புத்தாண்டு ராசி பலன்கள் 2020! மீனம்

24 October 2020 ராசிபலன்
meenam.jpg

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த 2020ம் ஆண்டு ஷஷ்டி திதியில், பூரட்டாதி நட்சத்திரத்தில், தனுசு லக்கனத்தில், புதன் கிழமை அன்று பிறக்கின்றது. இந்த ஆண்டு, சனிப் பெயர்ச்சி மற்றும் குருப் பெயர்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன. இவைகளால் உங்கள் ராசிக்கு ஏற்படும் பலன்களைப் பற்றியும், வழிபட வேண்டிய தெய்வங்களைப் பற்றியும் பார்ப்போம்.

குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீன ராசி அன்பர்களே! இந்த ஆண்டு உங்கள் ராசிக்குப் பலவித நன்மைகள் நடைபெற உள்ளன. அவைகளைப் பற்றிப் பார்ப்போம்.

உங்கள் ராசியதிபதியான குரு பகவான், உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில், கேது பகவானுடன் இணைந்து கேள யோகத்தினை உண்டு பண்ணி வருகின்றார். சனி பகவான் உங்கள் ராசிக்கு, 11ம் இடத்திற்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெயர்ச்சி அடைகின்றார். ராகு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சுப பலன்களை வழங்கும் நிலையில் இந்த ஆண்டு உள்ளார். இதனால், பல நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

குரு பகவான், உங்கள் ராசிக்கு அதிபதி ஆவார். அவர் இந்தி 2020ம் ஆண்டு தனுசு ராசியில் இருக்கின்றார். அவர் உங்கள் ராசிக்கு பத்தில் இருப்பது யோகமான அமைப்பு என்று தான் கூற வேண்டும். மேலும், குருவுடன் கேதுவும் இணைந்து இருக்கின்றார். இதனால், வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு, விரும்பிய வேலைக் கிடைக்கும். தொழிலில் நீங்கள் நினைத்த வெற்றிக் கிடைக்கும். உழைத்த உழைப்பிற்கேற்றப் பலன்களும் இந்த ஆண்டு கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. உத்தியோக மாற்றம், பணியிட மாற்றம், உத்தியோக உயர்வு ஆகியவை நீங்கள் விரும்பியவாறே அமையும்.

குரு பகவானின் பார்வையின் காரணமாக, குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பேச்சில் கணிவு உண்டாகும். வருமானம் நன்றாகவே இருக்கும். தாயின் மூலம் பல நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். கல்வியில் உயர்வு உண்டாகும். போட்டித் தேர்வுகளை எழுதி, அரசாங்க வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு, நல்ல அரசாங்க வேலை கிடைக்கும். புதிய வீடு, வாகனம், சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகளும் உண்டாகும்.

கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. தொழிலில் மாற்றங்கள் உண்டாகலாம். அவைகளை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளவும். தாய் மாமன் மற்றும் அவர் வழி உறவினர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். எதிரிகளை, அமைதியாக இருந்து கொண்டே வெல்வீர்கள். தொழிலில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.

ராகு பகவான், உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் இருக்கின்றார். இதுவரை, கல்வியில் தடை, தேர்வுகளில் தோல்வி, தாயுடன் வாக்குவாதம் முதலான வருத்தங்களைத் தந்தவர், குருவின் பார்வையைப் பெற்றுள்ளதால், இந்த ஆண்டு முழுக்க பல நன்மைகளை அள்ளித் தருவார். தாயின் மூலம் திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். இதனால், பெரும் மகிழ்ச்சியினை நீங்கள் அடைவீர்கள். தோல்வி மனப்பான்மை விலகும். வெற்றியினை நோக்கி மீன ராசி மாணவர்கள் நடப்பர். புதிய வீடு, நிலம், வாகனம், நகைகள் முதலானவை வாங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

சனி பகவான், உங்கள் ராசிக்கு 11ம் இடத்திற்கும், 12ம் இடத்திற்கும் அதிபதி ஆவார். அவர், தற்பொழுது 11ம் இடத்தில் ஆட்சி பெறுகின்றார். இது ஒரு நல்ல செய்தி என்றுக் கூறலாம். 11ம் இடத்தில் எந்த கிரகம் ஆட்சி பெற்றாலும், தன்னுடைய முழுமையான வலிமையை வெளிப்படுத்தும். இதனால், உங்கள் ராசிக்கு நல்ல வருமானம் உண்டாகும். தொழிலில் உயர்வு, சம்பள உயர்வு, பதவி உயர்வு முதலியவை உண்டாகும். மூத்த சகோதரர்களின் ஆதரவும் உண்டாகும்.

சனீஸ்வரன் உங்கள் ராசியினைப் பார்பதனால், புதிய முயற்சிகளில் ஈடுபடும் முன், உங்கள் சுய ஜாதகத்தினை சரி பார்த்துக் கொள்ளவும். பெரிய அளவில் ஆசைகளை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை அளிக்கும். குழந்தை பிறப்பு தாமதம் ஆகலாம். குல தெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்வது பல விதத்திலும் நன்மை அளிக்கும். பெரிய அளவில் இருந்து வருகின்ற கடன்களை அடைக்கும் வாய்ப்புகள் உண்டாகும். இரவு நேரப் பயணங்களைத் தவிர்த்தல் நல்லது. உடல்நலத்தில் அக்கறைத் தேவை.

இந்த ஆண்டின் மத்தியில், குரு பகவான் அதிசாரமாக, தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகின்றார். இதனால், குழந்தைப் பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு, அழகிய குழந்தைகள் பிறக்கும். தைரியம் அதிகரிக்கும். உடலில் சக்தி அதிகரிக்கும். ஈடுபடும் முயற்சிகளில், இந்தக் காலக்கட்டத்தில் சிறு சிறுத் தடைகள் ஏற்பட்டாலும், கண்டிப்பாக வெற்றி அடைவீர்கள். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு அழகிய திருமண வரன் அமையும்.

ஆக மொத்தம், இந்த ஆண்டு உங்கள் ராசிக்கு நூற்றுக்கு 88% நன்மைகள் மட்டுமே நடக்கும். மேலும், பல நன்மைகள் நடக்க, தெட்சிணாமூர்த்தியையும், பிரம்ம தேவரையும் வணங்கவும். மறக்காமல், குல தெய்வ வழிபாட்டினை மேற்கொள்ளவும்.