ஸ்படிகம் மாலைப் பற்றித் தெரிந்து கொள்வோம்!

24 October 2019 ஜோதிடம்
crystals.jpg

பலரும் பலவித பொருட்களை, தங்களுடைய வளர்ச்சிக்காகவும், ராசிக்காகவும் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களுமே, நன்மைகளைத் தந்தாலும், தீமைகளைத் தராமல் இருக்காது. ஆனால், ஒரு சில பொருட்கள் மட்டுமே எவ்விதக் கெடுதலும் இல்லாமல், சுத்தமான விஷயங்களை நமக்குத் தருகின்றன.

அவைகளில் ஒன்று தான் இந்த ஸ்படிக மாலை. இந்த ஸ்படிக மாலையானது, மிகவும் புனிதமானதாகும். அதிக அளவில் ஒலி அதிர்வுகளை வெளிப்படுத்தக்க கூடியது. ஒரு சில ஆன்மீகவாதிகள் இந்த ஸ்படிக மாலை ஒரு மணி நேரத்திற்கு 21,600 முறை தன்னுடைய ஒலி அதிர்வலைகளை வெளிப்படுத்தும் தன்மைப் படைத்தது என நம்புகின்றனர். மனிதன் ஒரு நாளைக்கு 21,600 முறை சராசரியாக சுவாசிக்கின்றான்.

ஒவ்வொரு ஸ்படிக மாலையிலும், சுமார் 108 ஸ்படிக கற்கள் இருக்கும். பெரும்பாலும், வெள்ளி, செம்பு மற்றும் நூலில் கோற்கப்பட்ட ஸ்படிக கற்களே, ஸ்படிக மாலைகளாக விற்கப்படுகின்றன. இதனை 200 ரூபாய் முதல் 8,000 ரூபாய் வரையிலும் கடைகளில் விற்கின்றனர். இதனை எவ்வாறு அணிவது, இதன் பயன்கள் என்ன என்பதனைப் பார்ப்போம்.

ஸ்படிக மாலையை எவ்வாறு அணிவது?

சீரடியில் சுத்தமான ஸ்படிகம் கிடைக்கிறது. அங்கிருந்து வரும் ஸ்படிக மாலைகள் விலை மலிவாகவும், மிகத் தூய்மையாகவும், உயர்ந்த தரத்துடனும் இருக்கின்றன. இந்தியா முழுவதும் இந்த ஸ்படிக மாலையை நம்மால் வாங்க முடியும். தற்பொழுது, உலகளவில் இணைய தளங்களிலும் கிடைக்கின்றன.

தெருக்களில் உள்ளக் கடைகளை காட்டிலும், நகைக்கடைகள் மற்றும், அதற்கென உள்ளக் கடைகளில் வாங்கினால், தரமானதாகப் பெற முடியும். ஸ்படிக மாலைகளில் நிறங்களும் உண்டு. பச்சை, நீலம், சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஸ்படிக மாலைகளை வியாபாரம் செய்கின்றனர்.

கடையில் வாங்கும் ஸ்படிக மாலையை நேரடியாக, நாம் அணியக் கூடாது. முதலில் அதனை மாட்டின் சாணியில் ஒரு நாள் இரவு, மூழ்க வைத்துவிட வேண்டும். அவ்வாறு மூழ்க வைப்பதன் மூலம், அந்த ஸ்படிக மாலைக்கு உள்ள தோஷங்கள், அல்லது அதனைத் தொட்டவருக்கு உள்ள தோஷங்கள் மூலம், மாலைக்கு ஏற்பட்ட தீட்டுக்களும் தீரும். பின்னர், அதனைத் தூயப் பாலில் மாலையை மூழ்க வைத்துவிட வேண்டும்.

ஒரு நாள் இரவு முழுவதும் இவ்வாறு இருக்க வேண்டும். பின்னர் கோவில் தீர்த்தங்களை வீட்டில் வைத்து இருப்போம். அதனை எடுத்து, ஒரு டம்ளரில் ஊற்றி, அதில் இந்த ஸ்படிக மாலையை ஊற வைத்து விட வேண்டும். அப்பொழுது அந்த மாலைப் புனிதம் அடையும். அவ்வாறு புனிதமடைந்த மாலையை எடுத்து, அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, அங்குள்ள கோயில் குருக்களிடம் தந்து, அவர்கள் கையினால் அணிந்து கொள்வது பல விதத்திலும் நன்மை அளிக்கும்.

ஸ்படிக மாலையினால் ஏற்படும் பயன்கள்

ஸ்படிக மாலையானது ஒரு மணி நேரத்திற்கு 21,600 ஒலி அதிர்வு அலைகளை வெளியிடும் சக்திப் படைத்தது. அவ்வளவு சக்திப் படைத்த இந்த மாலையினை அணிந்து கொள்வதன் மூலம், நாம் பலவித நன்மைகளை அடைய இயலும். இந்த மாலையை அணிந்து கொண்டு, ஒரு முறை ஓம் என்றுக் கூறினால், அது 21,600 கூறியதற்குச் சமம். அதனால், நம்மால், நம் உடலில் உள்ள சக்கரங்களை வெகு எளிதாக சுத்தம் செய்ய இயலும். பின்னர், அதனை விழித்தெழ செய்யவும் இயலும்.

இந்த ஸ்படிக மாலையை கோவியிலுக்கு அணிந்து கொண்டு செல்வது பலவித அற்புதங்களை, நமக்கேத் தெரியாமல் நமக்கு வழங்கும். இந்த ஸ்படிக மாலைகள் மனதில் உள்ள கெட்ட எண்ணங்களை அகற்ற வல்லவை. அதனால், மனதில் கவலையோ அல்லது குழப்பங்களோ ஏற்பட்டால், அதனை இந்த ஸ்படிக மாலையினால் போக்க இயலும்.

அதே போல், உங்களிடம் நெருங்கும் கெட்ட எண்ணம் உள்ளவர்களை நெருங்க விடாது. கெட்ட எண்ணங்களையும் நெருங்க விடாது. கெட்ட எண்ணங்கள் உங்கள் மனதில் தோன்றவும் விடாது. இவ்வளவு ஏன், கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் சக்தி, இந்த ஸ்படிக மாலைக்கு உண்டு.

எப்பொழுது அணிய வேண்டும்?

ஸ்படிக மாலையை காலையில் குளித்து விட்டு தான், அணிய வேண்டும். அதே போல், தூங்குவதற்கு முன் கழற்றி வைத்துவிட வேண்டும். கழிவறைக்குச் செல்லும் பொழுது அணிந்து செல்லக் கூடாது.

இரவு தூங்கும் பொழுது, ஒரு டம்ளரில் நீர் ஊற்றி வைத்து, அதில் அந்த ஸ்படிக மாலையை ஊற வைத்துவிட வேண்டும். அப்படி ஊற வைத்த நீரினை ஆண்கள் காலையில் குளித்துவிட்டு, வெறும் வயிற்றில் குடிக்கும் பொழுது ஆண்மை அதிகரிக்கும்.

குழந்தைகள் அதனைக் குடிக்கும் பொழுது எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலில் குளிர்ச்சி நீடிக்கும். இதனால், உடல் உஷ்ணம் குறையும். மனதினை மிகவும் அமைதியாகவும், சாந்தமாகவும் வைக்க உதவும்.