சனிப் பெயர்ச்சி எப்பொழுது? உண்மை என்ன?

27 January 2020 ஜோதிடம்
sani.jpg

தற்பொழுது திருக்கணித முறைப்படி, ஜனவரி 24ம் தேதி அன்று, சனிப் பெயர்ச்சியானது நடைபெற்று உள்ளது. சனிபகவான், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைந்துள்ளார். ஆனால், அவ்வாறு சனி பகவான் அப்படி எதுவும் பெயர்ச்சி அடையவில்லை எனவும், டிசம்பர் மாதம் 23ம் தேதி அன்று தான் பெயர்ச்சி அடைகின்றார் எனவும், வாக்கியப் பஞ்சாங்கப்படி கருதுகின்றனர்.

மேலும், சனி பகவானுக்குப் புகழ் பெற்ற திருத்தலமான திருநல்லாறு திருத்தலத்தில் வருகின்ற டிசம்பர் மாதமே சனிப் பெயர்ச்சி நடைபெற உள்ளது எனவும் கூறியுள்ளனர். இதனையடுத்து, தற்பொழுது இந்து மதத்திலும், ஜோதிடத்திலும் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமல்ல, ஜோதிடர்களே குழம்பிப் போய் தான் இருக்கின்றனர்.

பல ஜோதிடர்கள், இன்னும் சனிப் பெயர்ச்சி நடைபெறவில்லை எனக் கூறி வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் மட்டும் தான், இந்த வாக்கியப் பஞ்சாங்கத்தினை நம்புவதாகவும், மற்ற மாநிலங்களில் எல்லாம் திருக்கணித முறையினையே நம்புகின்றனர் எனவும் கூறுகின்றனர்.

பெரும்பாலான ஜோதிடர்கள், சனிப் பெயர்ச்சி நடந்துவிட்டது எனவும், தற்பொழுது சனி பகவான் தனுசில் இல்லை, அவர் தன்னுடைய சொந்த வீடான மகரத்தில் தான் இருக்கின்றார் எனவும் கூறுகின்றனர். இதனால், பொதுமக்கள் பெரிய குழப்பத்தில் தான் இருக்கின்றார்கள் எனலாம். உண்மையில் கடந்த 25-10-2017ம் ஆண்டு தான் கடைசியாக சனிப் பெயர்ச்சி நடைபெற்றது.

ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியும் சுமார் இரண்டரை ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும். அதன்படி, பார்க்கையில், கிட்டத்தட்ட 900 நாட்களை இந்த சனி பகவான் ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்குப் பெயர்ச்சி அடைய எடுத்துக் கொள்கின்றார்.

ஆனால், திருக்கணித முறைப்படிப் பார்க்கையில் இது முற்றிலும் மாறுபடுகின்றது. திருக்கணித முறைப்படி ஒரு சில சமயங்களில் 1000 முதல் 1030 நாட்கள் வரையிலும் கூட அவர் இதற்கு முன் எடுத்துக் கொண்டுள்ளார். மேலும், இது குறைவாகவும் இருந்துள்ளது. இது பற்றி, காஞ்சி மகா பெரியவர் முன்னிலையில் ஒரு பெரிய விவாதமே நடைபெற்று உள்ளது. தமிழகத்தின் பெரிய ஜோதிடர்கள் அவர் முன் தங்களுடைய வாதங்களை எடுத்து வைத்தனர்.

அதில், மகா பெரியவோ திருக்கணித முறையே துல்லியமானது என்றுக் கூறிவிட்டார். அவரே கூறிவிட்டால் நிலையில், நாம் என்ன கூறுவது?