மீனாட்சியின் காலில் உள்ள காலணி பற்றித் தெரியுமா?

24 October 2019 கோவில்கள்
meenakshishoe.jpg

உலகை ஆளும் மீனாட்சி அம்மனைப் பற்றித் தெரியாத தமிழர்கள் கிடையாது. அப்படிப்பட்ட அந்த அம்மனுக்கு பிரிட்டிஷ்காரர் ஒருவர் தன்னுடைய காணிக்கையாக, தங்கத்தால் ஆன காலணி செய்து கொடுத்த கதையை எத்தனைப் பேருக்குத் தெரியும்? அதனைப் பற்றிப் பார்ப்போம்.

மீனாட்சி அம்மன் தன்னுடைய பக்தர்களுக்கு அருள்பாலிப்பதில் இருந்து விலகுவதும் இல்லை, விட்டுக் கொடுப்பதும் இல்லை. மீனாட்சி மூன்று சக்திகளில் ஞான சக்தி ஆவார். அவரை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் பொழுது, பீட்டர் ரோஷ் என்ற ஆங்கிலேயே கலெக்ட்ர் வணங்கி வந்தார். அவர் வேற்று மதத்தவர் என்பதால், அவர் கோவிலுக்குள் செல்லாமல், வெளியில் இருந்தே வணங்கி வந்தார்.

அவர் ஒரு பெரிய வீட்டில் தங்கியிருந்தார். அவர் ஆட்சிக் காலமாக 18ம் நூற்றாண்டு நம்பப்படுகிறது. இந்நிலையில், அவருடைய வீட்டில், அப்பொழுது கற்காரை எனப்படும் செண்ட்ரிங் கிடையாது. ஓட்டினால், செய்யப்பட்ட வீடு அது, தினமும் அவர் காலையில் எழுந்ததும், மீனாட்சியம்மன் கோவிலுக்கு முன் நின்று கும்பிடுவார், வேலைக்குச் செல்வார், மீண்டும் வந்து கும்பிடுவார் வீட்டிற்குச் சென்றுவிடுவார். அவருக்கு மீனாட்சியைக் காண முடியவில்லையே என ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. இந்நிலையில், வீட்டில் இரவு நேரத்தில், தூங்கிக் கொண்டு இருந்தார் பீட்டர். அப்பொழுது, பெரிய இடியுடன் கூடிய மழைப் பெய்ய ஆரம்பித்தது.

அந்த மழையின் பொழுது பயங்கரமான மின்னல் மற்றும் இடியும் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. அப்பொழுது வீட்டின் வாசலின் முன், ஒரு சிறு பெண் குழந்தை பாவாடை மற்றும் சட்டையுடன் நின்று கொண்டிருந்தது. தூக்கக்களக்கத்தில் இருந்த, பீட்டர் கொஞ்சம் உற்றுப் பார்த்தார். பச்சை நிறப்பாவாடை மற்றும் சட்டையுடன் நின்று கொண்டிருந்த பெண் குழந்தை, நெற்றியில் திருநீற்றுப்பட்டை அணிந்திருந்தாள். அப்பெண் குழந்தை, பீட்டரை இங்கே வா, என அழைத்தது. இவரும் உடனே அந்தப் பெண் குழந்தையிடம் என்னம்மா என்று சென்று கேட்டுள்ளார். அப்பொழுது, அந்தப் பெண் குழந்தை, பீட்டரின் கையினைப் பிடித்துக் கொண்டு, வேகமாக நடந்து செல்ல ஆரம்பித்தது. இவருக்கு ஒன்றும் புரியவில்லை. இவர் ஏதாவது கேள்வி கேட்டால், அந்தக் குழந்தை சிரிக்கின்றது.

இதனால், அவர் முற்றிலும் குழம்பிவிட்டார். சிறிது தூரம் சென்றதும், அவருடைய வீட்டின் மீது இடி விழுந்தது, வீட்டின் கூரை முற்றிலும் சரிந்தது. இதனை அவர் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. அப்பொழுது கையினைப் பிடித்திருந்த குழந்தை கையினை விட்டுவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தது. நம்மைக் காப்பாற்றியுள்ள அந்தக் குழந்தை யார் எனத் தெரிந்து கொள்ள வேண்டும் என எண்ணி, அந்தக் குழந்தையின் பின்னாலேயே சென்றார். அந்தக் குழந்தை இரவு நேரத்திலும் தெளிவாக நடந்து கொண்டே இருந்தது. சரியாக மீனாட்சி அம்மனின் கோவில் வாசலுக்குச் சென்று, பீட்டரைப் பார்த்து சிரித்தது. பின்னர், கோவிலுக்குள் சென்று மறைந்தது. அவர் கண்கலங்கிவிட்டார். வந்து நின்று நம் மீனாட்சி என எண்ணி, ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

வந்திருந்த குழந்தையின் காலில், காலணி இல்லை. ஆனால், எப்பொழுதும் இவர் செருப்பு அணிந்த நிலையிலேயே கோவில் வாசலுக்குச் சென்று, மீனாட்சியை வணங்கி வந்தார். இதனால், மிகவும் வருத்தமடைந்த அவர், தன்னுடைய பணத்தில் இருந்து, மீனாட்சிக்கு தங்கக் காலணி செய்து கொடுத்தார்.

அன்று முதல், மீனாட்சி அம்மன் விக்ரகம் தங்கக் காலணி அணிந்தே நமக்குக் காட்சித் தருவார். அவ்வளவு பக்தி கொண்ட அந்த பீட்டர், தான் இறக்கும் பொழுது, என்னுடைய உடலை, மீனாட்சி அம்மனின் கோவிலை நோக்கியே அடக்கம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டார். அவ்வாறே அவர் இறந்த பின்னர், அவருடைய உடலும் செயின்ட். மேரிஸ் சர்ச் அருகில் உள்ள, கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

அந்த தங்கக் காலணிக்கு பீட்டர் ரோஷின் காணிக்கை என சொல்லிக் கொடுத்தார். அது நாளடைவில், ரோஷ் பாண்டியனின் காணிக்கை என மாறிவிட்டது. மீனாட்சி காட்சிக் கொடுத்ததால் அவர் பாண்டியனாக சிவாச்சாரியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டார். இது ஒரு செவி வழிக் கதை. எவ்வாறு இருப்பினும், உள்ளூர்காரர், அயல்நாட்டவர் வரை தன்னை வணங்கியவருக்கு அருளையும், ஆசியையும் அருளுவதில் மீனாட்சிக்கு நிகர் மீனாட்சி தான்!