பழனி முருகனுக்கு இன்று காலையில், ஆகம விதிப்படி, அஷ்ட பந்தன மருந்து வைக்கப்பட்டது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயில், உலகப் பிரசித்திப் பெற்றது. இங்கு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையடுத்து, அங்கு அதற்கானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, ஆகம விதிப்படி ஒவ்வொரு கும்பாபிஷேகத்திற்கும், மூலவர் சிலைக்கு கீழே உள்ள அஷ்ட பந்தன மருந்தானது மாற்றப்பட வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு, இன்று காலையில், பழனி மலை முருகனுக்கு, அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது.
இன்று காலையில் வழக்கம் போல், 5.30 மணியளவில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, காலை 6.30 மணி முதல் காலை 10.30 மணி வரை கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அந்த நேரத்தில், பழனிமலை முருகனுக்கு அஷ்டபந்தன மருந்தானது சாற்றப்பட்டது. பின்னர், 10.30 மணிக்கு மேல், சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. அதன் பின்னர், பக்தர்கள் தற்பொழுது அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.