வீட்டில் செல்வம் பெருக! இதனை செய்யுங்கள்!

24 October 2019 ஜோதிடம்
lakshmi.jpg

பணம் புகழ் மற்றும் செல்வாக்கு இவற்றை விரும்பாத மனிதர்களே கிடையாது, அவ்வளவு சக்தி வாய்ந்தது இவை அனைத்தும். ஒன்று வந்தால், மற்றவைகளும் வரும். ஒன்று சென்றுவிட்டால், மற்றவைகளும் சென்றுவிடும். அதனால், தான் அதனை செல்வம் என்று கூறினார்கள் நம் முன்னோர்கள். அது சரி, வாழ்வில் நல்ல பாக்கியத்துடன் வாழ வேண்டும் என்றால், பின்னால், வரும் குறிப்புகளைப் பின்பற்றுங்கள்.

உங்கள் வீடுகளில் செல்வம் பெருக வேண்டும் என்றால், அதற்கு திருமகளின் கருணைத் தேவை. அதற்கு முதலில் உங்கள் வீட்டில் குழந்தைகள் படிக்கும் பொழுது, கிழக்கு நோக்கி அமர்ந்து படிக்கச் சொல்லுங்கள். நீங்களும் ஏதாவது படித்தால், கிழக்கு நோக்கி அமர்ந்து படியுங்கள்.

திருமால் பற்றிப் பேசப்படும் இடங்களில், அவரைப் பற்றிய பாடல்கள் ஒலிக்கப்படும் இடங்களில், திருமகள் இருப்பாள். எனவே, காலையில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் கேட்பதும், பாடுவதும் அவசியம். பெருமாள் கோவில்களில், காலையில், வெங்கடேச சுப்ரபாதம் தினமும் பாடி முடித்தப் பின்னரே, மற்றப் பூஜைகள் நடக்கும்.

மகாலெட்சுமிக்குப் பிடித்த பழமாக நெல்லிக்காய் உள்ளது. எனவே, வீட்டில் மகாலெட்சுமி புகைப்படம் இருந்தால், அதற்கு அருகில் நெல்லிக்கனியை வைக்கவும். வீட்டில் இடம் இருந்தால், நெல்லிக்காய் மரம் வளர்க்கவும்.

வீட்டின் வாசலில் மா இலை கட்டவும். வீட்டில் குங்குமம், மஞ்சள், சந்தனம், கண்ணாடி, தீபம் ஆகியவைகள் கட்டாயம் இருக்க வேண்டும்.

வீட்டில் வசதி இல்லாதவர்கள், சிறிய மண் தொட்டியை வாங்கி, அதில் துளசிச் செடியை வளர்ப்பது நல்லது. காலையில் எழுந்ததும், அதனை மூன்று முறை சுற்றி வரவும்.

செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.

காலை எழுந்தவுடன் உங்களுடைய உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்க வேண்டும்.

தினசரி விளக்கேற்றுவது சிறப்பான விஷயம் ஆகும். செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட, விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.

விளக்கை தானாக இறங்க விடக் கூடாது. மேலும், ஊதியும் அமர்த்தக் கூடாது. புஷ்பத்தினாலும் இறக்கக் கூடாது. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்த வேண்டும். மாலையில் ஆறு மணிக்கு விளக்கேற்றிட வேண்டும்.

வீட்டில் முடிந்த வரை, தகாத வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம். சண்டை மற்றும் சச்சரவுகளைத் தவிர்க்கவும்.

உணவுடன் சற்று ஊறுகாய் சேர்த்துக் கொள்ளவும். அப்படிச் சேர்த்துக் கொள்ளும் பொழுது தரித்திரம் அண்டாது.

பெண்களை மதியுங்கள். வீட்டில் பெண்கள் சந்தோஷமாக இருந்தால், அந்த வீட்டில் செல்வம் குவியும். அதே சமயம், சச்சரவுகளை செய்யாத, சண்டையிடாத பெண்கள் இருக்கும் வீடுகள் மகாலெட்சுமிக்குப் பிடித்தமானவை.

உணவு பரிமாறும் பொழுது, சோறு, உப்பு மற்றும் நெய் இவற்றை வெறும் கையால் பரிமாறக் கூடாது. மாறாக, கரண்டி அல்லது ஸ்பூன் ஆகியவற்றைப் பயன்படுத்தவும். உப்பு வாங்கும் பொழுது, வெள்ளிக்கிழமை வாங்கினால், நல்ல பணம் சேரும்.

பெண்கள் மூக்கில் மூக்குத்தி, காதில் தோடு மற்றும் கையில் வளையல் ஆகியவற்றைக் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். அது பிளாஸ்டிக்காக இருந்தாலும் பரவாயில்லை.

வீட்டிற்கு வந்திருந்த உறவினர்கள் சென்றபின், வீட்டினைக் கழுவக் கூடாது. அதே போல், அமாவாசை அன்று, தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.

வீட்டினை சுத்தமாக வைத்திருக்கவும். தேவையில்லாமல், ஒட்டடை, தூசி ஆகியவைகளைப் படியவிடக் கூடாது. இரவில் வீடு கூட்டும் பொழுது, குப்பையினை வெளியில் கொட்டக் கூடாது. அதே சமயம், காலையில், வீட்டின் எந்த மூலையிலும், குப்பை இருக்காமல் பார்த்துக் கொள்ளவும்.

திருமணம் ஆனப் பெண்கள் உச்சி நெற்றியில், குங்குமம் வைக்க வேண்டும். அதே போல், பெண்கள் எப்பொழுதும், நெற்றியில் குங்குமம் இல்லாமல் இருக்கக் கூடாது.

வீட்டின் வாசலில் கோலம் இடவும். கோலம் இடும் வீட்டில், மகாலட்சுமி வாசம் செய்கின்றாள்.

வாசலில் நின்று கொண்டு பணம் கொடுக்கவோ அல்லது வாங்கவோ கூடாது. ஒன்று உள்ளே வந்து வாங்கவும் அல்லது வெளியே நின்று வாங்கவும்.

உப்பையும், கழுவும் பொழுது அரிசியையும் தரையில் சிந்தக் கூடாது.

இவைகள் அனைத்தும் நாம் அன்றாடம் செயல்கள் தான். ஆனால், சிரத்தையுடன் செய்வதில்லை. அதுவே உண்மை. இவைகளைப் பின்பற்றினாலே, மகாலட்சுமியின் அருள் நமக்குக் கிடைக்கும்.