துளசி செடியின் மகிமையும்! மந்திரமும்!

20 January 2020 மந்திரம்
thualsi.jpg

துளசியினை பிருந்தா என அழைப்பர். பிருந்தா இருக்கும் வனம் பிருந்தாவனம் ஆகும். வைணவர்களில் பெரிய குருக்கள் முதலானோர் இறக்கும் பொழுது, அவருடைய உடலைப் புதைத்துவிட்டு, புதைத்த இடத்தில் துளசி மாடத்தினை உருவாக்கிவிடுவர். அவ்வளவு புனிதத் தன்மை வாய்ந்தது இந்த துளசி.

பெருமாளுக்கு, தங்கத்தால் ஆன மாலை அணிவிக்கின்றோமோ இல்லையோ, ஒரு துளசி கீற்றினை கொண்டு சென்று, அவர் காலடியில் வைத்துவிட்டால் போதும். அவர் மனம் குளிர்ந்து தன் பக்தர்களுக்கு வேண்டிய வரத்தினை வாரி வழங்கிவிடுவார். அந்த அளவிற்கு, பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமனுக்கு துளசி செடியானது மிகவும் விருப்பமான ஒன்றாகும்.

அபேதராஷஸி, கிரம்யா, கிருஷ்ணஜீவிதா, சுரஸா, சூலாக்கினி, பகுபத்திரி, பகுமஞ்சரி, புஷ்பசாரா, பிருந்தா, பிருந்தாவதி, விஷ்வபவானி, விஸ்வபூஜிதா, விஷ்னுவல்லபா, நந்தினிபாவனி என, இந்த துளசிக்கு பலப் பெயர்கள் உள்ளன.

கருந்துளசி, கற்பூரதுளசி, கல்துளசி, காட்டுத்துளசி, சிறுதுளசி, செந்துளசி, நல்துளசி, நாய்த்துளசி, பில்வதுளசி, நிலத்துளசி, பூத்துளசி, பூதத்துளசி, பெருந்துளசி, முள்துளசி, என, இந்த துளசிச் செடியில் பல வகைகள் உள்ளன.

இந்த துளசியானது, மகா லட்சுமி வாழும் இடமாகப் பார்க்கப்படுகின்றது. துளசி மாடம் இல்லாத பெருமாள் கோயிலே கிடையாது. அந்த அளவிற்கு, மிகவும் மகத்துவமானது. உங்கள் வீட்டில் துளசிச் செடி இருந்தால், அதில் உள்ள துளசியை பறிக்கக் கூடாது. அங்கு நின்று நீர் ஊற்றி, தகுந்த முறையில் வணங்கி வந்தால் கண்டிப்பாக நல்ல பலன்கள் உங்கள் வாழ்க்கையில் உண்டாகும்.

துளசி ஸ்லோகம்

யன்மூல ஸர்வ தீர்த்தாநி யன் மத்யே ஸர்வ தேவதா
யதக்ரே ஸர்வ வேதாஸ்ச துளஸீம் தம் நமாம்யஹம்
ஓங்கார பூர்விகே தேவி ஸர்வதேவ ஸ்வரூபிணி
ஸர்வ தேவமயே தேவி சௌமாங்கல்யம் ப்ரயச்சமே
நமஸ் துளசி கல்யாணி, நமோ விஷ்ணுப்ரியே சுபே
நமோ மோக்ஷப்ரதே தேவி: நமஸ் ஸம்பத் ப்ரதாயிகே