எந்த ருத்ராட்சத்தின் முகத்திற்கு என்ன பலன்?

24 October 2019 ஜோதிடம்
rudhraksham.jpg

ருத்ராட்சம், சிவனின் அம்சமாகக் கருதப்படுகிறது. இதனை அணிவதன், தீய எண்ணங்கள் நம்மை விட்டு விலகும் எனவும், சிவபெருமானின் முழுமையான கடாட்சத்தினைப் பெற இயலும் எனவும் நம்பப்படுகின்றது. இதில் பல வகையான ருத்ராட்சங்களும் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உள்ளன. அவைகளின் சிறப்பினை தெரிந்து கொண்டு, அணிவதன் மூலம், பலவிதமான நன்மைகளை அடைய இயலும்.

ஒரு முக ருத்ராட்சம்

அனைத்து ருத்ராட்சங்களிலும் மேலானதாக, இந்த ஒரு முக ருத்ராட்சமே கருதப்படுகிறது. இது சிவபெருமானின் முகமாக, அவருடைய அடியார்கள் நம்புகின்றனர். இதனை அணிவதன் மூலம், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் எனவும், சூரிய பகவானின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கும் எனவும் நம்பப்படுகின்றது. அரசாங்க ஆதரவும், செல்வ வளமும் அடைய இயலும்.

இரண்டு முக ருத்ராட்சம்

இது, தேவியின் அம்சமாகக் கருதப்படுகின்றது. சிவசக்தி ஸ்வரூபமாக விளங்கும் இதனை அணிவதன் மூலம், பாவங்கள் அழியும். மேலும், தேவியின் ஆசிர்வாதமும் கிடைக்கும். இரண்டு என்பது சந்திரபகவானைக் குறிக்கும். இதனை அணிந்தால், சந்திரனின் அருளையும், அவருடைய கடாட்சத்தினையும் பெறலாம்.

மூன்று முக ருத்ராட்சம்

இந்த ருத்ராட்சம், அக்னி பகவானின் அம்சமாக கருதப்படுகின்றது. இதனை அணிவதன் மூலம், சகல தோஷங்களையும், பாவங்களையும் நாம் வெல்ல இயலும். இது அத்தகைய தோஷங்கள் மற்றும் பாவங்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது. இது குருபகவானின் முழுமையான அருளை, வழங்க வல்லது.

நான்கு முக ருத்ராட்சம்

நான்கு முக ருத்ராட்சமானது, நான்முகனின் அம்சமாகக் கருதப்படுகின்றது. இதனை அணிவதால், நம்முடைய புண்ணியங்கள் இரட்டிப்பாகும். இது ராகு பகவானின் அருளை வழங்க வல்லது. மேலும், அவரால் ஏற்படும் தோஷங்களையும் நீக்க வல்லது. மேலும், நாக தெய்வங்களின் அருளினையும் வழங்கும் ஆற்றல் படைத்தது.

ஜந்து முக ருத்ராட்சம்

இதுவும், சிவ பெருமானின் அம்சமாகவே பார்க்கப்படுகின்றது. இதனை ’காலக்னி’ எனவும் அழைப்பர். இது புத பகவானின் அருளை, பரிபூரணமாக வழங்கும் சக்தி கொண்டது.

ஆறு முக ருத்ராட்சம்

இது, முருகனின் அம்சமாகப் பார்க்கப்படுகின்றது. இதனை அணிந்து கொள்வதன் மூலம், எளிதாக முருகனின் ஆசிர்வாதத்தினைப் பெற இயலும். எதிரிகளை எளிதாக வெல்லலாம். மகாலட்சுமியின் கடாட்ஷம் உண்டாகும்.

ஏழு முக ருத்ராட்சம்

இது, மன்மதனின் அம்சமாக பார்க்கப்படுகின்றது. இது, நாம் அறியாமல் செய்த முன் ஜென்ம வினைகளை அறுக்க வல்லது. இதனை அணிவதால், கேதுவால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். அவருடைய ஆசிர்வாதம் உண்டாகும்.

எட்டு முக ருத்ராட்சம்

இது, கணபதியின் அம்சமாக பார்க்கப்படுகின்றது. இதனை அணிவதன் மூலம், சனீஸ்வரனின் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். அவருடைய ஆசியும் உண்டாகும். ஆனால், இதனை நீங்கள் அணிந்தால், மிகவும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டி இருக்கும்.

ஒன்பது முக ருத்ராட்சம்

இதனை, பைரவரின் வடிவம் என்பர். பிரம்மஹத்தி தோஷம், இதனை அணிவதன் மூலம் நீங்கும். செவ்வாய் பகவானின் அருளும், ஆசியும் உண்டாகும். காவல்துறை மற்றும் இராணுவத்தில் பணிபுரிபவர்கள் அல்லது பணிபுரிய விரும்புபவர்கள் இதனை, அணிய அதிர்ஷ்டம் உண்டாகும்.

பத்து முக ருத்ராட்சம்

இது, மகா விஷ்ணுவின் அம்சமாக உள்ளது. இதனை அணிவதால், அனைத்துத் தோஷங்களும் நீங்கும். நோய்கள் குணமாகும். திருஷ்டி முதலானவற்றால் ஏற்படும் பாதிப்புகள் தீரும். இதனை அணிவதம் மூலமும், சூரிய பகவானின் ஆசியைப் பெறலாம்.

பதினோரு முக ருத்ராட்சம்

இது, ருத்திர வடிவமாகப் பார்க்கின்றனர். இது சந்திரனுக்கு உரியது என்பதால், அவருடைய ஆசிர்வாதத்தினை வழங்கும். அதே போல், பல யாகங்கள் செய்தப் பலனையும் வழங்கும்.

பன்னிரண்டு முக ருத்ராட்சம்

இதனை, துவாதச ஆதித்த ரூபமாகப் பார்க்கின்றனர். இதனை அணிவதால், பயம் விலகும். புண்ணியங்களை வழங்கும். குரு பகவானின் ஆசியை அருளும். திருமணத்தில் நிலவி வந்த, தடை அகலும்.

பதின்மூன்று முக ருத்ராட்சம்

இதனை அணிவதன் மூலம், முருகனை வழிபட்டப் பலனை அடையலாம். பாவங்களை போக்கும். ராகுவின் அருளையும், திடீர் அதிர்ஷ்டத்தையும் அள்ளித் தரும்.

பதினான்கு முக ருத்ராட்சம்

இதனை அணிந்து கொள்வதன் மூலம், சிவ பெருமானின் அருளை பெறலாம். பல வித வளங்களை வழங்கும் சக்தி கொண்டது இந்த ருத்ராட்சம்.

ருத்திராட்சங்களில், ஒரு முகம், 14 முகம் மற்றும் 21 முக ருத்திராட்சம் கிடைப்பது அரிதான ஒன்றாகும்.