புத பகவானின் ஆதிக்ககத்தில் பிறந்த, மிதுன ராசி அன்பர்களே! இந்த ராகு கேதுப் பெயர்ச்சியில், ராகு பகவான் உங்கள் ராசியிலேயே சஞ்சாரம் செய்கிறார்.
முதலில் மனதில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கவும். ராகு உங்கள் ராசியில் இருப்பதால், உங்களுடைய ஆசைகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யவும். உங்கள் மனைவி அல்லது கணவனுக்கு ஏற்றாற்போல் விட்டுக் கொடுத்துச் செல்லவும். அவர்களுடைய உடல்நலத்தில் அக்கறைத் தேவை. இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியின் காரணமாக, முகத்தில் ஒரு விதக் கவலை வெளியில் தெரிய ஆரம்பிக்கும்.
ராகுவின் பார்வையால், ஒருவித அசட்டுத்தனமான துணிச்சல் பிறக்கும். எதையும் பார்த்துக் கொள்ளலாம் என எண்ண ஆரம்பிப்பீர்கள்.
ராகு-கேது பெயர்ச்சியின் பொழுது செவ்வாய் பகவான் ஆட்சியில் இருக்கிறார். மேலும், ராகுவின் பார்வையின் காரணமாக, நிலம் சம்பந்தப்பட்ட தொழில்களான ரியல் எஸ்டேட், வீடு, மனை வாங்கி விற்றல், வாகன உற்பத்தி, விவசாயம் போன்றவை பல மடங்கு விருத்தி அடையும். அதே சமயம், அவைகளால் பிரச்சனைகள் வருவதற்கும் அதிக வாய்ப்புகள் உண்டு.
புதிய நகைகள் மற்றும் வாகனங்களை வாங்கும் பாக்கியம் ஒரு சிலருக்கு உண்டாகும். உங்களுடையக் காதல் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்ளவும். உங்களுடைய இளைய சகோதர, சகோதரிகளின் மூலம் ஆதாயம் ஏற்பட்டாலும், அவர்கள் மூலம் வம்பு வழக்குகள் வருவதற்கும் அதிக வாய்ப்புகள் உண்டு. எனவே, சற்றுக் கவனமுடன் இருக்கவும்.
கேது பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார். மேலும், அங்கு, சனி பகவானும் இருக்கின்றார். இதனால், உங்கள் கணவன் அல்லது மனைவியின் உடல்நிலையில் அக்கறைத் தேவை. கணவன், மனைவி உறவில் நம்பிக்கை வேண்டும். தேவையற்ற சந்தேகங்களைத் தவிர்க்கவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்க சற்றுத் தாமதம் ஆகலாம்.
ஆனாலும், வரும் அக்டோபர் மாதம் நடக்கும் குருப் பெயர்ச்சிக்குப் பின் அனைத்தும் சுபமாக மாறும். கேதுவின் பார்வையால், தந்தையுடன் அல்லது தந்தை வழி உறவினர்கள் மூலம் பிரச்சனைகள் வரலாம். நிலத்தின் மூலம் வருவாய் அதிகரிக்கும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு.
இளைஞர்களுக்கு சற்று சிரமமான காலம் என்று தான் கூற வேண்டும். அனைத்து முயற்ச்சிகளும் பல சோதனைகளைக் கடந்தப் பின்னரே வெற்றியில் முடியும். வாழ்க்கையின் மீது ஒரு வித வெறுப்புத் தோன்ற ஆரம்பிக்கும். தேவையற்ற மனக் கவலைகள், மனக் குழப்பங்கள் ஏற்படும். நண்பர்களை உங்கள் குடும்ப விஷயங்களில் தலையிட அனுமதிக்க வேண்டாம்.
கூடிய மட்டும் புதிய ஒப்பந்தங்கள் அல்லது புதிய சுப நிகழ்ச்சிகளை 2019ம் ஆண்டு அக்டோபர் வரை சற்றுத் தள்ளிப் போடுவது நல்லது. இல்லையென்றால், உங்கள் ஜாதகப்படி, ஒரு நல்ல நாளைப் பார்த்துத் தொடங்கவும்.
மற்றக் கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகியோர் நல்ல நிலைமையிலேயே இருக்கின்றனர். இதனால், பெரிய அளவிலான பாதிப்புகள் குறையும். ஒரு மிகப் பெரிய விஷயம் என்னவென்றால், ராகு பகவான் உங்களுடைய ஆசைகளை எப்படியாவது பூர்த்தி செய்து வைப்பதில் முதல் ஒன்பது மாதங்கள் உறுதுணையாக இருப்பார்.
ஆக மொத்தம் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி உங்கள் ராசிக்கு நூற்றுக்கு 77% நன்மைகளையேத் தர உள்ளது.
பல நன்மைகள் நடக்க தூமகேது விநாயகரை வணங்கி வரவும். அல்லது, காளஹஸ்தி சென்று வரவும்.