திருப்பதியில் மொட்டை அடிப்பவர்கள் யார் தெரியுமா?

24 October 2019 கோவில்கள்
thirupathi.jpg

ஆதி காலம் முதலே, திருப்பதி பெருமாள் கோவிலில் உள்ள சிலை முருகனுடைய சிலை என்றும், அதனை பெருமாள் நிலையாக மாற்றி நாம் வழிபடுகிறோம், என்பது மாதிரியான ஒரு கூற்று பரவி உள்ளது. அதனைப் பற்றி விரிவாக இப்போது பார்க்கலாம்.

ஆதி காலத்தில், மலைகளின் மீது வசித்த குறிஞ்சி நில மக்கள், வேட்டையாடியும், தேன் எடுத்தும் தனது வாழ்வை நடத்தி வந்தனர். அப்போது, அவர்கள் தன் தெய்வாமாக, காளி சிலையை வைத்து பூஜைகளும், படையல்களையும் வைத்து வணங்கினர். அச்சமயம், மலையின் மீது ஏறி அங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள் காளி சிலையை காவல் தெய்வமாக வணங்கி வந்ததை, சைவ சமயத்தவர்கள் அறிந்தனர். அந்த பழங்குடி மக்களிடம், அவர்களது காளி சிலைக்கு மந்திரங்கள் ஓதி சிலையின் சக்தியை அதிகப்படுத்தி தருவாதாக கூறி, சில நிபந்தனைகளையும் விதித்தனர். அதன் படி இனிச் சிலைக்குப் படையல் வைக்கக் கூடாது. அதுபோல சிலையை சுற்றிலும் சுவற்றை எழுப்பி, அதனுள் அவர்கள் நுழையக் கூடாது என்றும், உள்ளே சைவ குருமார்கள் மட்டுமே சென்று பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள்.

இதை முதலில் ஏற்றுக் கொள்ளாத பழங்குடியினர், தங்கள் காளி சக்தியடைந்தால் போதும் என எண்ணி, ஒப்புக் கொண்டனர். ஒருநாள் காளியை வணங்க வந்த மலைவாழ் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு காளி சிலையானது, சிவன் சிலையாக மாற்றப்பட்டிருந்தது. இதனைக் கண்ட மலைவாழ் மக்கள், ஆயுதம் ஏந்தி சண்டையிட்டனர். அவர்களை சைவ சமய குருக்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சில ஓப்பந்தங்களை இட்டு, சுமூகமாக பிச்சினைக்குத் தீர்வு கண்டனர். ஓப்பந்தத்தின் படி, சிவனை வழிபட வரும் பக்தர்கள், முடியை காணிக்கையாகச் செலுத்தும் போது, சவரம் செய்யும் உரிமையை அவர்களுக்கு வழங்கி, அதில் வரும் வருவாயை, அவர்களே எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினர். அந்த நாள் முதல் அது சிவாலயமாகவே திகழ்ந்து வந்தது.

அந்த நேரத்தில், தான் வைணவ சமயத்தில் முக்கியமானவரான ஸ்ரீரமானுஜர், அவரது அண்ணன் திருமலை நம்பி வீட்டிற்கு வருகிறார். அவர் காளி சிலையை, சிவன் சிலையாக மாற்றி சைவ சமயத்தார் வழிபட்டு வருவதை அறிந்தார்.

உடனே, வைணவ சமய பெரியவர்களை அழைத்து, உள்ளே இருப்பது சிவன் சிலையல்ல எம்பெருமானுடைய சிலை என்று வாதம் செய்தனர். இந்த பஞ்சாயத்தானது, அப்போது அந்த பகுதியை ஆண்டு வந்த ராஜா தொண்டைமான் முன்னிலையில் நடந்தது. அப்போது பெரும் வாக்குவாதத்தில் ஒரு முடிவை எடுத்தனர். அதன்படி, கருவறையில் சிவனுக்கு உகந்ததான மான் மற்றும் மழுவையும், ஸ்ரீவிஷ்னுவுக்கு உகந்ததான சங்கு மற்றும் சக்கரத்தையும் வைத்தனர். இதில் எது தனக்கு வேண்டும் என்று, சிலையே முடிவு எடுக்கட்டும் என்று கூறி, கருவறையை பூட்டினர். மறுநாள் மானும், மழுவும் உடைந்து கிடந்தது சிலையின் கைகளில் சங்கும், சக்கரமும் இருந்தது. அன்று முதல் அந்த சிலையானது, பெருமாள் சிலையாக வணங்கப்படுகிறது. இந்த கூற்றானது, ஸ்ரீஇராமானுஜர் அந்தாதியில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீரமானுஜர் என்பவர், ஆதிசேசனின் மறு உறுவமாக பார்க்கப்பட்டார், எனவும் அவர் சர்பமாக மாறி அபிஷேக நீர் வெளியேறும் துளை வழியாக உள்ளே சென்று, மானையும், மழுவையும் அகற்றி சங்கையும், சக்கரத்தையும் சிலையிடம் வைத்தார், எனும் செவி வழிச் செய்தியும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதன் நினைவாகவே, பெருமாள் கையில் பாம்பின் வடிவம் இருப்பதாக கூறப்படுகிறது. இன்றும், அதனை சிலையில் காணலாம்.

வைணவ சமயத்தின் பெரியவரான ஸ்ரீஇராமனுஜர் சிலையை சுற்றி பார்த்த போது, பெண்ணின் சடை போன்ற வடிவம் சிலையின் பின்பக்கத்தில் செதுக்கப்பட்டிருப்பதை அறிந்தார். இதனை பற்றி பத்மாவதி எனும் நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், பெண்சிலைக்கு முன்பு தான் சிம்மம் இடம் பெற்றிருக்கும். ஆண் சிலையின் முன்பு ரிஷபம் இடம் பெற்றிருக்கும். திருப்பதி கோவிலில் பெருமாள் சிலைக்கு முன்பாக சிம்மமே இடம் பெற்றிருக்கிறது. அது மட்டுமல்லாமல் எல்லா கோவில்களிலும் பெருமாள் தனது மனைவி பத்மாவதியோடு தான் காட்சியளிப்பார். ஆனால், திருப்பதியில் தனியாக தான் காட்சியளிப்பார். அதன் காரணம், என்னவென்று ஆராயும் போது, ஒரு பெண் தெய்வத்தின் சிலைக்கு அருகில், மற்றொரு பெண் தெய்வத்தின் சிலையை வைக்கக் கூடாது, என்ற கருத்தானது அறியப்பட்டது.

ஆக மொத்தத்தில், மலைவாழ் மக்களின் சிலையை பறித்துக் கொண்டு, உலகில் அதிக சக்தி வாய்ந்த திருத்தலமாக திருப்பதியை மாற்றிவிட்டனர். மொட்டை அடிப்பதில் வரும் சொற்ப லாபத்தையே, மலைவாழ் மக்களிடம் கொடுத்துள்ளனர். எது எவ்வாறு இருப்பினும், அனைத்துமே கடவுளின் செயல் என்பதால், இதுவும் கடவுளின் செயலாகவே நாம் பார்க்க வேண்டும்.