழாவிற்காக, ஏற்றப்பட்டக் கொடியானது இறக்கப்பட்டது.

இந்த திருவிழாவில், சுமார் 7 முதல் 10 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்திருக்க வாய்ப்புகள் உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.