குலம் காக்கும் குல தெய்வம்! தொடர் வழிபாடு நன்மை வளங்கும்!

24 October 2019 சாஸ்திரம்
kuladeivam.jpg

தென்னிந்தியாவின் பெரும்பாலன மக்கள், குல தெய்வ வழிபாட்டினை மேற்கொள்கின்றனர். குல தெய்வத்தினை வணங்குவதால், வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகும் என்றும், மகிழ்ச்சிப் பெருகும் என்றும் நம்பிக்கை உள்ளது.

குல தெய்வத்தினை வருடத்தில் ஒரு முறையாவது, வணங்க வேண்டியது அவரவர் கடமை ஆகும். அவ்வாறு வணங்குவதன் மூலம், அந்த தெய்வத்தின் அருளை நம்மால் பெற இயலும்.

நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை, குல தெய்வம் செய்யும் என்னும் பழமொழி உண்டு. அந்த அளவிற்கு, குல தெய்வம் மிக வலிமை வாய்ந்தது. தொடர்ந்து நாம் வழிபட, வழிபட நம் வீட்டில் ஒருவராகவே அந்த தெய்வம் மாறிவிடும்.

யார் இந்தக் குல தெய்வம் என, பல சந்தேகங்கள் அனைவரிடத்திலும் உள்ளன. தன் குடும்பத்திற்காக, உயிரைத் துச்சமெனத் துரந்தவர்கள், பின் ஒரு சில காலம் கடந்து, அந்தக் குடும்பத்தின் குல தெய்வமாக மாறி, அந்தக் குடும்பத்தை காக்கின்றனர் என ஒரு சிலர் கூறுகின்றனர். இருப்பினும், இது எந்தளவு உண்மை என்பது யாருக்கும் தெரியாது.

பெரும்பாலான, குல தெய்வங்களின் கோவில்கள், மிகவும் சிறியதாக இருக்கும். உள்ளே இருக்கும் விக்ரகமும், பெரிய அளவில் பிரம்மாண்டமாக இருக்காது. தெய்வத்தின் விக்ரகமும் சாதாரணமாக இருக்கும். ஒரு சில குல தெய்வங்களுக்கு கோவிலே இருக்காது. மரத்தின் அடியில், குளத்தின் கரையில், புற்றின் ஓரத்தில் இருக்கும். பார்த்தால், கோவில் என்ற எண்ணமே வராது. ஆனால், அந்த தெய்வத்தைப் போல், காக்கவோ அல்லது அள்ளித் தரவோ வேறு யாராலும் முடியாது.

குல தெய்வங்களில், ஆண் தெய்வங்கள் மற்றும் பெண் தெய்வங்கள் என பிரிந்து உள்ளனர். இதில், ஆண் தெய்வங்களுக்குப் பெரும்பாலும், அசைவப் படையலைப் படைக்கின்றனர். அதே சமயம், பெண் தெய்வங்களுக்கு, சைவப் படையலை படைக்கின்றனர். ஒவ்வொரு குல தெய்வத்திற்கும், குறைந்தது ஒரு காவல் தெய்வம் இருக்கும்.

அதனை நாம் வழிபடுவதன் மூலம், அந்த தெய்வமும் நம் குடும்பத்தை காத்து நிற்கும். அப்படிப்பட்ட தெய்வத்தை, வெளிநாடுகளிலும், முன்னோர் வழிபாடு என வழிபட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட தெய்வங்கள், கிராமங்களிலும், இயற்கை எழில் சூழ்ந்த இடங்களிலும் இருக்கும்.

பெரும்பாலானோரால் இந்த தெய்வங்கள் வழிபடப்பட்டாலும், ஒரு சிலரால் வழிபட முடியாத சூழல் ஏற்படுகின்றது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், இஷ்ட தெய்வத்தையோ ஆஞ்சநேயரிடமோ குல தெய்வத்தைக் காட்ட வேண்டினால், உங்கள் குல தெய்வம் உங்கள் வீட்டில் உள்ள பெண்ணின் கனவில் தோன்றி, தான் எங்கு இருக்கிறேன் எனக் காட்டும். அப்பொழுதில் இருந்தே, நீங்கள் அந்த தெய்வத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடுவீர்கள். தொடர்ந்து, அந்த கோவிலுக்குச் சென்று வழிபட அனைத்துக் கஷ்டங்களும் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி மகிழ்ச்சி வளரும்.