விநாயகர் பூஜை எவ்வாறு செய்வது?

21 August 2020 ஜோதிடம்
ganeshcahthurthi1.jpg

கடவுகள்களில் மூலக் கடவுளாகவும், முதன்மைக் கடவுளாகவும் இந்து மதத்தில் பார்க்கப்படக் கூடிய கடவுள் என்றால், அது விநாயகப் பெருமானே. அவருக்கு ஆவணி மாதம், வளர்பிறை சதுர்த்தி திதியில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகின்றது. அன்றைய நன்னாளில், வீட்டில் எவ்வாறு விநாயகர் சதுர்த்தி பூஜை செய்வது என்பது குறித்துக் காண்போம். விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு முந்தைய நாளில், வீட்டினைக் கழுவி சுத்தம் செய்திடல் அவசியம். வீட்டினைக் கழுவியப் பின்னர், மமாமிசம் முதலியவைகளைப் புழங்கக் கூடாது. வீட்டில் விநாயகர் படம், சிலை இருந்தால் எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பூஜை அன்று, முதலில் குல தெய்வப் படம் இருந்தால், அதற்கு பூ வாங்கி வைக்க வேண்டும். குல தெய்வத்தின் படம் இல்லையென்றால், ஒரு சுத்தமான டம்ளரில் தூய நீரினை ஊற்றி பூச்சூடி அதனை குல தெய்வமாகக் கருத வேண்டும். அதனைத் தொடர்ந்து, விநாயகரை வைத்து வழிபாடு செய்ய உள்ள மேடையில், ஸ்வஸ்திக் சின்னத்தினை மாக்கோலமாக இட வேண்டும். அதனைத் தொடர்ந்து, அந்த மேடையில் விநாயகரை வைக்க வேண்டும். விநாயகர் படமோ, விநாயகர் சிலையோ இல்லை என்றால், விநாயகர் சிலையினை மண்ணில் செய்து விற்பர். அதனைப் பயன்படுத்தலாம்.

பின்னர், அந்த விநாயகருக்கு பூவால் அலங்காரம், வஸ்திரம் முதலியவைகளால் அலங்காரம் செய்ய வேண்டும். எப்பொழுதும் திறந்த கண்ணுடைய விநாயகரையே வாங்க வேண்டும். வீட்டில் உள்ள விளக்குகளை ஏற்ற வேண்டும். முடிந்த வரை நெய் தீபம் ஏற்றுங்கள். இல்லாத நிலையில், நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். பிள்ளையாருக்கு, கொழுக்கட்டை, பொறி, அவல், பனியாரம், அப்பம், பழங்கள், மோதகம் உள்ளிட்டவைகளை படைக்கலாம். அனைத்தையும் ஒற்றை எண்ணிக்கையில் படைக்க வேண்டும்.

பின்னர், தீ தூபம் காட்டி வணங்க வேண்டும். முதலில் குல தெய்வத்தினை வணங்க வேண்டும். பின்னர், விநாயகரை வணங்க வேண்டும். அதனைத் தொடர்ந்து, விநாயகருக்கான மந்திரங்கள், ஜெபங்களை துதிக்கலாம். விநாயகர் அகவல், விநாயகர் 108 போற்றி முதலியவைகளை பாடலாம். இவ்வாறு செய்வதன் மூலம், விநாயகரின் முழு ஆசியையும் நம்மால் எளிதாகப் பெற இயலும்.