மகா சிவராத்திரி விரமும், வழிபடும் முறையும்!

18 February 2020 சாஸ்திரம்
sivalingam1.jpg

விரதங்களில் மிகவும் சக்தி வாய்ந்த விரதமாக, இந்த சிவராத்திரி விரதம் உள்ளது. வைணவர்களுக்கு எப்படி வைகுண்ட ஏகாதசியோ அதே போல, சைவர்களுக்கு மகா சிவராத்திரி.

இந்த மகா சிவராத்திரி அன்று கண் விழித்து, சிவதரிசனம், சிவ ஆராதனை செய்தால், கைலாயத்தில் இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு மாசி மாதமும் தேய்பிறை, சதுர்த்தசி திதி அன்று, இந்த மகா சிவராத்திரி கொண்டாடப்படுகின்றது. இந்த விரதத்தினை இந்திராதி தேவர்களும், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்ட பரம்பொருளுமே விரதமிருந்து வணங்கி இருக்கின்றனர்.

வாழ்க்கையில் உள்ள எப்பேற்பட்ட தோஷத்தினையும், கஷ்டங்களையும் நீக்கும் சக்திப் படைத்தது இந்த மகா சிவராத்திரி விரதம். அன்று, ஒவ்வொரு சிவன் கோயிலிலும் நான்கு கால பூஜை நடைபெறும். பின்னர், கோயிலில் உள்ள மூலவருக்கு பூஜைகள் நடைபெறும்.

இந்த மகா சிவராத்திரி குறித்துப் பல கதைகள் உள்ளன. சிவ பெருமான், தேவ, அசுரர்களுக்காக பாற்கடலில் பரவிய விஷத்தினை அருந்திய நாளாகவும், தான் எப்பேற்பட்டவன் என்பதனை உணர்த்த, அளவிட முடியாத ஜோதியாக மாறி, பிரம்மாவிற்கு புத்திப் புகட்டிய நாளாகவும் இந்த மகா சிவராத்திரி கூறப்படுகின்றது.

தன்னை எப்பொழுது வணங்க வேண்டும் என, பார்வதிக்கு சிவபெருமான் இந்த நாளைத் தான் சிறப்பாக கூறியுள்ளார். அவ்வளவு சிறப்பான நாளாக இந்த மகா சிவராத்திரி உள்ளது.

விரதமுறை

இந்த நாளில் விரதமிருக்க நினைப்பவர்கள், காலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்து, குளித்தப் பின், கணபதியினை வணங்க வேண்டும். பின்னர், குல தெய்வத்தினை வணங்கி விரதத்தினை தொடங்க வேண்டும். இளைஞர்கள், ஆண்கள் போன்றோர் உணவு உண்ணாமல் விரதம் இருக்கலாம். கர்ப்பிணிகள் இந்த விரதம் இருக்க தேவையில்லை.

முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் ஒரு வேளை உணவினை எடுத்துக் கொள்ளலாம். அதுவும், தயிர் சாதம், வறுக்காத உணவுகள், சைவ உணவுகள், காய்கறி மற்றும் பழங்கள் முதலானவைகளை உணவாக எடுத்துக் கொள்ளலாம். பால் மற்றும் பழத்தினை மட்டும் உண்பது மிகவும் நல்லது.

விரதமிருப்பவர்கள், அன்றிரவு அருகில் உள்ள சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு சிவபெருமானுக்கு விஷேச பூஜைகள் நடைபெறும். பொதுவாக, நான்கு கால பூஜைகளும், அபிஷேகங்களும், அலங்காரங்களும் நடைபெறும். இந்த பூஜையில், முப்பத்து முக்கோடித் தேவர்களும் கலந்து கொண்டு, ஈசனை வணங்குவதாக ஐதீகம். நான்கு காலப் பூஜைகளிலும் கலந்து கொண்ட பின்னர், மறக்காமல், லிங்கோத்பவரை வணங்க வேண்டும்.

அதனையடுத்து, கோயிலில் உள்ள மூலவரையும் வணங்கிய பின் வீட்டிற்குத் திரும்ப வேண்டும். கோயிலில், அம்பாள் சன்னதி இருந்தால், கண்டிப்பாக அம்பாளையும் வணங்க வேண்டும். வீட்டிற்கு வந்ததும், விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து, குளித்து முடித்தப் பின், விரதத்தினை முடித்துக் கொள்ளலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம், நம்முடைய ஜாதகத்தில் உள்ள அனைத்துத் தோஷங்களின் பாவ பலன்களும் குறைய ஆரம்பிக்கும். ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், சிவராத்திரி பூஜையின் பொழுது, சிவ நாமத்தினைக் கூறிக் கொண்டே விழித்திருக்க வேண்டும். உறங்கக் கூடாது. அவ்வாறு, உறங்கினால் முழுப் பலன்களையும் அடைய இயலாமல் போய்விடும்.