சூரியன் எங்கு இருந்தால் என்ன பலன்!

17 January 2020 ஜோதிடம்
suriyabagavan.jpg

நவக்கிரகங்களின் நாயகனாக சூரிய பகவான் இருக்கின்றார். அவரை வைத்தே, ஜோதிடம் உருவானது. சிவபெருமானின் அம்சமாக இருக்கும் சூரியன், நாராயணராகவும் வழங்கப்பட்டு வருகின்றார். அவர் ஒருவருடைய ஜாதகத்தில் எந்தக் கட்டத்தில் இருந்தால், என்ன பலன்கள் ஏற்படும் என்பது பற்றிப் பார்ப்போம்.

லக்னத்தில் சூரிய பகவான் இருந்தால், கண்ணில் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஜாதகர் மிகத் திறமையாளராக இருப்பார். பித்த சம்பந்தமான பிரச்சனைகள் வரும். தலை பாரமாக இருக்கும். திருமண வாழ்வு சந்தோஷமாக இருக்கும். தலை வழுக்கை ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

இரண்டாம் வீட்டில் இருந்தால், குடும்பத்தில் ஜாதகரின் மதிப்பு அதிகமாகவே இருக்கும். இவருடையப் பேச்சுக்கு அனைத்து இடங்களிலும் மதிப்பு இருக்கும். ஆயுள் அதிகமாக இருக்கும். உடல்நிலை நன்றாக இருக்கும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும்.

மூன்றாம் வீட்டில் சூரியன் இருந்தால், ஜாதகர் பிறவியிலேயே நல்ல வீரம் உள்ளவராக இருப்பார். நல்ல செல்வ வளம் இருக்கும். தாயின் உடல்நிலைக் கெடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. தாய்க்கும் ஜாதகருக்கும் இடையில் மனஸ்தாபம் உண்டாகும். இளைய சகோதரர்கள் உங்கள் பேச்சினைக் கேட்டு நடப்பர்.

சூரியன் நான்காம் வீட்டில் இருக்கும் பொழுது, அரசாங்க உதவி கிடைக்கும். நல்ல சொத்துக்கள் சேரும். நல்ல நட்பு உண்டாகும். ஈடுபடும் முயற்சிகளில் வெற்றிகள் பெறுவர். தாயாரின் உடல்நிலை நன்றாக இருக்கும். அவருடன் இணைந்து வாழ்வர். அவருடையப் பேச்சினைக் கேட்டு நடக்கும் நபராக ஜாதகர் இருப்பார். தந்தையின் மூலம் பல நன்மைகள் நடைபெறும்.

சூரியன் ஐந்தாம் வீட்டில் இருந்தால், சிறப்பான அறிவாற்றலைத் தருவார். மலைப் பிரதேசங்கள் செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உண்டாகும். பண வசதி தாராளமாக இருக்கும். நல்ல ஆண் வாரிசு உண்டாகும். குழந்தைப் பிறப்பிற்குப் பிறகு, ஜாதகர் உயர ஆரம்பிப்பார். தொழில் மூலம் வரும் வருமானத்தின் அளவு நன்றாக இருக்கும்.

சூரியன் ஆறாம் வீட்டில் இருந்தால், பகைவர்களின் தொல்லைகள் இருந்தாலும், அவர்களை ஜாதகர் எளிதாக வென்று விடுவார். நல்ல தொழில் அமையும். செல்வம் குவியும். வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் வாழும் பாக்கியம் உண்டாகும். வயிற்றில் நல்ல உணவு செமிக்கும் சக்தி இருக்கும். நல்ல நிம்மதியான உறக்கம் உண்டாகும். கட்டில் சுகம் அதிகளவில் கிடைக்கும்.

சூரியன் ஏழாம் வீட்டில் இருந்தால், ஜாதகர் ஆண் என்றால் பெண் மூலமாகவும், பெண் என்றால் ஆண் மூலமாகவும் மனக் கஷ்டம் உண்டாகும். உடலில் காயங்கள் உண்டாகும். உடல் நலம் அடிக்கடி கெடும். திருமண வாழ்வில் கவலைகளைத் தரும்.

சூரியன் எட்டாம் இடத்தில் இருந்தால், கண் பார்வை மங்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆயுள் குறைவாகவே இருக்கும். செல்வம் அழியும். பெண்கள் மூலம் தீமைகள் உண்டாகும். உறவினர்களால் வெறுக்கப்படும் நபராக, ஜாதகர் இருப்பார். மனதில் இனம் புரியாத கவலை, பயம் இருக்கும். உடலின் மர்ம உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்படும்.

சூரியன் ஒன்பதாம் இடத்தில் இருந்தால், குழந்தை பாக்கியம் உண்டாகும். தந்தையுடன், ஜாதகர் மிகப் பாசமாக இருப்பார். நல்ல அறிவு உண்டாகும். வெற்றி, சொத்துக்கள் சேர்க்கை முதலியவை உண்டாகும்.

சூரியன் பத்தாம் இடத்தில் இருந்தால், நல்ல கல்வி அறிவு உண்டாகும். அரசாங்க உத்யோகம் கிடைக்கும். வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலைக்கு செல்வார். நல்ல உடல் வலிமை இருக்கும். பெரிய பணிகளை எளிதாக கையாளுவார். கௌரவம் தானாக உண்டாகும். இவர் இருக்கும் இடத்தில், இவருக்கு முதல் மரியாதை செய்யப்படும்.

சூரியன் 11ல் இருந்தால், செல்வ செழிப்பு உண்டாகும். மகிழ்ச்சியாகவே ஜாதகர் எப்பொழுதும் இருப்பார். உடல் வலிமை சிறப்பாக இருக்கும். பல்வேறு துறைகளில் இருந்தும், வருமானம் வந்து கொண்டே இருக்கும். அரசாங்க வேலைக் கிடைக்கும். வாழ்க்கைத் துணை, ஜாதகரைப் புரிந்து கொண்டு நடப்பர். மன வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கும். அரசாங்கத்தின் மூலம் ஆதயாம் உண்டாகும்.

சூரியன் 12ல் இருந்தால், வீண் விரயம், தொழிலில் வீழ்ச்சி முதலியவை உண்டாகும். முயற்சிகளில் தோல்வி, விரக்தியால் அவதி ஆகியவை ஏற்படும். கோயில்கள் மற்றும் புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்யும் பாக்கியம் உண்டாகும். உடல் மிகவும் உஷ்ணமாக இருக்கும். உடல் எப்பொழுதும், விழிப்புணர்வுடன் இருக்கும். புனித காரியங்களில் ஈடுபடுவர்.

இவை அனைத்தும் பொதுப் பலன்களே, சூரியன் நல்ல நிலைமையில் இருந்தால், இத்தகையப் பலன்கள் உண்டாகும். தீமை அளிக்கும் நிலையில் இருந்தால், மேற்கூரியதற்கு மாறானப் பலன்களே உண்டாகும். மேலும், சூரியன் பலம், மற்ற கிரகங்களின் சேர்க்கை, பார்வை முதலியவை மேற்கூரியப் பலன்களில் பாதிப்பினை ஏற்படுத்தும்.