சங்கராந்தியின் பெயர் காரணமும்! அதன் மகிமையும்!

14 January 2020 சாஸ்திரம்
makarasankaranthi.jpg

தைப் பொங்கலுக்கு முந்தைய நாள் அன்று, மகர சங்கராந்தி கொண்டாடப்படுகின்றது. சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும், ஒரு ராசி மண்டலத்தில் இருந்து, அடுத்த ராசி மண்டத்திற்குப் பெயர்ச்சி அடைவார். அதனை நாம் தமிழ் மாதம் என்போம். அதனையே, வட மொழியில் சங்கராந்தி என்பர். தை மாதத்தின் பொழுது, சூரிய பகவான், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைவார். அதனால், அதனை மகர சங்கராந்தி என்கின்றோம்.

ஒவ்வொரு மாத சங்கராந்திக்கும், ஒவ்வொரு பெயரினை நம் முன்னோர்கள் வைத்துள்ளனர். ஒவ்வொன்றுக்கும் செய்ய வேண்டிய பூஜைகள், பரிகாரங்கள் முதலானவற்றையும் நம் முன்னோர்கள் உருவாக்கித் தந்துள்ளனர்.

தான்ய சங்கராந்தி

தென் இந்தியாவில், சித்திரை மாதத்தினை தான், வருடத்தின் முதல்நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை தான்ய சங்கராந்தி என்பர். இந்த சித்திரை மாதத்தில் சூரிய பகவான், மீன ராசியில் இருந்து, மேஷ ராசிக்குப் பெயர்ச்சி அடைவார். இந்த மாதம், சூரிய பகவானை வணங்கி, இயன்ற தானியங்களை தானம் செய்தால், சூரிய பகவான் மனம் மகிழ்ந்து, பல வரங்களை அளிப்பார்.

தாம்பூல சங்கராந்தி

சூரிய பகவான், மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்லும் பொழுது, வைகாசி மாதம் பிறக்கின்றது. இதனை தாம்பூல சங்கராந்தி என அழைக்கின்றனர். அந்த மாதத்தில் சூரிய பகவானை வணங்கி, ஒரு மண் பாத்திரத்தில் வெற்றிலை, பாக்கு, பழம் மற்றும் இயன்ற அளவிலான தட்சணைப் பொருட்களை வைத்து வயதான தம்பதிக்கு தானம் தர வேண்டும்.

மனோரத சங்கராந்தி

ரிஷப ராசியில் இருந்து, மிதுன ராசிக்கு சூரிய பகவான் பெயர்ச்சி அடையும் பொழுது, ஆனி மாதம் பிறக்கின்றது. இதனை மனோரத சங்கராந்தி என அழைப்பர்.இந்தக் காலக் கடத்தில் ஒரு நீர் குடத்தில், வெல்லத்தினை நிரப்பில், வேதங்களை அறிந்த பெரியோருக்கு உணவளித்து, பின்னர் அந்தக் குடத்தினை தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், உங்களுடைய நியாயமான மற்றும் நேர்மையான பலன்கள் உண்டாகும்.

அசோக சங்கராந்தி

சூரிய பகவான், மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சி அடையும் பொழுது ஆடி மாதம் பிறக்கும். அதனை அசோக சங்கராந்தி என்பர். அன்று, சூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்து வணங்க வேண்டும். அவ்வாறு செய்தால், பாவங்கள் நீங்கும். முன்னோர்கள் ஆசிர்வாதம் உண்டாகும்.

ரூப சங்கராந்தி

கடக ராசியில் இருந்து தன்னுடைய சொந்த ராசியான சிம்ம ராசிக்கு, சூரியன் பெயர்ச்சி அடையும் நாள், ஆவணி மாதம் பிறக்கின்றது. அதனை ரூப சங்கராந்தி என்பர். ஒரு பாத்திரத்தில் பசு நெய்யை நிரப்பி, சூரிய பகவானை வழிபட வேண்டும். பின்னர், அதனை தானம் அளிக்கும் பொழுது, நோய்கள் நீங்கும். பிணிகள் விலகும்.

தேஜ சங்கராந்தி

சூரிய பகவான், தன்னுடைய சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குப் பெயர்ச்சி அடையும் நாள் புரட்டாசி மாதம் பிறக்கின்றது. அதனை தேஜ சங்கராந்தி என்று அழைக்கின்றனர். அப்பொழுது, கலசத்தின் கீழ் நெல், அரிசி போன்ற தானியங்களை வைத்து, சூரிய பகவானை வணங்க வேண்டும். அவ்வாறு வணங்கினால், காரியத் தடைகள் விலகும்.

ஆயுர் சங்கராந்தி

சூரிய பகவான், கன்னி ராசியில் இருந்து நீச்ச வீடான துலாம் ராசிக்குப் பெயர்ச்சி அடையும் நாள், ஐப்பசி மாதம் பிறக்கின்றது. அதனை, ஆயுர் சங்கராந்தி என அழைப்பர். இந்த நாளில், ஒரு கும்பத்தில் பசும்பாலுடன் வெண்ணெய் சேர்த்து நிரப்பி, சூரிய பகவானை வணங்க வேண்டும். பின்னர், அதனை வேதியர்க்கு தானமாக வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.

சௌபாக்கிய சங்கராந்தி

கார்த்திகை மாதத்தின் பொழுது, சூரிய பகவான் துலாம் ராசியில் இருந்து, விருச்சிக ராசிக்கு வருவார். அதனை சௌபாக்கிய சங்கராந்தி என அழைப்பர். அப்பொழுது, சூரிய பகவானுக்கு சிவப்பு நிற துணி அணிவித்து, மஞ்சள், குங்குமம் முதலானப் பொருட்களை தானம் வழங்கி, சூரியனை வழிபட எண்ணிய எண்ணம் ஈடேறும்.

தனுர் சங்கராந்தி

தனுசு ராசிக்கு சூரியன் வருவதை மார்கழி மாதம் என்போம். அதனை, தனுர் சங்கராந்தி என அழைப்பர். அப்பொழுது, எளி எளியவருக்கு உணவளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், கிரக தோஷங்கள் குறையும்.

மகர சங்கராந்தி

தை மாதம் முதல் நாள் அன்று, பொங்கல் கொண்டாடப்படுகின்றது. அன்று, சூரிய பகவான் தனுசு ராசியில் இருந்து, மகர ராசிக்கு சூரிய பகவான் பெயர்ச்சி அடைகின்றார். இதனை மகர சங்கராந்தி என்பர். அன்று தேவர்களின் விடியற்காலை துவங்கும் என, வேதங்கள் கூறுகின்றன. அன்று இஷ்ட தெய்வத்தினையும், சூரிய பகவானையும் வணங்கினால், புண்ணியம், பதினாறு வகையான செல்வம் சேரும்.

லவண சங்கராந்தி

தை மாதம் முடிந்து மாசி மாதம் துவங்கும் நாள் அன்று, சூரிய பகவான் மகர ராசியில் இருந்து, கும்ப ராசிக்குப் பெயர்ச்சி அடைவார். அதனை லவண சங்கராந்தி என்பர். சூரிய பகவானை வணங்கி பின்னர், உப்பினை தானமாக அளிக்க வேண்டும். அவ்வாறு, செய்தால் மோட்சம் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

போக சங்கராந்தி

பங்குனி மாதத்தின் முதல் நாள் அன்று, சூரிய பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி அடைவார். அதனை, போக சங்கராந்தி என அழைப்பர். இம்மாதம் வருடத்தின் கடைசி மாதம் ஆகும். இதனால், இம்மாதத்தின் முதல் நாளும், கடைசி நாளும் சூரியனை வணங்க வேண்டும். அவ்வாறு வணங்கினால், தனதான்ய சம்பத்து விருத்தி ஆகும்.