புத்தாண்டு ராசி பலன்கள் 2020! மேஷம்

24 October 2020 ராசிபலன்
mesham.jpg

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த 2020ம் ஆண்டு ஷஷ்டி திதியில், பூரட்டாதி நட்சத்திரத்தில், தனுசு லக்கனத்தில், புதன் கிழமை அன்று பிறக்கின்றது. இந்த ஆண்டு, சனிப் பெயர்ச்சி மற்றும் குருப் பெயர்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன. இவைகளால் உங்கள் ராசிக்கு ஏற்படும் பலன்களைப் பற்றியும், வழிபட வேண்டிய தெய்வங்களைப் பற்றியும் பார்ப்போம்.

உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் குரு பகவான் இருக்கின்றார். மேலும், ஒன்பதாம் இடத்தில், சனி பகவான், கேது பகவான் ஆகியோர் இருக்கின்றனர். உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் ராகு பகவான் இருக்கின்றார். ஜனவரி 24ம் தேதி அன்று சனி பகவான் தனுசு ராசியில் இருந்து, அவருடைய சொந்த வீடான மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகின்றார். அது உங்கள் ராசிக்கு பத்தாம் இடமாகும்.

உங்கள் ராசியினை, குரு பகவான் தன்னுடைய ஐந்தாம் பார்வையாக, இந்த ஆண்டின் நவம்பர் வரை பார்க்க உள்ளார். இதனால், உங்கள் ராசிக்குப் பலவிதமான நன்மைகள் நடக்கும். உங்களுடைய ஆசைகள் நிறைவேறும். உங்களுடைய எண்ணங்கள் மற்றும் முயற்சிகள் அனைத்தும் கைகூடும். மேலும் அவர் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தினையும் பார்க்கின்றார். இதனால், இளைய சகோதரர்களுடன் இருந்து வரும் பிரச்சனைகள் வரும் ஜனவரி மாதத்திற்குப் பின் சீராகும்.

உங்கள் உடல் வலிமை அதிகரிக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உடலில் இருந்து வந்த நோய்கள் தீரும். எதையும் உங்களால் முழுமையான ஈடுபாட்டுடன் செய்ய இயலும். இறங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வருவாயை அதிகரிக்க என்ன செய்ய வேண்டுமோ அதனை நீங்கள் செய்யவீர்கள். உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடமான சிம்மத்தினையும், குரு பகவான் பார்க்கின்றார். இதனால், குழந்தை இல்லாத மேஷ ராசியினருக்கு இந்த ஆண்டு, அழகிய குழந்தைகள் பிறக்கும். தெய்வ கடாட்சம் அதிகரிக்கும். வசீகரம் உண்டாகும். குல தெய் அருளும், அவர்களுடைய ஆசிர்வாதமும் உண்டாகும்.

ராகு பகவான், உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் உள்ளார். அவர் இங்கு இருப்பதனால், இளைய சகோதர மற்றும் சகோதரிகளுடன் பிரச்சனை இருந்து வந்தது. வரும், சனிப் பெயர்ச்சிக்குப் பின், அவர்களுடன் மீண்டும் சுமூக உறவு உண்டாகும். ஈடுபடும் செயல்களில், திடீர் அதிர்ஷ்டம் அதிரடி வளர்ச்சி உள்ளிட்டவை உண்டாகும்.

சனி பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்திற்கும், 11ம் இடத்திற்கும் அதிபதி ஆவார். அவர், தற்பொழுது ஒன்பதாம் இடத்தில் உள்ளார். அவர் மேலும், ஜனவரி 24ம் தேதி அன்று தன்னுடைய முதல் வீடான மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார். அது உங்கள் ராசிக்குப் பத்தாம் இடமாகும். இதனால், உங்கள் தொழிலில் இருந்து வந்த தொய்வு நிலை சீராகும். அவருடைய இந்தப் பெயர்ச்சியின் காரணமாக, இது நாள் வரை தொழிலிலும், வாழ்விலும் இருந்து வந்த பிரச்சனைகள் ஒரு முடிவிற்கு வரும். கவலை தோய்ந்த உங்கள் முகத்தில், மறுமலர்ச்சி உண்டாகும். சனி பகவான் உங்கள் ராசிக்கு, பத்தாம் இடத்தில் இருந்து கொண்டு 12, 4 மற்றும் 7ம் இடங்களைப் பார்க்க உள்ளார். இதனால், உங்கள் உறக்கம் கெடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

உறக்கம் இன்றி, வேலை செய்யும் நிலை உருவாகும். ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழிலுக்காக செலவுகள் செய்ய வேண்டி வரலாம். தாயுடன் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. உயர் கல்வியில் சிறு சிறு தடைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. படிப்பவர்கள், சோம்பலின்றி இருப்பது நல்லது. மனைவி அல்லது உங்கள் கணவருடன் சற்று விட்டுக் கொடுத்துச் செல்லவும். அவருடன் தேவையற்ற வாக்கு வாதங்களைத் தவிர்க்க வேண்டும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் பொழுது, படித்துப் பார்த்து கையெழுத்திட வேண்டும். வேலை செய்யும் இடங்களில், தொழில் செய்யும் இடங்களில் கூட்டாளிகளுடன், குழுவாக வேலை செய்யும் பொழுது உங்கள் குழுவினருடன் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம். அவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள வேண்டும்.

மார்ச் 27ம் தேதி தொடங்கி ஜூலை எட்டாம் தேதி வரை, குரு பகவான் வக்ர கதியில் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகின்றார். அங்கு அவர், சனி பகவானுடன் இணைகின்றார். மகர ராசியானது குரு பகவானுக்கு, நீச்ச வீடாகும். அங்கு அவரால், சுதந்திரமாக நல்ல பலன்களைத் தர இயலாது. ஆனால், அவருக்கு இடம் கொடுக்கும், சனி பகவானும் அங்கேயே இருப்பதனால், குரு பகவான் நீச்ச பங்க ராஜயோகத்தினை வழங்குவார். இதனால், கடுமையாக உழைத்து வந்த நிலையில், இந்த 45 நாட்கள் மிக எளிதாக பொருள் ஈட்டுவீர்கள். தாயின் உடல்நிலை இந்தக் காலக் கட்டங்களில் சீராகும். கல்வி சிறப்படையும். அரியர்கள் க்ளீயர் ஆகும். பொன் மற்றும் பொருள் சேர்க்கை உண்டாகும். நல்ல வருமானம் அமையும். தொழிலுக்காக, கடன் வாங்க நினைத்தவர்களுக்கு வேண்டிய இடத்தில் கடன் கிடைக்கும். இருப்பினும், இந்தக் காலக் கட்டத்தில் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய் மாமன் மற்றும் அவர் தொடர்பான உறவுகள் மூலம், நன்மைகள் உண்டாகும்.

மீண்டும். ஜூலை 8ம் தேதி அன்று, குரு பகவான் தன்னுடைய ஆட்சி வீடான தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். பின்னர், மீண்டும் தன்னுடைப் பலன்களை வழக்கம் போல வழங்குவார். குரு பகவானுடன் தொடர்ந்து, கேது பகவானும் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருக்கின்றார். இதனால், ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உண்டாகும். தொடர்ந்து, கோவில்கள், தீர்த்த யாத்திரைகள், பூஜைகள் மற்றும் ஹோமங்கள் என, ஆன்மீகமாகவே மனம் செல்லும். அதன் மூலம் நல்ல பயனும் உங்களுக்கு உண்டாகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆக மொத்தம் இந்த 2020ம் ஆண்டு, உங்கள் மேஷ ராசிக்கு நூற்றுக்கு 85% நன்மைகளே நடக்கும். மேலும், பல நன்மைகள் நடக்க, சிவ வழிபாடு மேற்கொள்ளவும். மறக்காமல் குல தெய்வத்தினை வழிபடவும்.