ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வரலாறும் சிறப்புகளும்!

21 January 2020 கோவில்கள்
sriranganathar.jpg

மூலவர்-ரங்கநாதர்


உற்சவர்-நம்பெருமாள்


தாயார்-ரங்கநாயகி


தல விருட்சம்-புன்னை


இந்தியாவிலேயே மிகப் பெரிய ராஜ கோபுரத்தினை உடைய கோயில் என்றால், அது ஸ்ரீரங்கம் மட்டுமே. இந்தக் கோயிலானது, வைணவக் கோயில்களில் முதன்மையானது. கோயில் என்றால் திரு ஸ்ரீரங்கத்தினையேக் குறிக்கும். அந்த அளவிற்கு, வைணவர்களுக்கு இந்தக் கோயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தக் கோயிலினை பூலோக வைகுண்டம் என அழைப்பர்.

இந்த கோயிலே, மிகவும் பெரிய திருமால் கோயிலாகும். இந்தக் கோயிலில் உள்ள பெருமாளை பெரிய பெருமாள் என அழைக்கின்றனர். தாயாரை பெரிய தாயார், பெரிய பிராட்டியார் என அழைக்கின்றனர். இங்குள்ள கருடன் பார்ப்பதற்கு மிகப் பிரம்மாண்டமாக இருக்கும் என்பதால், இதனை பெரிய கருடன் என அழைப்பர். பெருமாளுக்கு செய்யப்படும் நைவேத்தியம் பெரியவசரம் என அழைக்கப்படுகின்றது. திருமதிலை பெரிய திருமதில் எனவும், கோபுரத்தினைப் பெரிய கோபுரம் எனவும் அழைக்கின்றனர். இந்தக் கோபுரத்தின் உயரம் சுமார் 236 அடி ஆகும்.

அந்த அளவிற்கு இக்கோயிலானது, மிகப் பெரியது. அரங்கம் என்றால் தீவு என்று பொருள். இந்தக் கோயிலினை மையமாக வைத்து இந்த தீவு உள்ளதால், திருவரங்கம், ஸ்ரீரங்கம் என அழைக்கப்படுகின்றது.

காவிரி நதியானது, விரஜா நதியின் அம்சமாகப் பார்க்கப்படுகின்றது. இந்தக் கோயிலில் 21 கோபுரங்களும், 7 சுற்றுக்களைக் கொண்ட பிராகரங்களும் உள்ளன. மேலும் இந்தக் கோயிலின் கருவறையின் கூரையானது, தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. இங்குள்ள கோயிலின் கருவரை விமானத்தில், நான்கு வேதங்களை உணர்த்தும் விதத்தில், நான்கு கலசங்கள் உள்ளன. இந்தக் கோயிலில் சந்திர புஷ்கரணி, சூர்ய புஷ்கரணி, வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவத்த தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆம்பர தீர்த்தம் என்ற தீர்த்தங்கள் உள்ளன.

இந்தக் கோயிலில் தான், கம்பர் தன்னுடைய இராமாயணத்தினை இயற்றினார். இதனை கௌரவிக்கும் பொருட்டு, கம்பருக்காக தனி மண்டபமே உள்ளது. இங்கு கம்பருக்கு, நரசிங்கம் பெருமாள் காட்சி கொடுத்துள்ளார் எனக் கூறுவர்.

srirangamvimanam.jpg

புராணம்

பாற்கடலில் துயல் கொண்டுள்ள திருமாலை, தினமும் பிரம்மன் வணங்கி வந்தான். அப்பொழுது ஒருமுறை, திருமாலின் காலினைக் கழுவும் பொழுது, பாற்கடலில் உள்ள நீர் குமிழியில் இருந்து, ஒரு சிலை வெளியே வந்துள்ளது.

அதனைப் பார்த்தப் பிரம்மன், திருமாலிடம் வேண்டி அதனைக் கொண்டு சென்று, சத்ய லோகத்தில் வைத்து பூஜை செய்து வந்துள்ளான். பின்னர், அந்த பெருமாளுக்கு பூஜை செய்ய, சூரியனை நியமித்தார் பிரம்மன். இராமன் சூரிய வம்சத்தில் பிறந்தவர் என்பதால், அந்த சிலையை சூரிய பகவான் இராமனுக்கு தந்தார். பின்னர் தினமும் பூஜை செய்து ரங்கநாதரை வணங்கி வந்தார்.

இராவணனை வதம் செய்த பின், மீண்டும் இலங்கைக்குச் சென்ற விபீஷணன் இராமனுடன் விடை பெற்றான். அப்பொழுது, இராமனிடம் வேண்டி அந்த ரங்கநாதரின் சிலையைப் பெற்றான். அதனை எடுத்துக் கொண்டு, தன்னுடையப் படையுடன் திருச்சி வழியாக இலங்கைக்குக் கிளம்பினான்.

வரும் வழியில், திருச்சியில் ஓய்வு எடுப்பதற்காக பெருமாளை தரையில் வைத்துள்ளான். அவ்வளவு தான். பெருமாளை எடுக்க இயலவில்லை. அப்பொழுது, விபீஷணனிடம் பேசிய பெருமாள், தான் இங்கேயே குடி கொள்ள விரும்புவதாகவும், உனக்காக தெற்கு நோக்கி பார்த்தபடி இருப்பேன் எனவும் கூறியுள்ளார். அதற்கு, விபீஷணனும் சம்மதம் தெரிவித்து இலங்கைக்குச் சென்று விட்டான்.

பெருமாள் இருக்கும் கோயிலுக்கு, முதலில் மண்ணால் ஆன கோயில் கட்டப்பட்டது. அந்தக் கோயிலினை தர்ம சோழன் கட்டியுள்ளான். நாளடைவில் இந்தக் கோயில் இடிய ஆரம்பித்ததும், மீண்டும் அந்தக் கோயிலினை புதிதாக, தர்ம சோழனின் வாரிசான கிள்ளி வளவன் எடுத்துக் கட்டினான்.

இங்குள்ள பெருமால் சுதையின் மூலம் உருவானவர். அதனால், அவருக்கு திருமஞ்சனம் செய்யப்படுவதில்லை. மாறாக, தைலக் காப்பு நிகழ்ச்சியானது நடைபெறுகின்றது.

இராமானுஜர்

sriramanujar.jpg

ஸ்ரீரங்கம் என்றால், இராமானுஜர். இராமானுஜர் என்றால் ஸ்ரீரங்கம் எனும் அளவிற்கு இந்தக் கோயிலையும், அவரையும் பிரிக்க இயலாது. இந்த ஸ்ரீரங்கம் கோயிலுக்காக அவர் செய்த தொண்டுகள் பல. அவர் இறந்த பின், அவரை இங்குள்ள இடத்திலேயே புதைத்தனர். ஆனால், அவருடைய உடல் அனைவரும் அதிசயக்கும் வகையில் வெளியில் வந்தது. அந்த உடலுக்கு பச்சைக் கற்பூரம் சாற்றி, தற்பொழுது தனியாக வழிபாட்டினை செய்து வருகின்றனர். இராமானுஜர் ஆதிசேசனின் அவதாரமாகப் பார்க்கப்படுகின்றார். அவர் 120 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாச்சியர்கள்

srirangam1.jpg

இந்தக் கோயிலில் தான், எங்கும் இல்லாதபடி அதிக நாச்சியார்கள் உள்ளனர். மொத்தம் ஏழு நாச்சியார்கள் இந்தக் கோயிலில் எழுந்தருளியுள்ளனர்.

ஸ்ரீதேவி
பூதேவி
துலுக்க நாச்சியார்
சேரகுலவல்லி நாச்சியார்
கமலவல்லி நாச்சியார்
கோதை நாச்சியார்
ரெங்கநாச்சியார்.

தாயார் சன்னதியில் பெரிய நாச்சியார் உற்சவ வடிவத்திலும், அவருக்குப் பின்னர் ஸ்ரீ தேவி சிலையாகவும், அவரைத் தொடர்ந்து பூதேவி சிலையாகவும் அமைந்துள்ளனர். இது போன்ற அமைப்பினை, நாம் வேறு எங்கும் பார்க்க இயலாது.

திருவிழாக்கள்

இந்தக் கோயிலில் மூன்று பிரம்மோற்சவங்கள் கொண்டாடப்படுகின்றன.

வசந்த உற்சவம்
சங்கராந்தி
பாரிவேட்டை
அத்யயன உற்சவம்
பவித்ர உற்சவம்
ஊஞ்சல் உற்சவம்
கோடை உற்சவம்

இவைகளைத் தவிர்த்து, இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியானது, மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள பெருமாள், ஏழு வாகனங்களில் எழுந்தருளுபவர். அந்த ஏழு வாகனங்களிலும் தை, மாசி, பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் அவர் எழுந்தருகின்றார்.

யானை- தை, மாசி, சித்திரை
கருடன்- தை, பங்குனி, சித்திரை
பல்லக்கு - தை, பங்குனி, சித்திரை
இரட்டை பிரபை - தை, மாசி, சித்திரை
சேசம் - தை, பங்குனி, சித்திரை
அனுமான்- தை, மாசி, சித்திரை
ஹம்சம் - தை, மாசி, சித்திரை

ஸ்ரீரங்கம் ஆலயத்தில் நம்பெரு மாளுக்கு வருடத்திற்கு ஏழு சேவைகள் நடைபெறுகின்றன.

பூச்சாண்டி சேவை
கற்பூர படியேற்ற சேவை
மோகினி அலங்காரம்,
ரத்னங்கி சேவை
வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாகனம்
ராமநவமி சேர்த்தி சேவை
தாயார் திருவடி சேவை
ஜாலி சாலி அலங்காரம்

நாலாயிரத் திவ்யப் பிரபந்த பாசுரங்கள்

இந்தக் கோயிலில் மொத்தம் 246 பாசுரங்கள் பாடப்பட்டுள்ளன. இதில், பெரியாழ்வார் 31, ஸ்ரீ ஆண்டாள் 10, குலசேகர ஆழ்வார் 31, திருமாழிசை ஆழ்வார் 14, தொண்டரடிப்பொடி ஆழ்வார் 55, திருப்பாணாழ்வார் 10, திருமங்கை ஆழ்வார் 72, பொய்கை ஆழ்வார் 1, பூதத்தாழ்வார் 4, பேயாழ்வார் 2, நம்மாழ்வார் 11 என தங்களுடைய பக்தியினைப் பாடல்களாக இயற்றியுள்ளனர்.

பெருமாளை வணங்குபவர்கள் ஆழ்வார்கள் என அழைக்கப்பட்டனர். பன்னிரு ஆழ்வார்களும், மொத்தம் 7 சன்னதிகளில் இருந்து அருள் வழங்குகின்றனர். பன்னிரு ஆழ்வார்களில், 11 பேர், இங்கு வந்து பெருமாளைப் போற்றி, தங்களுடையப் பாடல்களை பாடியுள்ளனர்.

பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகர் உளானே
ஊர் இலேன் காணி இல்லை
உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி!
காரொளி வண்ணனே என்
கண்ணனே கதறு கின்றேன்,
ஆருளர் களைக் கணம்மா
அரங்க மா நகர் உளானே
பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகர் உளானே
ஊர் இலேன் காணி இல்லை
உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி!
காரொளி வண்ணனே என்
கண்ணனே கதறு கின்றேன்,
ஆருளர் களைக் கணம்மா
அரங்க மா நகர் உளானே

ஸ்ரீரங்கம் ரங்கநாதரைப் போற்றும் விதத்தில், தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய பாடல் மிகவும் பிரசித்திப் பெற்றது.

இங்கு உள்ள பெருமாளை, பெரியாழ்வார் பின்வருமாறு போற்றுகின்றார்.

திருவுடையாள் மணவாளா! திருவரங்கத்தே கிடந்தாய்!
என்னுடைய திருவரங்கற்கு அன்றியும் மற்றொருவர்க்கு ஆளாவாரோ
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்தரவணைப் பள்ளியானே!
நமன்றமர்கள் வலிந்து நலிந்தென்னைப் பற்றும் போது அஞ்சலை யென்றன்னைக் காக்க வேண்டும் அரங்கத்தரவணைப் பள்ளியானே! என்னரங்கத்து இன்னமுதர் குழலகர், வாயழகர், கண்ணழகர், கொப்பூழில் எழு கமலப்பூ அழகர் எம்மானார்.
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்!
என்று பெரியாழ்வார் பாடிப் புகழ்ந்துள்ளார்.

குலசேகரனாழ்வார்

வன் பெருவானகம் உய்ய, அமரருய்ய, மண்ணுய்ய, மண்ணில் மணிசர் உய்ய, துண்பமிகு துயர் அகல

திருமழிசையாழ்வார்

கேட்பார்க்கு அரும் பொருளாய் நின்ற அரங்கனே உன்னை விரும்புவதே விள்ளேன் மனம்

தொண்டரடிப்பொடியாழ்வார்

நாட்டினான் தெய்வமெங்கும் நல்லதோரருள் தன்னாலே காட்டினான் திருவரங்கம் உய்யவர்க்கு உய்யும் வண்ணம்
மற்றுமோர் தெய்வமுண்டோ மதியிலா மாணிடர்கள்

திருப்பாணாழ்வார்

அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே

நம்மாழ்வார்

சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண் என்றே தளரும்

தொண்டரடிப்பொடியாழ்வார்

பள்ளியெழுச்சிப் பாடல்

கோயிலில் உள்ள சன்னதிகள்

வெள்ளி ஆண்டாள் சன்னதி
பெரியாழ்வார் சன்னதி
கண்ண பெருமான் சன்னதி
மணவாள மாமுனிகள் சன்னதி
ஆழ்வார்கள் சன்னதி
நாதமுனிகள் சன்னதி
ஆலவந்தார் சன்னதி
திருவரங்க பெருமாள்அரையார் சன்னதி
அமிர்த கலச கருடன் சன்னதி
தொண்டரடிப்பொடி ஆழ்வார் சன்னதி
சக்கரத்தாழ்வார் சன்னதி
ஸ்ரீரங்க நாச்சியார் சன்னதி
உள் ஆண்டாள் சன்னதி
மேட்டுக்குடி அழகிய சிங்கர் சன்னதி
வேதாந்த தேசிகர் சன்னதி
பெரிய கருடன் சன்னதி
நம்மாழ்வார் சன்னதி
தன்வந்த்ரி சன்னதி