சமூக இடைவெளியுடன் நடைபெற்ற மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!

04 May 2020 கோயில்கள்
meenakshi-sundareswarar.jpg

இன்று காலையில், மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமானது, சமூக இடைவெளியுடன் நடந்தது.

ஒவ்வொரு வருடமும், சித்திரை மாதம் வளர்பிறை துவாதசி திதியில், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமானது, கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டும், அதற்கானத் திட்டங்கள் தீட்டப்பட்டு இருந்தன. மீனாட்சி அம்மன் கோயிலில், இதற்கான கொடியேற்றமும் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும், மிக எளிமையான முறையில் உற்சவ நாட்கள் கொண்டாடப்பட்டன. இதில், கோயில் நிர்வாகிகள், அர்ச்சகர்களைத் தவிர, மற்றவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக, இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணம் ஆகம விதிகளின்படி, சம்பிரதாயத்திற்காக நடத்தப்பட்டது. இதனை, கோயிலுக்குள் சென்று பார்க்க இயலாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால், அந்த திருக்கல்யாண வீடியோவினை, இந்து சமய அறநிலையத்துறை, தன்னுடைய முகநூல் பக்கத்திலும், மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம், யூடியூப் வழியாகவும் நேரலையாக ஒளிபரப்பு செய்தது.

இதனைப் பலரும், தங்களுடைய வீட்டில் இருந்தே கண்டு களித்தனர். இந்த கல்யாணமானது, மிகவும் எளிமையாக நடத்தப்பட்டது. இதில், இரண்டு பட்டர்கள் மணமக்களாக நின்றனர். அவர்கள் அக்னியினை சுற்றி வந்து திருமணம் நடத்தினர். இரண்டு அர்ச்சகர்கள், யாக குண்டத்தில், ஹோமம் வளர்த்து பூஜைகள் செய்தனர். காலை 9.15 மணியளவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.