சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை எப்படி செய்வது?

24 October 2019 சாஸ்திரங்கள்
ayudhapoojai.jpg

சரஸ்வதி பூஜைக்கு பூஜை அறையைக் கழுவி சுத்தம் செய்து, அலங்கரித்துக் கொள்ள வேண்டும். பூஜை அறையில், பூஜை மண்டபம் அமைப்பதற்கான இடம், மேடு பள்ளம் இல்லாமல் சமதளமாக இருக்க வேண்டும்.

அதை பசுஞ்சாணத்தால் மெழுகி, கோலமிட்டு செம்மண் இட வேண்டும். அந்த இடத்தின் நான்கு மூலைகளிலும், 16 முழம் உயரத்துடன் தூண்கள் நட்டு, தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். தூண்களில் அம்பாள் உருவம் உள்ள சிவப்புக் கொடி கட்டுவது சிறப்பு.

பூஜை இடத்தில், மையமாக நான்கு முழம் நீள அகலமும், ஒரு முழம் உயரமும் கொண்ட ஒரு பீடம் (மேடை) அமைக்க வேண்டும். சரஸ்வதி பூஜை அன்று, அதிகாலையில் எழுந்து நீராடி பூஜைக்குத் தயாராக வேண்டும்.

பூஜை மேடையில், வெண்பட்டு விரித்த ஆசனம் இட்டு, அதன் மீது அம்பாளின் திருவடிவம் அல்லது திருவுருவப் படத்தை வைத்து, மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அருகில், அம்பிகைக்கான கலச பூஜைக்காக கலசம் வைத்து அதில் நீர் நிரப்பி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றைப் போட்டு, மாவிலைகளை மேலே வைத்து, பூஜையைத் துவங்க வேண்டும்.

மகாநவமி திருநாளில், நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப் படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங் களையும் பூஜையில் வைத்து வழிபடுவது விசேஷம். அதன்படி, குழந்தைகளின் பாடப்பு த்தகங்களையே மேடையாக அடுக்கி, அதன் மீது அன்னையை எழுந்தருளச் செய்யும் வழக்கமும் உண்டு. சிலர், சரஸ்வதி தேவியின் திரு முன் புத்தகங்களை அடுக்கி வைப்பார்கள்.

இப்படி எல்லாம் தயார் செய்தபிறகு, பூஜை நல்லபடியாக நிறைவேறவும், பூஜையில் ஏதேனும் குற்றம் குறைகள் இருப்பினும் பொறுத்தருளும் படியும் மனதார மனதார வேண்டிக்கொண்டு, உரிய துதிப் பாடல்களைப் பாடி, வணங்கவேண்டும். பின்னர் முறைப்படி தூப, தீப ஆராதனைகளைச் செய்ய வேண்டும்.

நைவேத்தியமாக பழரசம், இளநீர், மாதுளை, வாழை, மா, பலா முதலானவற்றையும், சித்ரான்னங்கள் ஆகியவற்றைப் படைத்து வழிபடவேண்டும்.

மலைமகள் துதிப் பாடல்! மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னிக்
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றைவார் சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!
அலைமகள் துதிப் பாடல்! நீங்காது நின்மகனும் நீண்ட திருமாலும்
பாங்காக அன்றுவந்த பாற்கடல்போல் தேங்காமல்
நன்றாக நீயிருந்து நாளும் வளம் பெருக்கி
என்றைக்கும் நீங்காதிரு
கலைமகள் துதிப்பாடல்! மண்கொண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய் படைப்போன் முதலாய்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகலகலா வல்லியே!