புத்தாண்டு ராசி பலன்கள் 2020! மிதுனம்

24 October 2020 ராசிபலன்
mithunam.jpg

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த 2020ம் ஆண்டு ஷஷ்டி திதியில், பூரட்டாதி நட்சத்திரத்தில், தனுசு லக்கனத்தில், புதன் கிழமை அன்று பிறக்கின்றது. இந்த ஆண்டு, சனிப் பெயர்ச்சி மற்றும் குருப் பெயர்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன. இவைகளால் உங்கள் ராசிக்கு ஏற்படும் பலன்களைப் பற்றியும், வழிபட வேண்டிய தெய்வங்களைப் பற்றியும் பார்ப்போம்.

புத பகவானை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே! இந்த ஆண்டு உங்கள் ராசிக்குப் பலவிதமான நன்மைகள் நடக்க உள்ளது. அவைகளைப் பற்றிப் பார்ப்போம்.

உங்கள் ராசியிலேயே ராகு பகவான் ஆண்டு முழுவதும், சுப பலத்துடன் இருக்கின்றார். சென்ற 2019ம் ஆண்டு, பல நன்மைகளை உங்களை ஆரம்பித்து வைக்க உதவிய ராகுவால், அதில் பெரிய அளவில் வெற்றிகளை வழங்க இயலவில்லை. ஏனெனில், தொடர்ந்து அவர், சனி பகவானின் பார்வையில் இருந்தார். ஆனால், வருகின்ற ஜனவரி 24ம் தேதி அன்று, சனி பகவான் மகரத்திற்குப் பெயர்ச்சி அடைவதால், அவருடையப் பார்வையில் இருந்து ராகு பகவான் விலகுகின்றார். வெறும், குரு மற்றும் கேது பகவானின் பார்வையை மட்டும் பெறுகின்றார்.

இதனால், பல சுப காரியங்கள் உங்கள் வாழ்க்கையில் நடைபெறும் என்பதை உறுதியாக நீங்கள் நம்பலாம். சென்ற ஆண்டு ஆரம்பித்த விஷயத்தினை, இந்த ஆண்டு முழுமையாக முடிப்பீர்கள். குறிப்பாக, எவ்வாறு எளிதாக வேலைகளை முடிப்பது என்பதை தெளிவாகக் கற்றுக் கொள்வீர்கள். திடீர் அதிர்ஷ்டங்களை ராகு பகவான் உருவாக்குவார். எனவே, உங்களுடைய முயற்சிகளை நீங்கள் கைவிட வேண்டாம். ராகுவின் பார்வையால், தைரியம் அதிகரிக்கும். ஒரு வித அசட்டுத் தைரியத்தால், பல காரியங்களை மிக சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் மனைவியுடன் ஆன்மீக சுற்றுலாக்கள் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும்.

ஆன்மீகத்தில், அதிக ஈடுபாடு உள்ள நண்பர்கள் கிடைப்பார்கள். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு, நல்ல வருமானம் உள்ள வேலை கிடைக்கும். வேலையில் அதிரடி வளர்ச்சி உண்டாகும். இதுவரை, இரண்டு படி மூன்று படியாக உயர்ந்தவர்கள், இந்த ஆண்டு அதிரடியாக, பத்து படி, பன்னிரண்டு படி என தாவி செல்வர். தொழில் ஏற்படும் வளர்ச்சி அபரிதமாக இருக்கும். ஈடுபடும் செயல்களில் அப்படியொரு வெற்றி உண்டாகும்.

குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் கேது பகவானுடன் இணைந்து, ஆட்சியில் உள்ளார். குரு பகவான் உங்கள் ராசிக்கு 11ம் இடத்தினையும், உங்கள் ராசியினையும் மற்றும் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தினையும் பார்க்கின்றார். உடலில் வீரியம் அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். மூத்த சகோதரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். காவல்துறையில் இருப்பவர்கள் நல்ல வளர்ச்சி அடைவர். பெரிய இடத்து நட்பு உங்கள் ராசியினருக்கு இந்த ஆண்டு கிடைக்கும்.

படிப்பில் நல்ல வளர்ச்சி உண்டாகும். உங்கள் ஆசைகள் நிறைவேறும். மகிழ்ச்சிக்குப் பஞ்சம் இருக்காது. தோல்வி மனப்பான்மை விலகும். திடீர் யோகங்கள் மூலம், உங்கள் ராசியினர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உண்டு. திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு, அழகிய வரன்கள் அமையும். தொழிலில் சிறு சிறுத் தடைகள் ஏற்பட்டாலும், தோல்வி இருக்காது.

கடந்த 2019ம் ஆண்டினை காட்டிலும், இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல வரவாகவே உள்ளது. சனி பகவான் உங்கள் ராசிக்கு 8ம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகின்றார். இதுவரை, வெளிவட்டாரத்தின் மூலம், மனக் கஷ்டம் ஏற்பட்டு இருக்கலாம். திருமணத்திற்கான வரன் அமைந்தும், திருமணம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கலாம். அவை அனைத்துமே, 2020ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி நடைபெற உள்ள, சனிப் பெயர்ச்சியில் இருந்து மாறும்.

எட்டாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடையும் சனி பகவான், உங்கள் கடன் பிரச்சனைகளை உங்கள் கருத்திற்குக் கொண்டு வருவார். இதுவரை, அடைக்க முடியாமல் இருந்து வந்த கடன்களை நீங்கள் அடைப்பீர்கள். தீராத நோய்களும் தீர ஆரம்பிக்கும். மது மற்றும் சூதாட்டம் ஆகிய விஷயங்களில், நீங்கள் ஈடுபட வேண்டாம்.

சனி பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தினையும், இரண்டாம் இடத்தினையும் மற்றும் ஐந்தாம் இடத்தினையும் பார்க்க உள்ளார். இதனால், குடும்பத்திற்கான உழைக்க வேண்டி வரலாம். தொழிலில் சிறு சிறுத் தடங்கள் உருவாகலாம். கடினமாக உழைக்க வேண்டி வரலாம். கிடைக்கின்ற வேலையை விட்டு விட வேண்டாம். தற்பொழுது கிடைக்கும் வேலையானது, உங்கள் வாழ்க்கையின் அடுத்தப் பகுதியினை ஆரம்பித்து வைக்கும்.

பேசும் பொழுது எச்சரிக்கைத் தேவை. தேவையற்ற வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். உங்கள் பேச்சால், பிறர் எரிச்சல் அடையும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, சற்றுக் கவனமாக பேசவும். குழந்தைப் பிறப்புத் தாமதம் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், பயப்பட வேண்டாம். எல்லாம் நன்மைக்கே என எடுத்துக் கொள்ளவும். பொதுவாக, சனி பகவான் எட்டாம் இடத்தில் இருந்தால், புதிதாக எதையும் செய்யக் கூடாது என்பார்கள். ஆனால், அவர் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்திற்கு அதிபதி ஆவார். இதனால், அவர் உங்களுக்கு எவ்விதப் பெரிய அளவிலானத் தடைகளையும் தர மாட்டார். அதே போல், குரு பகவான், உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் ஆட்சி பெறுகின்றார். இது மாபெரும் சிறப்பாகும். கணவன் மற்றும் மனைவியிடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். இருவரும், ஒன்றாக இணைவர். அதே போல், ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ள நண்பர்கள் உங்களுக்கு அமைவர்.

ஆக மொத்தம் இந்த ஆண்டு, உங்கள் மிதுன ராசிக்கு நூற்றுக்கு 91% நன்மைகள் மட்டுமே நடக்கும். மேலும், பல நன்மைகள் நடக்க, துர்க்கையை வணங்கி வரவும். மதுரை மீனாட்சியை ஒரு முறை கோவிலுக்குச் சென்று வணங்கி வர, உயர்வுகள் ஏற்படும்.