புத்தாண்டு ராசி பலன்கள் 2020! கடகம்

24 October 2020 ராசிபலன்
Kadagam.jpg

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த 2020ம் ஆண்டு ஷஷ்டி திதியில், பூரட்டாதி நட்சத்திரத்தில், தனுசு லக்கனத்தில், புதன் கிழமை அன்று பிறக்கின்றது. இந்த ஆண்டு, சனிப் பெயர்ச்சி மற்றும் குருப் பெயர்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன. இவைகளால் உங்கள் ராசிக்கு ஏற்படும் பலன்களைப் பற்றியும், வழிபட வேண்டிய தெய்வங்களைப் பற்றியும் பார்ப்போம்.

சந்திர பகவானை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே! இந்த ஆண்டு உங்களுக்குப் பலவித நன்மைகள் நடைபெற உள்ளன. சென்ற ஆண்டினைக் காட்டிலும், இந்த ஆண்டு உங்களுக்குச் சிறப்பாகவே இருக்க உள்ளது.

உங்கள் ராசிக்கு 12ம் இடத்தில், ராகு பகவான் இருக்கின்றார். மேலும், அவர் சுபத் தன்மையுடன் குருவின் பார்வையில் இருக்கின்றார். இதனால், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். நிம்மதி உறக்கம் கிடைப்பதில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். திருமணம் முதலான நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் மறையும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.

குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில், ஆட்சியில் இருக்கின்றார். அதுவும் கேது பகவானுடன் இணைந்து இருக்கின்றார். இதனால், எதிரிகளை எளிதாக வெல்வீர்கள். சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும், அவைகளால் பெரிய அளவில் பிரச்சனைகள் ஏற்படாது. தொடர்ந்து, ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வேலைத் தேடி அலைந்தவர்களுக்கு நல்ல வேலைக் கிடைக்கும். கோவிலுக்கு தொடர்ந்து சென்று கொண்டே இருப்பீர்கள். அலைந்து திரிந்து வேலைப் பார்த்து வரும் நீங்கள், வரும் சனிப் பெயர்ச்சிக்கு பின் அமைதியான வேலையைப் பார்க்க ஆரம்பிப்பீர்கள்.

வேலையில் பிரச்சனை, வேலையில்லாமல் பிரச்சனை, படித்தப் படிப்பிற்கு ஏற்ற வேலையில்லாமல் கடக ராசியினர் நீண்ட நாட்களாக, கஷ்டப்பட்டு வந்தனர். அந்தப் பிரச்சனைக்கான தீர்வு இந்த ஆண்டு கிடைக்கும். நல்ல சம்பளத்தில் கௌரவமான வேலை, நல்ல வளர்ச்சி ஆகியவை உண்டாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்லதொரு விற்பனை உண்டாகும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு, தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். உழைத்த உழைப்பிற்கேற்றப் பலன்கள் கிடைப்பதில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.

குரு பகவானின் ஏழாம் பார்வையானது, உங்கள் ராசிக்கு 12ம் இடத்தில் விழுகின்றது. இதனால், ஆன்லைன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். உள்ளூரைத் தவிர்த்து, வெளியூர் சென்று வேலைப் பார்த்தால் நல்லதொரு நிலைக்கு வரூவீர்கள். குரு பகவானின் ஒன்பதாம் பார்வையானது, உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தின் மீது விழுகின்றது. இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சிப் பிறக்கும். வருமானம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

சனி பகவான், ஜனவரி 24ம் தேதிக்குப் பிறகு, தனுசு ராசியில் இருந்து, மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகின்றார். சனி பகவான், உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்திற்கு அதிபதி ஆவார். அவர், ஏழாம் இடத்திற்கே பெயர்ச்சி அடைவது சிறப்பானது. இதனால், வெளியுலக தொடர்புகள் சிறப்படையும். கணவன் மற்றும் மனைவியிடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு, சற்று தாமதத்திற்குப் பின் அழகிய வரன்கள் அமையும். ஒப்பந்ததாரர்களுடன் சற்று விட்டுக் கொடுத்துச் செல்லவும். இதுவரை வெளிவராமல் இருந்து வந்த சில விஷயங்கள், உங்களுக்குத் தெரிய வரும்.

சனி பகவான் பார்வையின் காரணமாக, உங்கள் தந்தையின் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, அவருடன் கருத்து மோதல்களைத் தவிர்க்கவும். அவருடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சரியான மருத்துவ சிகிச்சைகளை அவருக்கு வழங்கவும். புதிதாக நீங்கள் எதையும் தொடங்க வேண்டாம். அவ்வாறு தொடங்க வேண்டி இருந்தால், உங்கள் சுய ஜாதகத்தினை ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளவும். செய்யும் செயல்களில் தடங்கள் வரலாம். தாயுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்குப் பதில், பழையதாக வாங்கினால் அதிர்ஷ்டங்கள் குவியும்.

பழைய இரு சக்கர வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். படிப்பில் மந்த நிலை உண்டாகும். எனவே, தேர்விற்குத் தயாராகும் மாணவர்கள் கவனமுடன் படிதத்தை எழுதிப் பார்க்கவும்.

ஆக மொத்தம் இந்த 2020ம் ஆண்டு உங்கள் ராசிக்கு, நூற்றுக்கு 82% நன்மைகளே நடக்கும். மேலும், பல நன்மைகள் நடக்க திருப்பரங்குன்றம் சென்று, ஒரு முறை சுப்பிரமண்யரை வணங்கி வரவும். தொடர்ந்து, சக்தி வழிபாடு இன்னல்களை நீக்கும். மறக்காமல், குல தெய்வ வழிபாட்டினை மேற்கொள்ளவும்.