அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த 2020ம் ஆண்டு ஷஷ்டி திதியில், பூரட்டாதி நட்சத்திரத்தில், தனுசு லக்கனத்தில், புதன் கிழமை அன்று பிறக்கின்றது. இந்த ஆண்டு, சனிப் பெயர்ச்சி மற்றும் குருப் பெயர்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன. இவைகளால் உங்கள் ராசிக்கு ஏற்படும் பலன்களைப் பற்றியும், வழிபட வேண்டிய தெய்வங்களைப் பற்றியும் பார்ப்போம்.
துலாம் ராசிக்கு 2020ம் ஆண்டு பலவித நன்மைகள் நடைபெற உள்ளன. உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் குரு பகவான் ஆட்சியில் உள்ளார். அவருடன் கேது பகவான் இணைந்து இருக்கின்றார். இதனால், உங்களுடைய முயற்சிகளில் சிறு சிறுத் தடைகள் ஏற்படலாம். சென்ற ஆண்டினை காட்டிலும் இந்த ஆண்டு, நன்றாகவே இருக்கும். குரு பகவான் மூன்றாம் இடத்தில் ஆட்சியில் இருப்பதனால், சூழ்நிலைகள் சாதகமாக அமையும். மூத்த சகோதரர்களுக்கு இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்நீச்சலுக்கான காலம் என்றுக் கூட கூறலாம்.
கேது பகவான் மூன்றாம் இடத்தில் இருப்பதனால், இளைய சகோதரர்களின் உண்மை முகத்தினை நீங்கள் அறிய இயலும். குரு பகவானின் பார்வைப் பலனின் காரணமாக, திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு அழகிய வரன்கள் அமையும். ஒப்பந்ததாரர்களுடன் நல்ல சுமூகமான நிலை உண்டாகும். கணவன் மற்றும் மனைவியின் இடையே, நல்ல உறவு நிலை நீடிக்கும். பிரிந்து இருந்த தம்பதிகள் ஒன்று சேர்வர். வெளி உலகத் தொடர்பு சிறப்பைத் தரும்.
உங்கள் தந்தையின் உடல்நிலை சீராகும். அவர் மூலம் பல ஆதாயம் உண்டாகும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். குறிப்பாக, புதிய வாகனம், நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் வாங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. தொழில் மூலம் வரும் வருமானம் நன்றாக இருக்கும். வியாபாரம் சிறப்பாக நடக்கும். புதிய முதலீடுகளை செய்ய முயல்வீர்கள். தடைகள் ஏற்பட்டாலும், குருவின் பார்வைப் பலனால், உங்களுடைய முயற்சிகள் வெற்றி அடையும்.
இளைய தாரம் அதாவது இரண்டாவது மனைவியின் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். மூத்த சகோதரர்களுக்கு நல்ல உதவிகள் கிடைக்கும்.
ராகு பகவான், உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருக்கின்றார். இதுவரை, தடைகளையும், தடங்கல்களையும் கொடுத்து வந்த ராகு பகவான், தற்பொழுது குருவின் பார்வையில், யோக ராகுவாக இருக்கின்றார். இதனால், பல நற்பலன்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். தந்தை வழி உறவினர்கள் மூலம், திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். தந்தையின் சொத்துக்கள் உங்களுக்குக் கிடைக்கும்.
திருமணத்தினைப் பற்றியப் பேச்சுக்கள், உங்கள் காதுகளில் விழுந்து கொண்டே இருக்கும். 2020ம் ஆண்டில், ஒரு முறையாவது இராமேஷ்வரம் சென்று, லட்சுமி தீர்த்தத்தில் நீராடி வாருங்கள். அவ்வாறு செய்வது, பல யோகங்களை உங்களுக்கு வழங்கும்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு, நான்காம் இடத்திற்கு, ஜனவரி 24ம் தேதி அன்று பெயர்ச்சி அடைகின்றார். இதனால், உங்கள் தாயுடன் மனக் கசப்புகள் ஏற்படலாம். நிலம் சம்பந்தமான விஷயங்கள் மூலம், சிக்கல்கள் ஏற்படலாம். பழைய வீடுகளை வாங்கினால், அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தினைத் தரும். பழைய வாகனங்கள் ஆகியவைகளை வாங்கும் பாக்கியம் உண்டாகும். படிப்பில் கவனம் தேவை. சனி பகவான் உங்களுக்கு யோகத்தை வழங்குபவர்.
ஆதலால், அவர் உங்களுக்குப் பெரிய அளவில் தீங்குகளைத் தர மாட்டார். உங்கள் எதிரிகளை எளிதாக வென்றுவிடுவீர்கள். வேலைத் தேடி அலைந்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலைக் கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. வேலைப் பழு அதிகரிக்கும். கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கும். சூதாட்டத்தில் ஈடுபட வேண்டாம். குடிப்பழக்கம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, அதனைத் தவிர்ப்பது நல்லது.
கடினமாக உழைக்க வேண்டி வரலாம். இருப்பினும், கவலை வேண்டாம். உழைத்த உழைப்பிற்கேற்றப் பலன்கள் இந்த ஆண்டு கண்டிப்பாக கிடைக்கும். குருபகவான் அதிசாரமாக, மகரத்திற்கு சென்று, மீண்டும் தனுசு ராசிக்கு வருவார். இந்தக் காலக்கட்டங்களில், புதிய பொருட்கள் சேரும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கை கூடி வரும். பெரிய அளவிலான கடன்களை அடைப்பீர்கள். உடல்நிலை சீராகும். தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.
சுபச் செலவுகள் அதிகரிக்கும். வெளி இடங்களுக்கு பயணம் மேற்கொள்வீர்கள். நிம்மதியான உறக்கம் கிடைக்கும். பயணங்கள் மகிழ்ச்சித் தரும். மலையில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். இவ்வளவு நன்மைகளையும் இந்த 2020ம் ஆண்டு நீங்கள் அனுபவிக்க உள்ளீர்கள்.
ஆக மொத்தம் இந்த 2020ம் ஆண்டு, உங்கள் துலாம் ராசிக்கு நூற்றுக்கு 83% நன்மைகளே நடக்கும். மேலும் பல நன்மைகள் நடக்க, சொர்ண பைரவரையும், குபேரனையும் வணங்கவும். மறக்காமல், குல தெய்வ வழிபாட்டினை மேற்கொள்ளவும்.