மாளவ்ய மகா புருஷ யோகம் என்றால் என்ன?

10 May 2020 ஜோதிடம்
sukran.jpg

சுக்கிர பகவானில் ஏற்படுகின்ற முதல் தர ராஜயோகத்தினை, மாளவ்ய மகா புருஷ யோகம் என அழைப்பர். இந்த யோகத்தினை உருவாக்குபவர் சுக்கிர பகவான். நம் அனைவருக்குமே தெரியும். சுக்கிர பகவான் தான், அனைவருடைய வாழ்விலும், குதூகலத்தையும், சொகுசான வாழ்க்கையையும் வழங்குபவர். பார்ப்பவர் மனதை கிரங்க வைக்கின்ற அழகை வழங்குபவர். பெண்கள் மூலம் கிடைக்கின்ற சுகம், பெண்களால் இன்பம், பெண்களுடைய சொத்துக்கள், திருமணமான பின் செல்வ செழிப்பு உள்ளிட்ட அனைத்தும் இந்த யோகத்தில் ஏற்படக் கூடியவையே.

இந்த யோகத்தினையும் இரண்டு தரமாகப் பிரிக்க இயலும். முதல் தர யோகமானது, மாளவ்ய மகா புருஷ யோகம் எனவும், மற்றொன்று மாளவ்ய யோகம் எனவும் கூறப்படுகின்றது.

இந்த யோகத்தினை உடையவர்கள் இயல்பாகவே, அதிக அழகுடன் காணப்படுபவர்கள். கருப்பாக இருந்தாலும், கலையாக காட்சியளிப்பார்கள். ஒளி பொருந்திய கண்கள், பார்த்தவுடன் சொக்க வைக்கும் கன்னம், எடுப்பான உதடுகள், மெலிந்த இடுப்பு, சுமாரான உயரம் ஆகியவற்றுடன் காணப்படுவர். இவர்கள் மீது, அனைத்துப் பெண்களுக்குமே இயல்பாகவே ஒரு பிரியம் உண்டாகிவிடும். இவர்கள் எங்கு இருக்கின்றார்களோ, அங்குள்ள பெண்களுக்கு இவர்களை பிடிக்கும். ஆனால், இந்த யோகத்தினை உடையவர்கள், மிகவும் கூச்ச சுபாவத்தினை உடையவர்கள்.

சுமாரான உயரம், பௌர்ணமி சந்திரன் போன்ற ஒளி பொருந்திய முகம், மின்னும் பற்கள், ஆழமான குரல் என இவர்கள் அனைத்து விதத்திலும் அழகின் சொரூபமாக காட்சியளிப்பர். இதுவே பெண்கள் என்றால் சொல்லவா வேண்டும்? கருப்பாக இருந்தாலும் கட்டழகிகளாக அழகிகள் என்று பெயர் எடுப்பர். இந்த யோகத்தினை உடைய ஜாதகருக்கு, நல்ல ஆன்மீக அறிவு இருக்கும். பழைய ஆன்மீக நூல்கள், வேலதங்கள் உள்ளிட்டவைகளைப் படிக்கும் வாய்ப்புகள் அமையும். தன்னுடையக் கடினமான உழைப்பின் மூலமே, முன்னுக்கு வர இயலும். வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர ஆரம்பிக்கும். ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களுடன் நட்பு இருக்கும்.

அரசனுக்குச் சமமாக நடத்தப்படும் வாய்ப்புகளும் உண்டாகும். அதிர்ஷ்டகரமான, அழகான மனைவி அல்லது கணவன் அமைவார். அதிர்ஷ்டம் இவர்களுடன் எப்பொழுதும் இருக்கும். உலகின் அனைத்து சுகங்களையும் அனுபவிக்கப் பிறந்த ஜாதகர் என்றால், அவர் இந்த யோகத்தினை உடையவர்கள் தான். இந்த யோகம் வலுவாக இருக்கின்றப் பட்சத்தில், அழகான மனைவி இருந்தாலும், இரகசியமான கள்ள உறவுகள், இரண்டாம் தாரம் உள்ளிட்டவைகள் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளன.

இந்த யோகத்தினை உடைய ஜாதகர் நூறு ஆண்டுகள் உயிர் வாழ்வார் என, ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

மாளவ்ய யோகம்.

சுக்கிரன், கேந்திர, திரிகோணங்களில் ஆட்சி, உச்சம் பெற்று, சூரியன் அல்லது சந்திரனுடன் சேர்ந்திருந்தால், மகா புருஷ யோகம் பங்கமாகி, மாளவ்ய யோகமாக மாறிவிடும். இதனை உடையவர்களுக்கும், மேற்கூறப்பட்டுள்ள அனைத்தும் அமையும். ஆனால், சுக்கிரனின் தசா புத்திகளில் மட்டுமே கிடைக்கும்.