கேது தசை எப்படி இருக்கும்? ஒரு விரிவான பார்வை!

10 May 2020 ஜோதிடம்
ketudasa.jpg

ராகுவைப் போல கேதுவும், ஒரு நிழல் கிரகம் ஆகும். இதனை, சாயல் கிரகம் என அழைப்பர். இது சிம்ஹிஹா எனும் அரக்கியின் மகனான, சுவர்பானு என்பனின், உடலாக ராகுவும் கேதுவும் உள்ளன என, வேதங்கள் கூறுகின்றன. தேவர்கள் அமிர்தம் பருகும் பொழுது, தேவர்களைப் போல மாறிக் கொண்ட சுவர்பானு, அமிர்தத்தைப் பருகிவிட்டான். அதனை சூரியனும், சந்திரனும் பார்த்துவிட்டனர். பிறகென்ன, சென்று மோகினி ரூபத்தில் இருந்து மகா விஷ்ணுவிடம் கூறிவிட்டனர்.

இதனால் கோபம் கொண்ட விஷ்ணு, தன்னுடைய சுதர்சனத்தை வீச, அது சுவர்பானுவின் தலையை வெட்டியது. பின், தலை மற்றும் உடல் என, இரண்டாகப் பிரிந்தது. அமிர்தம் உட்கொண்டதால், தலை மற்றும் உடல் என இரண்டுமே தனித் தனியாக உயிருடன் இருந்தது.

தலை மற்றும் உடல் ஆகிய இரண்டுமே, விஷ்ணுவினை நோக்கிக் கடும் செய்தனர். இருப்பினும், செய்த செயலுக்கானத் தண்டனையிலிருந்து யாரும் தப்ப முடியாது எனக் கூறிய விஷ்ணு பகவான், அந்த தலை மற்றும் உடலுக்கு நவக்கிரக அந்தஸ்து வழங்குவதாக வரம் கொடுத்தார். அன்று முதல் அவர்களும், நவக்கிரகங்களில் இணைந்தனர். இவர்களில், ராகு பகவான், மற்ற கிரகங்களை விட வலிமையானவர் என்றால், கேது பகவான் ராகுவினை விட, வலிமையானவர்.

ராகுவைப் போல் கேதுவுக்கும் சொந்த வீடு என்பது கிடையாது. தான் இருக்கும் இடத்தையே சொந்த வீடாக எடுத்துக் கொண்டு, அந்த வீட்டின் அதிபதியைப் போல செயல்படுவார். கேது பகாவன் ஆன்மீகத்தைக் குறிக்கும் கிரகம் ஆகும். ஞானிகள், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் மற்றும் தெய்வ வழிபாடுகளுக்கு நம்மை செல்ல வைப்பர். கேது பகவானின் அதி தெய்வமாக, விநாயகர் பெருமான் இருக்கின்றார். ராகுவைப் போல கொடுப்பவரும் இல்லை. கேதுவைப் போல கெடுப்பவரும் இல்லை என்ற பழமொழியைத் தெரியாதவர் இல்லை. அந்த அளவிற்கு இந்த இருவர்களும் சக்திப் படைத்தவர்களாக இருப்பதால், அதிக நுட்பமான அறிவு இவர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யத் தேவைப்படுகிறது.

கேது பகவான் இகலோக அதாவது, மனித வாழ்வுக்கான ஆசைகள், தேவைகள் மற்றும் நினைப்புகளுக்கு அப்பாற்ப்பட்டு, புகழ் உலக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் தர வல்லவர். அதனாலயே, இதனை கெடுப்பவர் என்பர். இருப்பினும், ஒருவருக்கு கேது கொடுத்தால் அதன் அளவை யாராலும் கணக்கிட முடியாது. ஆனால், பொதுவாக, நடைமுறை வாழ்க்கையில், லட்சத்தில் ஒருவக்கு கூட, கேது பகவான், இகலோக வாழ்க்கைக்குத் தேவையானவைகளைத் தருவதிலை. ஆனால், அவர் ஆன்மீக வாழ்க்கையில் தருவது நம் கற்பனைக்கு அப்பாற்ப்பட்டது என்றால், அது மிகையாகாது.

கேது ஒருவருக்கு நன்றாக இருந்தால், அவர்கள் கோவில்கள், புனித ஸ்தல்ங்கள், யாத்திரைகள் மற்றும் சித்தர் வழிபாடு ஆகியவைகளுக்குச் செல்வர். அது மட்டுமின்றி, புராணங்களைப் படித்தல், வேதங்களை ஆய்வு செய்தல் என, அடுத்த கட்டத்திற்கும் சென்று விடுவர்.

கேது பகவான் மூதாதையரில், பாட்டியைக் குறிப்பவர். அதே போல், தாய் வழி தாத்தாவிற்கும் அவரே அதிபதி. ஞானகாரகன் என சுருக்கமாக வர்ணிக்கலாம். திடீர் தற்கொலை, எதிர்ப்பாராத விபத்துக்கள், கூடாதப் பழக்க வழக்கங்கள், விரக்தியான மனநிலை, விபச்சாரம் உட்பட இழிவான செயல்களில் ஈடுபடுதல், சிறைத் தண்டனை, கொலை, திடுடன் என்ற பெயர், அழ வைக்கும் அனுபவம் என இவைகளுக்கு காரணமாக இருப்பவர்.

அதே சமயம், ஆன்மீகத்தின் உச்ச நிலையை தொட வைத்து, கருமங்களைக் கழிப்பதும் அவரே. விநாயகப் பெருமானை வணங்கும் பொழுது, கேதுவின் அருளைப் பெற இயலும். இந்தக் கிரகமும், ரிஷபத்தில் நீச்சமாகி, விருச்சிக ராசியில் உச்சமடைகின்றது. ராகு பகவான் தான் எங்கு இருக்கின்றாரோ, முதலில் அந்த இடத்தைக் கெடுத்து கதற வைத்துவிடுவார். பின்னர், அவர் ஒரு குறிப்பிட்டக் காலத்திற்குப் பின், சரியான தசை மற்றும் புத்தி வருகையில், மேலே கொண்டு சென்று வைத்து, அழகு பார்ப்பார். ஆனால், அது போல கேது பகவான் இருக்கும் இடத்தைப் பெறும்பாலும் கெடுப்பதில்லை.

கேது பகவான் செவ்வாய் பகவானைப் போல செயல்படுவார் என்ற கருத்து, பரவலாக ஜோதிடர்களால் கூறப்படுகின்றது. இருப்பினும், அது எந்த அளவிற்கு உண்மை என்பதை, ஒவ்வொருவர் ஜாதகத்தைப் பொறுத்தேக் கூற முடியும். மற்றக் கிரகங்களின் காலத்தை விட, கேதுவிடன் காலம் மிகக் குறைவு. வெறும் 7 வருடங்களை தசா காலமாகக் கொண்டிருந்தாலும், எப்படிப்பட்ட யோக ஜாதகமாக இருந்தாலும், அந்தக் கேதுவின் தசையைத் தாண்டுவதென்பது பெரிய விஷயமாகவேப் பார்க்கப்படுகின்றது.

ராகு பகவானும், கேது பகவானும் ரிஷபத்தில் நீச்சம் அடைவர் என, ஜோதிட கிரந்தங்கள் கூறுகின்றன. அதேபோல், கேது பகவானும், ராகு பகவானும், விருச்சிகத்தில் உச்சம் அடைகின்றன எனவும் கூறப்பட்டு உள்ளன. இதில், முன்னுக்கு பின் முரணான கருத்துக்களும் உள்ளன. நாம் கேது ரிஷபத்தில் நீச்சம் அடைவதாக எடுத்துக் கொள்வோம். ஏன் எனில், உலகில் உள்ள 60%க்கிற்கும் அதிகமான ஜோதிடர்கள், அவ்வாறு தான் எடுத்துக் கொண்டுள்ளனர். அது மட்டுமின்றி, இந்த கிரகம் ரிஷபத்தில் நீச்சம் என வைத்துக் கொண்டு பலன் கூறினால், அதுவும் சரியாகத் தான் வருகின்றன.

ராகுவினைப் போல கேதுவும் ஒரு வக்ர கிரகம் ஆகும். அதாவது, எதிர் திசைகளில் சுழலக் கூடியது. கேதுவின் மகா தசை காலம் ஏழு ஆண்டுகள். இந்த ஏழு ஆண்டுகளைத் தாண்டுவது என்பது, ஏழு யுகத்தினைத் தாண்டுவது போல இருக்கும். இருப்பினும் இறைவனின் துணை இருந்தால், எதையும் சாதிக்க இயலும் என்பதை யாரும் மறக்க வேண்டாம். கேது 3,6,10,11 ஆகிய இடங்களில் இருந்தால், ஓரளவிற்கு நன்மைகளை வழங்குவார். ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய இடங்களில் இருந்தாலும், ஓரளவிற்கு நன்மைகளை வழங்குவார்.

கேது பகவான் தன்னுடைய தசையில் மட்டுமல்ல, மற்ற தசைகளில் வரும் தன்னுடைய புத்திகளிலும் கொடுமையாகத் தான் நடந்து கொள்கின்றார். அதிலும், ராகு தசையில் வருகின்ற கேது புத்தி என்றால், சொல்லவே வேண்டாம். ஏன்டா உயிருடன் இருக்கின்றோம் என, நம்மைக் கதறவைத்து விடுவார். ஒவ்வொரு மனிதருக்கும் கேது பகவான் மிகவும் முக்கியமானவர். ஏனென்றால், கேது நாம் எதனை அனுபவிக்கக் கூடாது. எதனை எல்லாம், முன் ஜென்மத்தில் அனுபவித்து முடித்துவிட்டோம் எனக் கூறுபவர். கேது பகவானின் இயல்பு என்றால், சுருக்குவது. ராகு பகவான் விரிவடையச் செய்பவர்.

ராகு பகவான் விண்வெளி என்றால், கேது பகவான் அணு. அணுவினை உள்ளே தான் ஆராய்ச்சி செய்ய இயலும். விண்வெளியினை வெளியில் தான் ஆராய்ச்சி செய்ய இயலும். விண்வெளியினை அளவிட முடியாது. அணுவினை அளந்துவிட முடியும். கேது பகவானுக்கு உரிய கோயிலாக நாகப்பட்டினம் மாவட்டதில் அமைந்துள்ள நாகநாதர் திருக்கோயில் உள்ளது. அங்குள்ள மூலவர் நாகநாதர் என்றப் பெயரிலும், உற்சவர் சோமாஸ்கந்தர் என்றப் பெயரிலும் அழைக்கப்படுகின்றனர். அம்மன் சவுந்தர்ய நாயகி ஆவார்.

இந்தத் தலத்தின் விருட்சமாக, மூங்கில் உள்ளது. இந்தக் கோயிலைத் தவிர்த்து, திருப்பதிக்கு அருகில் உள்ள காளஹஸ்திக்கும் சென்று, கேது வழிபாட்டினை நாம் மேற்கொள்ளலாம். ஓரையில் கேது பகவானுக்கும், ராகு பகவானுக்கும் இடமில்லை. ஆனால், ராகு காலம் என்பது தினமும் வரக் கூடியது. அது ராகு பகவானுக்கு உரியது. அதே போல், எமகண்டம் என்பது கேது பகவானுக்கு உரியதாக கருதப்படுகின்றது.

கேது பகவான் சனியின் வீடுகளான மகரம் மற்றும் கும்பம் ஆகியவற்றில் இருந்தால், கண்டிப்பாக ஓரளவு நன்மைகளை வாரி வழங்கி விடுவார். அதே போல், விருச்சிகத்தில் இருந்தாலும் நல்ல பலன்களை வழங்குவார். சனியும், கேதுவும் ஒன்றாக இருந்தால், குறிப்பிட்ட காலம் வரும் பொழுது, அந்த ஜாதகர் நாடாளும் யோகத்தினைப் பெறுகின்றார். மற்ற இடங்களில் கேது பகவான் இருக்கும் பொழுது, பெரும்பாலும் சிரமத்தினைத் தருகின்றார்.

கேது பகவான் உங்கள் லக்னத்தில் இருந்தால், முகம் பிரகாசமாக இருக்கும். களத்திர தோஷமும் உண்டாகும். ஏனெனில், கேது லக்னத்தில் இருந்தால், ராகு உங்கள் லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் இருப்பார். எனவே, இவ்வாறு ஏற்படுகின்றது. லக்ன அதிபதியோடு கேது பகவான் தொடர்பில் இருந்தால், ஜாதகர் எப்படியும் தப்பித்து விடுவார். கேது பகவான் சந்திரனோடு சேர்ந்து இருந்தால், தாய்க்குப் பிரச்சனை, தாய்க்கு கண்டம் முதலியவைகள் உண்டாகும்.

அதே போல், சூரியனுடன் சேர்ந்தால், பெரிய அளவில் கெடுதல்களை செய்யாது. பெரும்பாலும், கேதுவுடன் சூரியன் சேர்ந்து இருக்கும் ஜாதகர் பிறக்கும் பொழுதே, தந்தையை இழந்தவராக இருக்கின்றார்கள். அதற்கு, மற்றக் கிரகங்களின் பார்வையும் ஒரு காரணமாக இருக்கும். அனைவருக்கும் அப்படி அமைவது கிடையாது. சுக்கிரனுடன் கேது சேர்ந்தால், காமம் காதல், சொகுசான வாழ்க்கை முதலியவைகளில் ஈடுபாடு இருந்தாலும், நல்ல ஆன்மீகவாதியாகவும் இருப்பார்கள்.

குருவும் கேதுவும் ஒன்றாக இருப்பவர்கள், நல்ல ஆன்மீகவாதிகள். பெரிய அளவில் ஆசைப்படாதவர்கள். அறநெறியுடன் வாழ நினைப்பவர்கள். தெய்வ பக்தி மற்றும் தெய்வ அருளுடன் இருப்பவர்கள். ஒரு சிலருக்கு வாக்குப் பலித்தமும் உண்டாகிவிடும். புதனுடன் கேது சேர்ந்தால், காமத்தில் அதிக ஈடுபாடு உண்டாகிவிடும். பேச்சில் அனல் பறக்கும். பேசிய ஆளைக் கொல்லும் அளவிற்கு, இவர்கள் பேச்சு இருக்கும்.

அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் கேதுவின் நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, கேது தசை முதல் தசையாக வரும். இதனால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரிய பாதிப்புகள் வராது. ஆனால், இவர்களின் பெற்றோர்கள் கஷ்டப்படுவர். வீண் மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.

புதனின் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதி உள்ளிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இரண்டாவது தசையாக, கேது தசை வரும். இந்தக் காலக் கட்டத்தில், படிப்பில் தடை, உடல்நலப் பாதிப்பு, கவனச் சிதறல், தேவையற்ற பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

சனியின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதி உள்ளிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, சனி திசை முதல் தசையாகவும், புதன் தசை இரண்டாவது தசையாகவும் வரும். பின்னர், கேது தசை மூன்றாவதாக வரும். இது இளமைக் காலத்தின் இறுதியில் வரும். இக்காலக் கட்டத்தில், குழந்தைப் பாக்கியத்தில் பிரச்சனை, சொத்துக்கள் வாங்குவதில் இழுபறி, தீய நட்புகள், தீய பழக்க வழக்கங்கள் ஆகியவைகளுக்கு அடிமையாக வேண்டி இருக்கலாம். மனைவியுடன் பிரச்சனை, செய்யும் தொழிலில் தோல்வி முதலானவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

குருவின் நட்சத்திரங்களான புணர்பூசம், விசாகம், பூரட்டாதி உள்ளிட்ட நட்த்திரங்களில் பிறந்தவர்களுக்கு, முதலில் குரு தசையும், பின்னர் சனி தசையும் வரும். அதனைத் தொடர்ந்து புதன் தசையும், அதற்கடுத்ததாக கேது தசை வரும். இக்காலக் கட்டத்தில் மன விரக்தி, கடன் தொல்லை, உடல்நலம் பாதிப்பு, குழந்தைகளின் வளர்ச்சியினை நினைத்துக் கவலை, மனைவியுடன் சண்டை, மனைவியுடன் பிரிவு முதலியவைகளால் சங்கடங்கள் ஏற்படலாம்.

ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களில், வாழ்க்கையின் பிற்பகுதியில், 50 வயதிற்கு மேல், இந்த கேது தசை வரும். இந்தக் காலக் கட்டத்தில், தொழிலில் நஷ்டம், குடும்பத்தில் விரிசல், சொத்துக்கள் பிரச்சனை, மனதில் குழப்பம், தகாத உறவுகள், மனைவி அல்லது கணவனுடன் சண்டைகள், உறவுகளில் விரிசல் உள்ளிட்டவைகள் ஏற்படலாம். உடல் உபாதைகள், அதிகளவிலான மருத்துவச் செலவுகளால் திண்டாட வேண்டியிருக்கும்.

செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகஷீரிசம், சித்திரை, அவிட்டம் உள்ளிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, இந்த கேது மகா தசை கிட்டத்தட்ட 80 முதல் 85 வயதில் வரும். அப்பொழுது, நோயால் அவதி, அடுத்தவரின் உதவியினை நாடியே வாழ்தல், பண வரவில் பிரச்சனை உள்ளிட்டவைகளால், நிலை தடுமாற வேண்டியிருக்கும். ஆன்மீக வழிபாடு, சிவ வழிபாடு, காசிக்குச் செல்லுதல் முதலியவைகளில் ஈடுபாடு ஏற்படும்.

சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் உள்ளிட்டவைகளில் பிறந்தவர்களுக்கு, 80 வயதிற்கு மேல் இந்த கேது மகா தசை வரும். உடல்நலப் பாதிப்பு, மனதில் பிரச்சனை, சுயநினைவினை இழத்தல், மனநல பாதிப்பு, பொருளாதார இழப்பு உள்ளிட்டவைகள் ஏற்படும் வாய்ப்புகள் ஏற்படும்.

சூரியனின் நட்சத்திரங்களான கார்த்திகை, உத்திரம், உத்திராடம் உள்ளிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்வின் கடைசிக் காலக் கட்டத்தில், இந்த கேது மகா தசை வரும். அப்பொழுது அரசாங்கத்தால் தொல்லை, வெளிநாட்டில் மரணம், வெளிநாட்டிற்கு நாடு கடத்தப்படுதல், சுயநினைவினை இழத்தல், நரம்பு மண்டலத்தில் பிரச்சனை உள்ளிட்டவை ஏற்படலாம்.

சுக்கிரனின் நட்சத்திரங்களான பரணி, பூரம், பூராடம் உள்ளிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 110 வயதிற்குப் பின்னர் தான், இந்த தசையே வரும். அப்பொழுது வந்தால், கண்டிப்பாக மோட்சம் தான். ஆனால், அவ்வாறு பெரும்பாலானவர்கள் அடைவதில்லை. தற்பொழுது 80 வருடம் உயிர் வாழ்ந்தாலே, போதும் என்ற மனநிலை மனிதர்களுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தசையைப் போல புத்தியும் ஒரு குறிப்பிட்ட கால அளவினைக் கொண்டது. அந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலும் நன்மைகள் நடைபெறுவது கிடையாது. தொல்லைகள், பிரச்சனைகள், சிக்கல்கள், மனதில் பயம், சுயபுத்தியினை இழத்தல், விபத்து, தற்கொலை எண்ணங்கள் தோன்றி மறையும். எவ்வாறு இருப்பினும், லக்னாதிபதி லக்னத்தில் அமர்ந்துவிட்டால், அனைத்துப் பிரச்சனைகளையும் ஜாதகர் சமாளித்துவிடுவார்.

கேது தசை கேது புத்தி

அனைத்தையும் வெறுத்து, கடவுள், ஆன்மீகம், மோட்சம், இறைவழிபாடு, தெய்வீகச் சிந்தனை என மனமும், உடலும் செல்லும். இதன் காலக் கட்டம் நான்கு மாதங்களும், 27 நாட்களுமே ஆகும். கேது நல்ல நிலையில் இருந்தால், அரசாங்கத்தால் உதவி, புகழ், கௌரவம், யோகம் உண்டாகும். செயல்களில் வெற்றி முதலியவையும் உண்டாகும்.

கேது தசை சுக்கிர புத்தி

இதன் அளவானது, ஒரு வருடம் இரண்டு மாதங்கள் ஆகும். கேதுவும், சுக்கிரனும் நன்றாக இருந்தால், மகா லட்சுமி கடாட்சம் உண்டாகும். பண வரவு, பெண்கள் மூலம் லாபம், கலைத்துறையில் வெற்றி முதலியவை ஏற்படும். கேதுவும், சுக்கிரனும் தீய நிலையில் இருந்தால், கடுமையானப் பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டி இருக்கும். பெண்கள் மூலம் பிரச்சனை, தொழிலில் நஷ்டம், மனைவியுடன் பிரிவு முதலியவை உண்டாகும்.

கேது தசை சூரிய புத்தி

இதன் அளவானது நான்கு மாதம் ஆறு நாட்கள் ஆகும். இந்தக் காலக் கட்டத்தில், அரசுடன் மோதல், தந்தை வழி உறவினர்களுடன் பிரச்சனை, உடலில் பிரச்சனை முதலியவை ஏற்படலாம்.

கேது தசை சந்திர புத்தி

இதன் கால அளவானது ஏழு மாதங்கள் ஆகும். மனக் குழப்பும், புத்தி பேதலித்தல், சுயநினைவினை இழத்தல் உள்ளிட்டவைகள் ஏற்படலாம். தண்ணீரில் கண்டம் ஏற்படலாம்.

கேது தசை செவ்வாய் புத்தி

இதன் கால அளவானது, நான்கு மாதம் 27 நாட்கள் ஆகும். இந்தக் காலக் கட்டத்தில், போரில் வெற்றி, போட்டிகளில் வெற்றி, நிலபுலன்களை வாங்கும் அமைப்பு, சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகளும் உண்டாகும். ஒருவேளை செவ்வாயும், கேதுவும் கெட்டு இருந்தால், இதற்கு எதிர்மறையானப் பிரச்சனைகள் ஏற்படலாம்.

கேது தசை ராகு புத்தி

இது மிகவும் உஷராக இருக்க வேண்டிய காலமாகும். இதன் கால அளவு சுமார் ஒரு வருடம் 18 மாதங்கள் ஆகும். இக்காலக் கட்டம் கண்டிப்பாக, கெடுதல்களையே வழங்கும். இக்காலக் கட்டத்தில், பெரிய முடிவுகளை எடுக்காமல் இருப்பது தான் நல்லது. விதவைகள், வேசிகள் மூலம் பிரச்சனை, மர்ம உறுப்புகளில் நோய் தொற்று, பண விரயம், ஆன்லைனில் விரயம், திருடு போதல், மன சஞ்சலம், மனக் குழப்பம் முதலியவை உண்டாகும். ஒரு சிலர் தற்கொலை முயற்சிகளிலும் ஈடுபடுவர்.

கேது தசை குரு புத்தி

இதன் கால அளவு 11 மாதம் ஆறு நாட்கள் ஆகும். இந்தக் காலக்கட்டத்தில், பொன், பொருள் சேர்க்கை, ஆன்மீக வழிபாடு, குரு வழிபாடு, சித்தர் வழிபாடு, ஜோதிடத்தில் ஆர்வம், முதலியவை உண்டாகும்.

கேதுவும், குருவும் கெட்டு இருந்தால், இதற்கு மாறாக ஏற்படும். நூதன வழிகள், தந்தீரீகத்தில் ஈடுபட்டு, சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் அமைப்புகள் ஏற்படும்.

கேது தசை சனி புத்தி

இதன் கால அளவு 13 மாதம் 9 நாட்கள் ஆகும். வயதில் மூத்தவர்கள் மூலம் ஆசிர்வாதம், திடீர் புதையல் யோகம், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் உண்டாகும். கேதுவும், சனியும் கெட்டு இருந்தால், கண்டிப்பாக விபத்து, கடன், நோய், தொழிலில் தோல்வி முதலியவை உண்டாகும். திருட்டு எண்ணம் மேலோங்கும். யார் மீதும், நம்பிக்கை ஏற்படாது.

கேது தசை புத புத்தி

இதன் கால அளவு 11 மாதம் 27 நாட்கள் ஆகும். ஜோதிடத்தில் ஆர்வம், ஜோதிடத்தில் குருவாக மாறுதல், வங்கிப் பணிகள் கிடைத்தல், விஷ்ணு வழிபாட்டில் ஆர்வம், விஷ்ணுவின் திருத்தலங்களுக்குச் செல்லுதல் உள்ளிட்டவைகளில் ஈடுபாடு உண்டாகும். கேதுவும், புதனும் கெட்டு இருந்தால், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், அஜீரணக் கோளாறு, வயிற்று உபாதகைள், உள்ளிட்டவைகள் ஏற்படலாம். கடவுள் மீது வெறுப்பு தோன்றும்.