ஜாதகப்படி உங்கள் மனைவி எப்படி? எந்த திசையில் இருந்து வருவார்?

07 april 2020 ஜோதிடம்
weddinglove.jpg AUTHOR:ஜோதிடர் சித்தயோகி சிவதாசன் ரவி

ஜோதிடத்தில் பலருக்கும் ஆர்வமும், நம்பிக்கையும் உண்டு. இளைஞர்கள் பலருக்கும் தன்னுடைய மனைவி எப்படிப்பட்டவாளாக இருப்பாள், எந்த திசையில் இருந்து வருவாள், எத்தகைய அதிர்ஷ்டத்தினை உடையவள், எவ்வளவு அழகாக இருப்பாள் என குழப்பங்கள் உண்டு. அதனை பிருகு நந்தி நாடி ஜோதிடத்தில் குறிப்பிட்டுள்ள முறையில் பதில் கூற இயலும்.

ஒரு ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் நிற்கின்ற இடத்தினைப் பொறுத்தே, மனைவி அமைவார். சுக்கிரனே, ஆணின் ஜாதகத்தில் களத்திரம் எனும் துணைவியினைக் குறிக்கும் கிரகமாகும். சரி, உங்கள் ஜாதகத்தில் மேஷம் முதல் மீனம் வரை, எங்கு சுக்கிரன் இருக்கின்றார் என குறித்துக் கொள்ளுங்கள். அதற்குரியப் பலன்களைப் பார்ப்போம். இங்கு சுக்கிரன் பற்றி மட்டுமே, குறிப்பிடப்பட்டு உள்ளன. மற்ற கிரகங்களுடன் சுக்கிரன் இணையும் பொழுது, இதன் பலனில் ஒரு சில மாற்றங்கள் மட்டுமே ஏற்படும்.

1. மேசத்தில் சுக்கிரன் நின்றால் ஜாதகருக்கு வரும் மனைவி இளமையான தோற்றமுடையவள், சுறு சுறுப்பானவள், ஜாதகருக்கு வரும் மனைவி சொந்தக்காரியாகவோ அல்லது சொந்த ஊர்க்காரியாகவோ அல்லது சொந்த பந்தங்கள் வசிக்கும் ஊர்க்காரியாகவோ இருப்பாள். ஜாதகருக்கு சரியான உடல் பொருத்தம் உள்ள மனைவியாக இருப்பாள். உஷ்ண தேகம் உடையவளாகவும் கோபக்காரியாகவும் மனைவி இருப்பாள். மனைவி பிறந்த ஊர் ஜாதகன் பிறந்த ஊருக்கு கிழக்கு திசையில் இருக்கும். மனைவியின் வீடு கிழக்கு மேற்கு வீதியில் வடக்கு பக்கம் வாசல் உள்ள வீடாக இருக்கும். திருமணத்திற்கு பின் மனைவி எப்பொழுதும் தன் கணவர் வீட்டில் இருப்பதையே விரும்புவார், தான் பிறந்த வீட்டிற்கு செல்வதை விரும்பமாட்டார். மனைவி ஒரு போதும் ஜாதகரை விட்டு பிரிய மாட்டார். மனைவி இருக்கும் வீடு அதிக வெளிச்சம் உள்ள வீடாக இருக்கும்.

2. ரிசபத்தில் சுக்கிரன் நின்றால் ஜாதகருக்கு வரும் மனைவி அழகானவளாகவும், ஆடை அலங்காரப்பிரியையாகவும், சொகுசு விரும்பியாகவும், செல்வ செழிப்புடையவளாகவும் இருப்பாள். மனைவி பக்கத்து ஊர்க்காரியாக இருப்பதற்கு வாய்ப்புண்டு. மனைவி பிறந்த ஊர் ஜாதகன் பிறந்த ஊருக்கு கிழக்கு திசையில் இருக்கும். மனைவியின் வீடு தெற்கு வடக்கு வீதியில் கிழக்கு பார்த்த வாசல் உடையதாக இருக்கும். திருமணத்திற்கு பின் மனைவி அடிக்கடி தன் தாய் வீட்டிற்கு செல்ல விரும்புவாள் அல்லது தன் தாய் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவதற்கு முயற்சி செய்வாள் அல்லது தன் தாய் வீட்டிற்கு பக்கத்தில் குடி பெயர்ந்து செல்ல முயற்சிப்பாள். மனைவி உறவினர்கள், நண்பர்கள் என யார் வீட்டிற்கும் செல்வதை விரும்ப மாட்டாள். எல்லோரும் தன் வீட்டிற்கு தன்னை தேடி வந்து பார்க்கட்டும் என நினைப்பாள். யாரையும் உபசரிக்கமாட்டாள். வீட்டை அழகாக வைத்திருப்பாள். அதிகம் வெளியே செல்லமாட்டாள். தான் பிறந்த வீட்டில் வந்து நிரந்தமாக தங்கிவிடும்படி ஜாதகரை நிர்பந்திப்பாள்.

3. மிதுனத்தில் சுக்கிரன் நின்றால் ஜாதகருக்கு வரும் மனைவி நட்பு விரும்பியாகவும், புத்திசாலியாகவும், இளமையான தோற்றமுடையவளாகவும், சுறு சுறுப்பானவளாகவும் , இரட்டைப்பெயர் அல்லது இரண்டு பெயர்கள் உடையவளாக இருப்பாள். தோற்றத்தில் ஜாதகனை விட மிகவும் இளையவள் போன்றோ அல்லது வயதில் மிகவும் இளையவளாகவோ இருப்பாள். ஜாதகனுக்கும் அவன் மனைவிக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருக்கும். ஜாதகனுக்கு இரண்டு மனைவிகள் அமைய வாய்ப்புண்டு. ஜாதகரின் மனைவி பெண் தோழிகளின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவாள். மனைவி பிறந்த ஊர் ஜாதகன் பிறந்த ஊருக்கு தென் கிழக்கு திசையில் இருக்கும்.மனைவியின் வீடு கிழக்கு மேற்கு வீதியில் தெற்கு பக்கம் வாசல் உள்ள வீடாக அமைந்திருக்கும். மனைவியின் வீடு தெரு முனையில் அமைந்திருக்கும்.

4. கடகத்தில் சுக்கிரன் நின்றால் ஜாதகருக்கு வரும் மனைவி தாய்மை உணர்வு அதிகம் உடையவளாக இருப்பாள். மனைவி அழகானவளாகவும்,மன சஞ்சலம் உடையவளாகவும், பாசத்திற்கு அடிமையாகவும் இருப்பாள். மனைவிக்கு அவள் பிறந்த வீட்டில் மரியாதை இருக்காது. பிறந்த வீட்டில் அவளை அன்னியப்பெண் போன்று நடத்துவார்கள். இதனால் காலப்போக்கில் தன் தாய் வீட்டிற்கு செல்வதை விரும்பாமல் நிரந்தரமாக நிறுத்திவிடுவாள். மாமியார் வசிக்கும் வீட்டிலும் இவள் இருக்க மாட்டாள், தனிக்குடித்தனம் செல்வதையே பெரிதும் விரும்புவாள். மாமியார், தாய், அக்கா, அண்ணி இவர்களின் வீடுகளுக்கு செல்வதை தவிர்ப்பாள். அடுத்தவர் வீடுகளில் தங்குவதை அவமானமாக நினைப்பாள். மனைவி பிறந்த ஊர் ஜாதகன் பிறந்த ஊருக்கு தெற்கு திசையில் இருக்கும். மனைவியின் வீடு தெற்கு வடக்கு வீதியில் மேற்கு பக்கம் வாசல் உள்ள வீடாக அமைந்திருக்கும். மனைவி சொந்தமில்லாமல் அன்னியப் பெண்ணாக இருப்பாள். மனைவி இருக்கும் வீட்டின் தளம் தெருவை விட சற்று பள்ளமாக இருக்கும்.

5. சிம்மத்தில் சுக்கிரன் நின்றால் ஜாதகருக்கு வரும் மனைவி நிர்வாக திறமை உடையவளாகவும், பிறந்த வீட்டில் ராணி போலவும் இருப்பாள். மனைவி தந்தை வழி உறவினளாக இருக்க வாய்ப்புண்டு. பிறந்த வீட்டில் உள்ளவர்களை நன்றாக வேலை வாங்குவாள். பெற்ற பிள்ளைகளை பராமரிக்க மாட்டாள், பிள்ளைகளை தாய் வீட்டில் விட்டு வளர்ப்பாள். தன்னை எல்லோரும் தலைவி போல் பாவிக்கவேண்டும் என விரும்புவாள். தந்தை வழி சொத்துக்கள் தனக்கே கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பாள் அல்லது தாய் வீட்டிலிருந்து எப்பொழுதும் எதையாவது எடுத்துக்கொண்டு போவதை வழக்கமாக வைத்திருப்பாள். மனைவி பிறந்த ஊர் ஜாதகன் பிறந்த ஊருக்கு தெற்கு திசையில் இருக்கும். மனைவியின் வீடு கிழக்கு மேற்கு வீதியில் வடக்கு பக்கம் வாசல் உள்ள வீடாக அமைந்திருக்கும்.

6. கன்னியில் சுக்கிரன் நின்றால் ஜாதகருக்கு வரும் மனைவி இளமையான தோற்றமுடையவளாகவோ அல்லது ஜாதகனை விட வயதில் மிகவும் இளையவளாக இருப்பாள். மனைவி தன் தோழிகள் வீடுகளுக்கு செல்லாதவரை எந்த பிரச்ச்சினையும் இல்லை, ஒரே ஒரு முறை சென்று வந்தால் போதும் அவர்கள் தன்னை கவனிக்கவில்லை, அவமானப்படுத்தி விட்டார்கள் என்று நட்பை துண்டித்துக்கொள்வாள். ஆடை அலங்காரத்தில் மனைவிக்கு அக்கரை இருக்காது. தனது உடமைகளை பிறருக்கு விட்டுக்கொடுப்பாள். எளிமையாக இருப்பாள். மனைவிக்கு இரட்டைப்பெயர் அல்லது இரண்டு பெயர்கள் இருக்க வாய்ப்புண்டு. மனைவி பிறந்த ஊர் ஜாதகன் பிறந்த ஊருக்கு தென்மேற்கு திசையில் இருக்கும். மனைவியின் வீடு தெற்கு வடக்கு வீதியில் கிழக்குப்பக்கம் வாசல் உள்ள வீடாக அமைந்திருக்கும். அந்த வீடு தெரு முனையில் அமைந்திருக்கும்.

7. துலாத்தில் சுக்கிரன் நின்றால் ஜாதகருக்கு வரும் மனைவி அழகானவளாகவும், ஆடை அலங்காரப்பிரியையாகவும், எதையும் சீர் தூக்கிப்பார்த்து சரியான முடிவுகளை எடுக்கும் திறமை உள்ளவளாகவும் இருப்பாள். மனைவி பக்கத்து ஊரை சேர்ந்தவளாக இருப்பதற்கு வாய்ப்புண்டு. மனைவி பிறந்த ஊர் ஜாதகன் பிறந்த ஊருக்கு மேற்கு திசையில் இருக்கும். மனைவியின் வீடு கிழக்கு மேற்கு வீதியில் தெற்கு பக்கம் வாசல் உள்ள வீடாக அமைந்திருக்கும். மனைவியின் வீட்டை ஒட்டி கடையோ அல்லது அந்த வீடு கடைத்தெருவில் இருக்கும். திருமணத்திற்கு பின் மனைவி அடிக்கடி தன் தாய் வீட்டிற்கு செல்ல விரும்புவாள் அல்லது தன் தாய் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவதற்கு முயற்சி செய்வாள் அல்லது தன் தாய் வீட்டிற்கு பக்கத்தில் குடி பெயர்ந்து செல்ல முயற்சிப்பாள். மனைவி உறவினர்கள், நண்பர்கள் என யார் வீட்டிற்கும் செல்வதை விரும்ப மாட்டாள். எல்லோரும் தன் வீட்டிற்கு தன்னை தேடி வந்து பார்க்கட்டும் என நினைப்பாள். யாரையும் உபசரிக்கமாட்டாள். வீட்டை அழகாக வைத்திருப்பாள். அதிகம் வெளியே செல்லமாட்டாள். தான் பிறந்த வீட்டில் வந்து நிரந்தமாக தங்கிவிடும்படி ஜாதகரை நிர்பந்திப்பாள். மனைவி இருக்கும் வீடு அதிக வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருக்கும்.

8. விருச்சிகத்தில் சுக்கிரன் நின்றால் ஜாதகருக்கு வரும் மனைவி இளமையான தோற்றமுடையவள், சுறு சுறுப்பானவள், ஜாதகருக்கு வரும் மனைவி சொந்தக்காரியாகவோ அல்லது சொந்த ஊர்க்காரியாகவோ அல்லது சொந்த பந்தங்கள் வசிக்கும் ஊர்க்காரியாகவோ இருப்பாள். ஜாதகருக்கு சரியான உடல் பொருத்தம் உள்ள மனைவியாக இருப்பாள். உஷ்ண தேகம் உடையவளாகவும் கோபக்காரியாகவும் மனைவி இருப்பாள். மனைவி பிறந்த ஊர் ஜாதகன் பிறந்த ஊருக்கு மேற்கு திசையில் இருக்கும். மனைவியின் வீடு தெற்கு வடக்கு வீதியில் மேற்கு பக்கம் வாசல் உள்ள வீடாக இருக்கும். திருமணத்திற்கு பின் மனைவி எப்பொழுதும் தன் கணவர் வீட்டில் இருப்பதையே விரும்புவார், தான் பிறந்த வீட்டிற்கு செல்வதை விரும்பமாட்டார். மனைவி ஒரு போதும் ஜாதகரை விட்டு பிரிய மாட்டார்.

9. தனுசு ராசியில் சுக்கிரன் நின்றால் ஜாதகருக்கு வரும் மனைவி சாந்தமான, அமைதியான தோற்றத்தில் இருப்பாள். தோற்றத்தில் ஜாதகனை விட மூத்தவள் போன்று இருப்பாள் அல்லது வயதில் மூத்தவளாகவும் இருக்க வாய்ப்புண்டு. அல்லது மனைவி உடல் பருத்தவளாக இருப்பாள். மனைவி சொந்தக்காரியாக இருக்க வாய்ப்புண்டு. மனைவி தன் வீட்டிற்கு யாரும் வந்து போவதை விரும்ப மாட்டாள் . தனிக்குடித்தனம் செல்வதையே விரும்புவாள். மனைவி பிறந்த ஊர் ஜாதகர் பிறந்த ஊருக்கு வட மேற்கு திசையில் இருக்கும். மனைவியின் வீடு கிழக்கு மேற்கு வீதியில் வடக்கு பக்கம் வாசல் உள்ள வீடாக அமைந்திருக்கும். மனைவியின் வீடு தெரு முனையில் அமைந்திருக்க வாய்ப்புண்டு. அவள் விட்டிற்கு அருகே கோயில் ஒன்று இருக்க வாய்ப்புண்டு. மனைவிக்கு இரட்டைப்பெயர் அல்லது இரண்டு பெயர்கள் இருக்க வாய்ப்புண்டு. மனைவி அவசியம் இல்லாமல், காரணம் இல்லாமல் எந்த ஒரு செயலிலும் ஈடுபட மாட்டாள்.

10. மகரத்தில் சுக்கிரன் நின்றால் ஜாதகருக்கு வரும் மனைவி நல்ல உடல் உழைப்பாளியாக இருப்பாள். அடக்கமானவளாகவும், எளிமையானவளாகவும் இருப்பாள். முதிர்ச்சியான தோற்றம் இருக்கும். அவள் காரியவாதியாகவும் இருப்பாள். மனைவி சொந்தமில்லாமல் அன்னியப்பெண்ணாக இருப்பாள். மனைவி பிறந்த ஊர் ஜாதகன் பிறந்த ஊருக்கு வடக்கு திசையில் இருக்கும். மனைவியின் வீடு தெற்கு வடக்கு வீதியில் கிழக்கு பக்கம் வாசல் உள்ள வீடாக அமைந்திருக்கும். மனைவி இருக்கும் வீட்டின் தளம் தெருவிலிருந்து அதிக உயரத்தில் இருக்கும். மனைவி அடிக்கடி தோழிகளின் வீட்டிற்கு சென்று வருவதை விரும்புவாள். மனைவி அடுத்தவர்களுக்கு சேவகம் புரிந்து காரியம் சாதிப்பாள்.

11. கும்பத்தில் சுக்கிரன் நின்றால் ஜாதகருக்கு வரும் மனைவி காரியவாதியாக இருப்பாள். ஆதாயம் தேடாமல் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடமாட்டாள். யாரிடமிருந்து எதைப்பெறலாம் என்பதிலியே குறியாக இருப்பாள். அடுத்தவர்களிடம் உதவி கேட்பதற்கு கூச்சப்படமாட்டாள். அமர்ந்த இடத்தை விட்டு நகராமல் எல்லோரையும் வேலை வாங்குவாள். தனது பணிகளை பிறர் மீது திணிப்பாள். முதிர்ச்சியான தோற்றமுடையவளாக இருப்பாள். மனைவி பிறந்த ஊர் ஜாதகர் பிறந்த ஊருக்கு வடக்கு திசையில் இருக்கும். மனைவியின் வீடு கிழக்கு மேற்கு வீதியில் வடக்கு பக்கம் வாசல் உள்ள வீடாக அமைந்திருக்கும். மனைவி தோழிகளை தன் வீட்டிற்கு வரவழைத்து அரட்டை அடிப்பாள். மனைவி சொந்தமில்லாமல் அன்னியப் பெண்ணாக இருப்பாள்.

12. மீனத்தில் சுக்கிரன் நின்றால் ஜாதகருக்கு வரும் மனைவி சாந்தமான, அமைதியான தோற்றத்தில் இருப்பாள். தோற்றத்தில் ஜாதகனை விட மூத்தவள் போன்று இருப்பாள் அல்லது வயதில் மூத்தவளாகவும் இருக்க வாய்ப்புண்டு. அல்லது மனைவி உடல் பருத்தவளாக இருப்பாள். மனைவி சொந்தக்காரியாக இருக்க வாய்ப்புண்டு. மனைவி பிறந்த ஊர் ஜாதகர் பிறந்த ஊருக்கு வட கிழக்கு திசையில் இருக்கும். மனைவியின் வீடு தெற்கு வடக்கு வீதியில் மேற்கு பக்கம் வாசல் உள்ள வீடாக அமைந்திருக்கும். மனைவியின் வீடு தெரு முனையில் அமைந்திருக்க வாய்ப்புண்டு. மனைவிக்கு இரட்டைப்பெயர் அல்லது இரண்டு பெயர்கள் இருக்க வாய்ப்புண்டு. மனைவி அடுத்தவர்களிடம் அதிகம் உரிமை எடுத்துக்கொள்வாள். அடுத்தவர்கள் வீட்டிற்கு சென்று அதிகாரம் செய்வாள். மனைவி ஆடம்பர பிரியையாகவும் , பேராசைக்காரியாகவும் இருப்பாள். பிறர் பொருளை அபகரிப்பாள்.