சாமுத்ரிகா லட்சணம்!

24 October 2019 ஜோதிடம்
eyes.jpg

சாமுத்ரிகா இலட்சணமானது, உடலில் உள்ள பாகங்களைப் பற்றியும், அதனை வைத்து நாம் நம் குணாதிசியத்தை அறிய உதவும் ஒரு சாஸ்திர முறையாகும். பொதுவாக, இதனை திருமணத்திற்கு முன் மணப்பெண்ணிடம் அதிகமாக எதிர்ப்பார்க்கின்றனர்.


தலை

இதுவே உடலின் முதல் பகுதியாகும். நமது உடலையும், உயிரையும் இயக்குவது நம் தலையே ஆகும். தலை சிறியதாக குருவி போன்று உள்ளவர்கள், சுறுசுறுப்பாகவும், அதிக முன்னெச்சரிக்கையாகவும் இருப்பர். பார்க்க அப்பாவியாக இருக்கும் இவர்கள், குடும்பத்தையே ஆட்டிப் படைப்பார்கள்.


தலை பந்து போன்று இருப்பவர்கள், பிடிவாத குணம் உடையவர்களாக இருப்பர். இவர்களை கட்டுப்படுத்த இயலாது. மேலும் முரட்டுத்தனமாக இருப்பர். ஆனாலும், சுகமான வாழ்க்கையை வாழ்வர். பெரிய தலை உள்ளவர்களுக்கு, சகிப்புத்தன்மை மிகக் குறைவு. இவர்கள் தங்கள் பாலினத்தை விட எதிர்பாலினத்திடம் அதிகமாகப் பழகுவர்.


தலைமுடி

ஒருவருடைய உடலின் வலிமையை அவருடைய முடியை வைத்து, நம்மால் எளிதாக அறிய இயலும். இயற்கை சூழ்நிலைகள் மற்றும் மரபணுவில் மாற்றம் காரணமாகவே, வழுக்கை மற்றும் முடி கொட்டுதல் ஏற்படுகிறது.


தலைமுடி சீராக இருந்தால், மனக் குழப்பம் மற்றும் சோர்வுடன் காணப்படுவர். இவர்கள் கலவரக்காரர்களாகவும் இருப்பதால், இவர்களால் குடும்பத்தில் அமைதி குறைவு ஏற்படும். சுருள்முடி உள்ளவர்களுக்கு, அனைவரிடம் இருந்தும் உதவி கிடைக்கும். பாசமானவர்களாக இருந்தாலும், சண்டை மூட்டுவதில் நாரதரை மிஞ்சியவர்களாக இவர்கள் இருப்பார்கள்.


தலை முடி கோரை முடியாகவும், அதே சமயம் சிக்கலுடன் இருந்தால், தீயவர்களால் கஷ்டப்படுவர். மந்திர, தந்திர செயல்களிலும் அதிக நாட்டம் இருக்கும். இவர்கள் மனது எப்பொழுதும், தீயதைப் பற்றி மட்டுமே, அதிகம் எண்ணும். தலைமுடி சீராகுவும், கீழ் நுனி சுருளுடனும் இருந்தால், வாழ்வில் ஏமாற்றம் அதிகமாக இருக்கும். திருப்தியற்ற, எதிர்பாராத வாழ்க்கையே அமையும். இவர்களுக்கு இயற்கையாகவே மன உறுதி அதிகம் இருக்கும்.


நெற்றி

நெற்றியைப் பெரும்பாலும் திலகமிட மட்டுமேப் பயன்படுத்துகிறோம். நீண்ட அகலமான நெற்றியை உடையவர்கள், கலை இரசிகராகவும், இலகிய மனதுடனும் இருப்பர். இவர்கள் தீர்க்கத்தரிசியாகவும் இருப்பர். நீண்ட மற்றும் குறுகலான நெற்றியை உடையவர்களிடம் திருட்டுத்தனம் அதிகம் காணப்படும். நன்றியுணர்வுக் குறைவாகக் காணப்படும்.


குறுகிய நெற்றி உடையவர்களால், சரியான முடிவை சரியான நேரத்தில் எடுக்க இயலாது. இவரை யாரும் வெறுக்கமாட்டார்கள். அதிக நண்பர்கள் இவர்களுக்கு இருப்பர்.


முகம்

பருத்த உருண்ட முகத்தை உடையவர்கள், இலகிய மனம் உடையவர்கள் மற்றும் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். இவர்கள் மரியாதையை அதிகம் எதிர்ப்பார்ப்பார்கள். நீண்ட முகம் உள்ளவர்கள், பிடிவாதக் குணமும், தனக்குத் தான் எல்லாம் தெரியும், என்று காட்டிக் கொள்ளும் சுபாவமும் உடையவர்கள். மற்றவர்களை எளிதாக ஏமாற்றிப் பிழைக்கத் தெரிந்தவர்கள்.


அகலமான, உருண்டையான முகத்தையுடையவர்கள், நேரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வர். தடைகளை வென்று சாதிக்கவல்லவர்கள். இவரை அனைவரும் எளிதில் ஏமாற்றிவிடலாம். சிறிய முகத்துடன் ஒட்டியக் கன்னங்களுடன் உள்ளவர்கள், மிகவும் சுறுசுறுப்பானவர்கள், சுயநலக்காரர்கள். இவர்கள் சஞ்சலமுடைய மனத்துடன் வாழ்வர்.


புருவம்

வில் போன்ற புருவமே சரியான அமைப்பாகும். வில் போன்ற புருவம் உள்ளவர்கள், மந்திர, தந்திர விஷயத்தில் ஈடுபட்டுக் காரியம் சாதிப்பர். இரண்டு புருவங்களும் ஒன்று சேர்ந்தாற்ப்போல் இருந்தால், மன அமைதி மற்றும் குடும்ப அமைதி குறைவாக இருக்கும்.


புருவம் அடர்த்தியக இருந்தால் விட்டுக்கொடுக்கும் குணம் இருக்கும். சாதாரணமாக, மிக அமைதியாக இவர்கள் காணப்பட்டாலும், கோபம் வந்தால் எரிமலையாக வெடிப்பர். அடர்த்தி குறைவாகவோ அல்லது நடுவில் சிறிய வெட்டுக்கள் இயற்கையாக ஏற்பட்டு இருந்தால், மன நிம்மதியற்று இருப்பர். பணத்தட்டுப்பாடு இருந்து கொண்டே இருக்கும்.


கண்

கண் வெண்மையாக இருப்பவர்கள், கலைகளை அதிகம் விரும்புவர். இனிமையான குணத்தையுடைய இவர்கள், தன்னுடைய சங்கடங்களை மறைத்து மகிழ்ச்சியை மட்டுமே தன்னுடன் இருப்பவர்களுக்கு வழங்குவர். சிவந்த நிறத்தில் கண்கள் இருந்தால், முன்கோபம் அதிகம் இருக்கும். தைரியமானவராகவும் மற்றும் பாசக்காரராகவும் இருப்பர். எனினும, இவர்களிடம் நரித்தனம் அதிகம் இருக்கும்.


பூனைக் கண் உடையவர்கள், நம்பிக்கையற்றவர்களாகப் பார்க்கப்படுகின்றனர். சிறிய கண் உள்ளவர்கள், எச்சரிக்கையுணர்வுடன் எதிரிகளை வைத்து விளையாடி மகிழ்வர். இவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது, மிக அவசியமானது.