ராகு தசை எப்படி இருக்கும்? ஒரு பார்வை பார்ப்போம்!

24 October 2019 ஜோதிடம்
rahudhisai.jpg

அனைவரும் பொதுவாக பயப்படும் தசையாகவே, இந்த ராகு தசை உள்ளது. இந்த ராகு தசையில், கோடீஸ்வரர் ஆனவர்களும் உண்டு. தெருக் கோடியில் நின்றவர்களும் உண்டு. சூரியனை விட வலிமை வாய்ந்தவர் ராகு. இவருடைய இயற்பெயர் சுவர்பானு. விஷ்ணுவின் சுதர்சன சக்கரம் இவருடைய தலையை வெட்டியக் கதை நமக்குத் தெரியும். அவ்வாறு வெட்டப்பட்ட பின்னர், பரம்பொருளின் அனுக்கிரகத்தால், ராகு மற்றும் கேது என, நவக்கிரகங்களாக மாறினார். ராகுவை விட கேது மிக வலிமையானது.

ராகு தசை மொத்தம் 18 வருடங்கள் வரும். சற்று பெரியது என்றேக் கூறலாம். இந்த 18 வருடங்களில் கண்டிப்பாக, ஒரு பெரிய மாற்றத்தை யாராக இருந்தாலும் எதிர்ப்பார்க்கலாம். அது ராகுவின் வலிமையைப் பொறுத்த நல்ல விதமாகவோ அல்லது தீய விதமாகவோ இருக்கலாம். பொதுவாக ராகு பகவான் தான் எந்த வீட்டில் இருக்கின்றாரோ, அந்த வீட்டின் அதிபதியைப் போல செயல்படுவார். ஏனெனில், ராகுவுக்கு என சொந்த வீடு கிடையாது. அதனால், அவரால், தனித்து செயல் பட முடியாது. அவர் ஒரு சாயல் கிரகம் எனவே, ஜோதிட மூல நூல்களில் அழைக்கப்படுகிறார்.

விண்வெளியில் ராகு மற்றும் கேது ஆகியவைக் கிடையாது. அல்லது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதே சமயம், ஜோதிட நூல்களிலும் அதனைப் பற்றி பெரிய அளவில் தகவல்கள் இல்லை. ஆனால், ஸ்ரீ தேவி பாகவதத்தில், நாரதரிடம், ஸ்ரீமன் நாராயணன் இதனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, சூரியனுக்கு 16,000 யோசனை தூரத்திற்கு கீழ் ராகு மண்டலத்தை தான், நிலைநிறுத்தி இருப்பதாக விவரித்துள்ளார். ராகு பகவானைக் கரும்பாம்பு என அழைப்பர்.

ஆ,மேஷம்,எருது, சுறா, நண்டு, கன்னி ஆகிய வீடுகளில், ராகு பகவான் இருக்கும் பொழுது பல நன்மைகளை வாரி வழங்குவார். அதே போல், ஒரு ஜாதகத்தில் 3,6,10,11 என்று அழைக்கக் கூடிய இடங்களில் இருக்கும் பொழுது, ராகு பகவான் பல யோகங்களை வழங்குவார்.

ராகு பகவானை, சுக்கிரன், தனித்த புதன், வளர்பிறை சந்திரன் மற்றும் குரு பகவான் ஆகியோர் பார்க்கும் பொழுது, அதிக சுபத்தன்மையை அடைகிறார். அவ்வாறு சுபத்தன்மை அடைந்த ராகுவும், ராகு நின்ற வீட்டின் அதிபதியும் பலம் பெறும் பொழுது, ராகு பகவான் வெளிநாட்டவர், வெளி இனத்தவர், மூலம் பல நன்மைகளை வழங்குவார். கடினமாக உழைக்கும் வழிகளை காட்டாமல், மிக எளிதான வழிகளையோ அல்லது குறுக்கு வழிகளையோ காட்டி, அதில் நம்மைப் பயணிக்க வைப்பார். ஒருவருக்கு ராகு தசை இளமைக் காலங்களில் வரும் பொழுது, அவர் தனிமையை விரும்புவார். மதிய உறக்கம் தானாக வரும். நல்லது கெட்டது போன்ற விஷயங்களில், கலந்து கொள்ளமாட்டார். போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் வாய்ப்புகள் வரும். ஒரு சிலருக்கு, மரணத்திற்குச் சமமான கண்டங்களும் வரும்.

ராகு பகவானுக்கு உகந்த தானியம் உளுந்தம் பருப்பு ஆகும். உகந்த மலர் மந்தாரை மலர் ஆகும். ராகு பெண் கிரகமாக பல ஜோதிடக் கிரந்தங்களில் வருணிக்கப்படுகிறார். இவரும் கேது பகவானும் சங்கிரம ஜாதியைச் சேர்ந்தவர்கள். ராகு பகவான் நல்ல உயரமானவராக கருதப்படுகிறார். உடலில் சனி மற்றும் ராகு பகவான் ஆகியோர், தொடை, பாதம் மற்றும் கணுக்கால் ஆகியவைகளைக் குறிக்கின்றார். சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் இஸ்லாமிய மொழி மற்றும் வேற்று மொழிகளை ஆளுமை செய்கின்றனர். ராகு பகவானுக்கு உகந்த உலோகமாக கருங்கல் கருதப்படுகிறது.

ஒருவர் ராகு தசையில் செல்கின்றார் எனில், அவர் மேற்குரிய விஷயங்களை அவருக்குப் படைத்து வழிபாடு செய்வதன் மூலமும், அவருடைய ரத்தினக் கல்லான, கோமேதக கல்லை அணிவதன் மூலமும் ராகுவின் அருளினைப் பெற முடியும். ராகு பகவானுக்கு கருப்புடன் கூடிய சித்திரங்கள் உள்ள ஆடைகளைப் பயன்படுத்தலாம். ராகு தசை நடப்பவர்கள் இதனைப் பயன்படுத்திப் பாருங்கள். ராகு பகவானின் வாகனம் ஆடு ஆகும்.

அவருக்குரிய தூப தீபம் கடுகு ஆகும். ராகு பஞ்ச பூதங்களில், ஒரு ஆகாய கிரகம் ஆகும். ராகுவின் சுவை கைப்பு. உடலில் பித்த நாடியை குறிப்பவர் இவர். ராகுவின் திசை தென் மேற்கு. ராகு திசையில் பயணிப்பவர்கள், காளி, துர்க்கை அம்மன் மற்றும் கருமாரி அம்மனை வணங்குவதன் மூலம் ராகுவின் வீரியத்தைக் குறைக்க இயலும்.

ராகுவின் குணம் தாமஸக் குணம். இது ஒரு சரக் கிரகமாக கருதப்படுகிறது. ராகுவிற்கு ரிஷபம் ராசியானது, மூலத் திரிகோண வீடாகக் கருதப்படுகிறது. விருச்சிக ராசியானது ராகுவிற்கு உச்ச வீடாகவும் கருதப்படுகிறது. அதே சமயம், கன்னி வீடானது, ஆட்சி வீடாகக் கருதப்படுகிறது. ரிஷப ராசி நீச்ச ராசியாக கருதப்படுகிறது.

ராகு பகவான் லக்னத்திற்கு 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் மறைவு என எடுத்துக் கொள்ளலாம். ராகு பகவான் ஒரு சாயல் கிரகம் என்பதால், அதற்கு பார்வைப் பலன் இல்லை என்கின்றனர் ஒரு சில ஜோதிடர்கள். இல்லை, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் தான் இருக்கும் இடத்தில் இருந்து, 3,7,11 ஆகிய இடங்களைப் பார்க்கும் என ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

ராகு அசுப பலம் பெற்று இருந்தால், ராகு திசை நடக்கும் பொழுது எதிர்பாராத பிரச்சனைகள் எல்லாம் வரும். உடல்நலக் கோளாறுகள், தவறான பெண்களின் சேர்க்கைகள், கணவன் மற்றும் மனைவியிடையே கருத்து வேறுபாடு, அரசாங்க தண்டனை, பதுங்கி வாழ்தல், தற்கொலை, காதல் பிரிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். திருவாதிரை, சுவாதி மற்றும் சதயம் ஆகிய நட்சத்திரங்கள் ராகுவுக்குரிய நட்சத்திரங்கள் ஆகும்.

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராகு தசை முதலிலேயே வரும். அந்தக் காலக் கட்டத்தில், படிப்பில் கவனம் சிதறுதல், படிப்பில் நாட்டமின்மை, தாய் அல்லது தந்தையை இழத்தல் போன்றப் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும். கேது நட்த்திரங்களில் பிறந்தவர்களுக்கு 40 வயதை ஒட்டி இந்த திசை வரும். இது ஒரு சவாலான நேரம் என்று கூறலாம். குழந்தைகள் திருமணம், அவர்களுடைய எதிர்காலம், தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றவைகளைச் சந்திக்க நேரிடும்.

சூரியனின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம் மற்றும் உத்திராடம் போன்ற நட்சத்திரங்களுக்கு நான்காவது திசையாக ராகு திசை வரும். சூரியனுக்கும், ராகுவுக்கும் ஆகவே ஆகாது. மேலும், இந்த திசை வரும் காலத்தில், பொளாதார முன்னேற்றத்தில் தடை, சிக்கல்கள், உயிருக்கு ஆபத்தான கஷ்டங்கள், மருத்துவ செலவுகள், அரசாங்கப் பிரச்சனைகள் போன்றவைகளை இந்த நட்சத்திரக்காரர்கள் அனுபவிக்க வேண்டி வரும்.

சந்திரனின் நட்சத்திரங்களான திருவோணம், ஹஸ்தம் மற்றும் ரோகிணி ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு இளமைக் காலத்தில் இந்த திசை வரும். இது வாழ்க்கையில், எதுவுமே வேண்டாம் எனக் கூற வைக்கும் அளவுக்கு, அனுபவத்தைத் தந்துவிடும். பின்னர், வாழ்க்கையில் நடக்கும் எதற்கும் இவர்கள் வருந்துவதில்லை. அந்த அளவிற்கு இந்த திசை கடினமான ஒன்று தான்.

மிருசீரிஷம், சித்திரை மற்றும் அவிட்டம் போன்ற செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இரண்டாவது திசையாக ராகு திசை வரும். இதுவும் படிப்பில் தடை, போதை பொருட்களின் மீது நாட்டம், தவறான பெண்கள் சேர்க்கை, படிப்பினைக் கைவிடுதல், விளையாட்டுகளில் வெற்றி, போட்டிகளில் முன்னேற்றம், முன் கோபம், முரட்டுத்தனம் ஆகியவைகளை தாண்ட வேண்டி இருக்கும்.

குருவின் நட்சத்திரமான புணர்பூசம், விசாகம், பூரட்டாதி போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 100 வயதுக்கு மேல் ராகு திசை வரும். அப்பொழுது, வந்தால் என்ன, வராவிட்டால் என்ன?

அதே போல், சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம் மற்றும் உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களும், இந்த ராகு திசையை சந்திப்பதில்லை. புதனின் நட்சத்திரமான ஆயில்யம், கேட்டை மற்றும் சுவாதி போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, 60 வயதிற்கு மேல் இந்தத் திசை வரும். அப்பொழுது நரம்புத் தளர்ச்சி, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், உலகப் புகழ், திடீர் பண நஷ்டம், கடுமையான உடல் வலி, தீராத நோய் அல்லது பகை, அதிக கடன், அதிக பொருள் சேர்க்கை ஆகியவைகளை தந்துவிடுவார் ராகு பகவான்.

சுக்கிரனின் நட்சத்திரமான பரணி, பூரம் மற்றும் பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், 40 வயதிற்கு மேல் இந்தத் திசைக் காலங்களில் செல்வர். பெரும்பாலும், இந்த நட்சத்திரக்காரர்களுக்கு ராகு பகவான் கெடுதலை செய்யமாட்டார். பல நன்மைகளை ஒரு சில சோதனைகளுக்குப் பிறகு வாரி வழங்கவிடுவார்.

ராகு தசை-ராகு புத்தி!

இதன் கால அளவு 2 வருடம் 8 மாதம் 12 நாட்கள் ஆகும். இது ஒரு மோசமான காலம் என்று கூடக் கூறலாம். ராகு எவ்வளவு சுப பலம் பெற்றிருந்தாலும், தன்னுடைய காரகத்திற்கு உட்பட்டே செயல்படுவார். சுப பலம் பெற்றிருந்தால், வாகனங்கள், தொழிலில் வெற்றி, அரசு வேலை ஆகியவை கிடைக்கும். பாவ பலம் பெற்றிருந்தால், கருப்பு நிற மனிதர்களால் பிரச்சனைகள் வரலாம். அரசாங்கத்துடன் பிரச்சனை ஏற்படும். மனைவிக்கு நன்மை அளிக்காது. மனதில் கஷ்டங்கள் தேங்கும். இடம் விட்டு இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும். ஒரு சிலர் விஷம் குடிக்கும் வாய்ப்புகளும் ஏற்படும்.

ராகு தசை-குரு புத்தி!

இது சுமார் 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள் நடைபெறும். இந்தக் காலக்கட்டத்தில் குரு நல்ல பலமுடன் இருந்தால், நினைத்தக் காரியம் கை கூடும். நல்ல தன லாபம், வியாபார விருத்தி, அதிரடி திருப்பங்கள், அசுர வளர்ச்சி, பிராமணர்களுடன் நட்பு, வெளிநாட்டில் இருந்து பணம், திருமணம், குழந்தைப் பிறப்பு, போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். ராகு பாவ பலம் பெற்றிருந்தால், தொழிலில் விரயம், பணத்தை இழத்தல், காதல் தோல்வி, மனக் கஷ்டம், சொத்துக்களை இழத்தல், புத்திரர்களால் தொல்லை, அவமானம் ஏற்படல், தெரிந்தவர்களே நம்மை ஏமாற்றுதல் போன்றவைகள் நடைபெறும்.

ராகு தசை-சனி புத்தி!

இதன் காலம் 2 வருடம் 10 மாதம் 6 நாட்கள் ஆகும். இந்தக் காலக் கட்டத்தில் சனி பகவான் நல்ல நிலையில் இருந்தால், வாக்கு வன்மை அதிகரிக்கும். அடிமைகள் மூலம் திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். துணிந்து முடிவு எடுத்தல், வியாபார விருத்தி, ஆயுள் பலம், பெயர் மற்றும் புகழ் முதலானவை உண்டாகும். இதுவே சனி பாவ பலம் பெற்றிருந்தால், இதற்கு மாறான தீய பலன்களே ஏற்படும்.

ராகு தசை-புதன் புத்தி!

இதன் காலம் சுமார் 2 வருடம் 6 மாதம் 18 நாட்கள் ஆகும். இந்தக் காலத்தில் சாஸ்திரம் படித்தல், மந்திரம் படித்தல், பிராமணரிடம் சீடான சேருதல், மார்க்கெட்டிங் தொழிலில் மேன்மை, வங்கியில் வேலைக் கிடைத்தல், மனைவி மற்றும் குழந்தைகளால் மகிழ்ச்சி முதலியவை உண்டாகும். இதுவே புதன் பாவ பலத்துடன் இருந்தால், இதற்கு மாறாக, மேல் நிலையில் உள்ளவர்களுடன் மோதல் உண்டாகும்.

ராகு தசை-கேது புத்தி!

இதன் காலம் ஒரு வருடம் 18 நாட்கள் ஆகும். இதுவே, மிக மோசமான காலம் எனக் கூறலாம். ராகுவும், கேதுவும் எப்படி இருந்தாலும் கெடுதல்களையே இந்தக் காலக் கட்டத்தில் செய்யும். அரசாங்கத்தால் பிரச்சனைகள் ஏற்படும். இருக்கும் பொருட்களை இழக்கலாம். மனைவி மற்றும் குழந்தைகளிடம் பிரிவு முதலியப் பிரச்சனைகள் வரலாம். ஆன்மீகத்தில் அதீத ஈடுபாடு உண்டாகும். சிவ வழிபாட்டில் அதிக விருப்பம் உண்டாகும்.

ராகு தசை-சுக்கிர புத்தி!

இதன் காலம் 3 வருடங்கள் ஆகும். இது சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால், பெண்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். பொருள் சேர்க்கை, பண வரவு, உத்யோகத்தில் உயர்வு, தொழிலில் வளர்ச்சி, குழந்தைப் பிறத்தல், திருமணம் நடைபெறுதல், சுருக்கமாக கூறினால், அனைத்து சுப நிகழ்வுகளும், வளர்ச்சியும் உண்டாகும். சுக்கிரன் பாவ பலத்துடன் இருந்தாலும், மேற்கூரிய பலன்களில் பாதியாவது உண்டாகும்.

ராகு தசை-சூரிய புத்தி!

ராகுவுக்கும், சூரியனுக்கும் பகை உள்ளது. இதன் காலம் 10 மாதம் 24 நாட்கள் ஆகும். இந்தக் காலக்கட்டத்தில் சூரியன் நல்ல நிலையில் இருந்தால், அரசாங்கத்தால் பல நன்மைகள் நடைபெறும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உண்டாகும். பெயர், புகழ் உண்டாதல், உத்யோகத்தில் பதவி உயர்வு, மேல்தட்டு மக்களின் நட்பு உண்டாதல் முதலானவை கிடைக்கும். சூரியன் பாவ பலத்துடன் இருந்தால், அரசாங்கத்தின் மூலம் பிரச்சனை, சொத்துக்கள் அபகரிக்கப்படுதல், உறவுகளில் பகை, தந்தையின் உடல்நலம் பாதித்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

ராகு தசை-சந்திர புத்தி!

ராகுவுக்கும், சந்திரனுக்கும் பகை. இதன் காலம் சுமார் ஒரு வருடம் 6 மாதங்கள் ஆகும். இந்தக் காலக்கட்டத்தில், சந்திரன் நல்ல நிலையில், இருந்தால், குழந்தைப் பாக்கியம், திருமணம் உண்டாதல், வீடு வாங்குதல், திடீர் அதிர்ஷ்டம் ஏற்படுதல், அழகிய உடைகள், வாகனங்கள் வாங்குதல், கிரஹப் பிரவேசம் முதலானவை நடத்தல் போன்றவை ஏற்படும். இதுவே சந்திரன் பாவ பலத்துடன் இருந்தால், தாயின் உடல் நலம் பாதித்தல், ஈடுபடும் காரியங்களில் தடை, இருக்கும் சொத்துக்களை இழக்கும் வாய்ப்பு, மனைவியிடையே கருத்து வேறுபாடு, நீரினால் கண்டம் உண்டாதல், வெளிநாடு செல்லும் வாய்ப்பு பறிபோதல் போன்றவை உண்டாகும்.

ராகு தசை-செவ்வாய் புத்தி!

இதன் காலம் ஒரு வருடம் 18 நாட்கள் ஆகும். இந்தக் காலக் கட்டத்தில் செவ்வாய் பகவான் நல்ல நிலையில் இருந்தால், வீடு, மனை, வாகனம், விவசாய நிலம் போன்றவை உண்டாகும். அதிரடி வளர்ச்சி, அபரீத முயற்சி என, நினைக்க இயலாத அளவில் பெரும் செல்வம் சேரும். இதுவே செவ்வாய் பாவ பலத்துடன் இருந்தால், மேற்கூரியவைகளுக்கு மாறாக, சொத்துக்களை இழத்தல், இருக்கும் இடம் விட்டு, வேறு இடத்திற்கு செல்லுதல், உடலில் பிரச்சனை, நெருப்பினால் பிரச்சனைகள் உண்டாதல், காவல்துறையின் மூலம் சங்கடங்கள் உண்டாகும்.

ராகு பகவானுக்கு ஏற்ற சாந்தி பரிகார ஸ்தலமாக திருநாகேஷ்வரமும், காளஹஸ்தியும் உள்ளன. அங்கு உள்ள கடவுள்களை வணங்குவதன் மூலம், நன்மைகள் உண்டாகும். ராகு பகவான் கொடுத்துக் கெடுப்பார் என்ற பழமொழி உண்டு. அதற்கு அர்த்தம், முதலில் கொடுக்கும் ராகு பகவான், கடைசி மூன்று புத்திகளில் அவைகளை எடுக்கவும் செய்வார் என்பதே. ஆனால், நடைமுறையில் அது அனைவருக்கும் சாத்தியமில்லை. ராகு திசையின் முதல் ஒன்பது வருடங்கள் மிகவும் கஷ்டமானதாக இருக்கும். கடைசியிலேயே, ராகு பகவான் நன்மைகளைத் தருவார் எனும் ஜோதிட விதி உள்ளதால், ராகு திசையின் கடைசி புத்திகளில் நன்மைகளையே செய்வார்.