மிதுனம் குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020!

24 October 2019 ராசிபலன்
mithunam.jpg

குரு பகவான் வரும் தீபாவளிக்கு அடுத்த நாள், அதாவது அக்டோபர் 28ம் தேதி அம்மாவாசை அன்று, சுவாதி நட்சத்திர நாளில் இந்தப் பெயர்ச்சி நடைபெறுகிறது. குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து, தன்னுடைய முதல் சொந்த வீடான தனுசு ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார்.

அனைத்து உயிர்களுக்கும் சகல மங்கலத்தை அருளும் குரு பகவான், இந்த முறை தன்னுடைய சொந்த வீட்டிற்குச் செல்வது மாபெரும் நன்மையாகும். அவ்வாறு செல்லும் குரு பகவான், தன்னுடைய ஐந்தாம் பார்வையாக மேஷத்தையும், ஏழாம் பார்வையாக மிதுனத்தையும், ஒன்பதாம் பார்வையாக சிம்மத்தையும் பார்க்கின்றார்.

தனுசு ராசியில் சனீஸ்வரன் மற்றும் கேது பகவானுடன் இணையும் குரு பகவான், அங்கு குரு சண்டாள யோகத்தினை உருவாக்குகின்றார். அங்கிருந்து கொண்டு, தன்னுடைய ஏழாம் பார்வையாக, ராகு பகவானைப் பார்க்கின்றார். இதன் காரணமாக, ராகு சுபத் தன்மை அடைகின்றார். இதனால், இதுவரை, அனைவருக்குமே, சங்கடத்தையும், கஷ்டங்களையும் வழங்கி வந்த ராகு பகவான், குருப் பெயர்ச்சிக்குப் பின், 50% நன்மைகளை வழங்க ஆரம்பிப்பார்.

ஜனவரி 24ம் தேதி, சனிப் பெயர்ச்சி நடைபெற உள்ளது. அதற்குப் பின், சனி பகவானும், தன்னுடைய சொந்த வீடான மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். அதன் காரணமாக, அவருடையப் பார்வை, ராகுவின் மீதிருந்து விலகிவிடும். அப்பொழுதில் இருந்து 2020ம் ஆண்டு முடியும் வரை, ராகு பகவான் 100% சுபத் தன்மை அடைந்து, தன்னுடைய முழு அதிர்ஷ்டத்தையும், எளிய வழிகளையும், குறுக்கு வழிகளையும் காட்டி, வாழ்வில் பல வளர்ச்சிகளை ஏற்படுத்துவார். இது அடுத்த நடக்க இருக்கும், ராகு-கேது பெயர்ச்சி வரை நீடிக்கும்.

சனி பகவான் ஜனவரி 24ம் தேதி தன்னுடைய முதல் ஆட்சி வீடான, மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகின்றார். அங்கிருந்து, தன்னுடைய மூன்றாம் பார்வையை மீன ராசியின் மீதும், ஏழாம் பார்வையை கடக ராசியின் மீதும், 10ம் பார்வையை துலாம் ராசியின் மீதும் பதிக்கின்றார். இதனால் ஏற்படும் பலன்களைப் பற்றியும் பார்ப்போம்.

புத பகவானை அதிபதியாகக் கொண்ட, மிதுன ராசி அன்பர்களே! சாதூர்யமான பேச்சாலும், கணிவான பழக்க வழக்கத்தாலும் பிறர் மனதைக் கொள்ளைக் கொள்ளும் உங்கள் ராசிக்கு, இந்த குருப் பெயர்சிக்குப் பின், என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

அக்டோபரில் நடக்கும் குருப் பெயர்ச்சிக்குப் பின், தன்னுடைய சொந்த வீடான தனுசு ராசிக்கு குரு பகவான், பெயர்ச்சி அடைகிறார். அது உங்கள் ராசிக்கு ஏழாம் இடமாகும். முதலில் நாம் இந்தக் குருப் பெயர்ச்சியை, இரண்டு கட்டங்களாகப் பிரித்துப் பார்ப்போம். முதலில், அக்டோபர் 28 முதல் ஜனவரி 24 வரை. மற்றொன்று ஜனவரி 24க்கு பின்.

இவை இரண்டிற்கும் மாபெரும் வித்தியாசம் உண்டு. இவை இரண்டுமே, மாபெரும் மாற்றத்தை உங்கள் வாழ்க்கையல் உண்டாக்கும் என்பதில், மாற்றுக் கருத்து இல்லை.

அக்டோபர் 28 முதல் ஜனவரி 24 வரை

இந்தக் காலக் கட்டத்தில், குரு பகவான், தன்னுடைய தனுசு ராசியில் நுழைகின்றார். அங்கு கேது மற்றும் சனி பகவானுடன் இணைந்து, குரு சண்டாள யோகத்தினை உண்டு பண்ண உள்ளார். அவர் அங்கிருந்து, மேஷம், மிதுனம் மற்றும் சிம்மம் ஆகிய வீடுகளைப் பார்ப்பார்.

சனி மற்றும் குரு பகவான் ஆகியோர் இணைந்து இருப்பது, பெரிய அளவில் ஆன்மீக ஈடுபாட்டினை அதிகரிக்கும். முதலில் நீங்கள் கடந்த மார்ச் முதல் மே 15 வரை என்னென்ன நடந்தது, நீங்கள் என்னென்ன செய்தீர்கள் என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். அவைகள் பெரும்பாலும், மீண்டும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்தக் காலக் கட்டத்தில் நீங்கள் எதனையும் ஆரம்பிக்கக் கூடாது. காரணம், நீங்கள் இந்தக் காலக் கட்டத்தில், எதையாவது ஆரம்பித்தால், அது பெரிய அளவில் வளர்ச்சி பெறும். நீங்களும், மேலும், அதில் முதலீடு செய்வீர்கள். அதுவும் பெரிய அளவில் வளரும் பொழுது, உங்களுடைய மனநிலையின் காரணமாக, நீங்கள் அதனைக் கைவிடும் நிலைமை உண்டாகும்.

இதன் காரணமாகவே, இந்தக் காலக் கட்டத்தில் யாரும், எதையும் ஆரம்பிக்கக் கூடாது. மேலும், இந்தக் காலக் கட்டத்தில் அதிர்ஷ்டம் என்பது 50% மட்டுமே வேலை செய்யும். மீதி 50% வாய்ப்புகள் சனிபகவான் உழைப்பாக மாற்றிவிடுவார். உழைத்த உழைப்புக்கேற்றப் பலன்களைப் பெற வேண்டும் என்றால், இறையருள் வேண்டும். மேலும், சனி, கேதுவுடன் இணைந்திருக்கும் குரு, ராகுவின் பார்வையையும் பெறுவதால், இந்தக் காலக் கட்டத்தில் அனைவருமே, கோவிலுக்குச் சென்று புண்ணியங்களை செய்வது நல்லது.

தனுசில் இருக்கும் சனி பகவான், உங்களை குல தெய்வக் கோவில்கள், ஆன்மீக யாத்திரைகள், முருகன் கோவில்கள், சித்தர் வழிபாடுகளை செய்ய வைப்பார். சனி பகவானின் பார்வையால், வருமானத்தின் அளவு குறைவாகவே இருக்கும். சகோதரருடன் பிரச்சனைகள் தொடரலாம். வீட்டில் மனைவியிடம் அந்த விஷயத்தில் ஈடுகொடுக்க முடியாமல் திணறலாம். மனைவியுடன் வீண் வாக்குவாதங்களும் நிகழலாம்.

ராகு பகவான் உங்கள் ராசியில் இருக்கின்றார். இதன் காரணமாக, நீங்கள் செய்யும் செயல்களில் தடைகள் ஏற்படலாம். மனதில் அமைதியும், பொறுமையும் வைத்துக் கொள்ளவும். எடுக்கின்ற வேலையில் தாமதம் உண்டாகலாம். ராகு தொடர்ந்து சனியின் பார்வையில் இருப்பதால், ராகுவால் பெரிய அளவில் நன்மைகளை செய்ய இயலவில்லை. இந்த குருப் பெயர்ச்சிக்குப் பின் குரு பகவானின் பார்வையால், ராகு பகவான் பெரிய அளவிலானப் பிரச்சனைகளைத் தரமாட்டார். இதுவரை இருந்து வந்த பணமுடக்கத்திற்கு விடிவு காலம் பிறக்கும்.

கேது பகவான், உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில், குரு மற்றும் சனியுடன் இணைந்து இருக்க உள்ளார். இதன் காரணமாக, ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இதுவரை கோவிலுக்குச் செல்லாதவர்கள் கூட, இந்த குருப் பெயர்ச்சிக்குப் பின், கோவிலுக்குச் செல்ல ஆரம்பிப்பீர்கள்.

குரு பகவான் உங்கள் ராசிக்கு, ஏழாம் இடத்தில் இருக்கின்றார். இதன் காரணமாக, வெளியுலகத் தொடர்புகள் சிறப்படையும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு, நல்லதொரு வேலைக் கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு, நல்லதொரு வரன் அமையும். ஒப்பந்ததாரர்கள் மற்றும் வியாபாரிகளுடன் சுமூகமான நிலை நீடிக்கும்.

குரு பகவானின் பார்வையின் காரணமாக, தொழிலில் நல்ல செல்வம் சேரும். தொழில் மூலம் வரும் வருமானம் அதிகரிக்கும். உங்களுடைய மூத்த சகோதரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்புகளை குரு பகவான் வழங்குவார். புதிய ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் நகைகள் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். தைரியம் அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் ஆதரவும் கிடைக்கும். உங்களுடைய வீரியமும் அதிகரிக்கும்.

சனி பகவான் குரு பகவானுடன் இணைந்து இருப்பதால், திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். குரு பகவான் ராகு பகவானைப் பார்ப்பதனால், குரு சண்டாள யோகத்தினை உண்டாக்குகின்றார். இதன் காரணமாக, எளிய மனிதர்களிடம் சற்று விட்டுக் கொடுத்துச் செல்லவும். அமைதியை பேணவும். எல்லாம் தெரிந்தது போல் பேச வேண்டாம். அது உங்களுக்கு, மீண்டும் படிப்பினையைத் தர ஆரம்பித்து விடும். எனவே, ஏழை, எளிய மக்களிடம் பழகும் பொழுது சகஜமாக நடந்து கொள்ளவும்.

இந்த ஜனவரி 24 அன்று தனுசு ராசியில் இருந்து, தன்னுடைய சொந்த வீடான மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகின்றார். இதனால், இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த மறைமுகமானக் கஷ்டங்கள் ஒரு முடிவிற்கு வரும்.

ஜனவரி 24க்குப் பின்

ஜனவரி 24 அன்று, சனி பகவான் தனுசு ராசியில் இருந்து, மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். உங்கள் ராசிக்கு, எட்டு மற்றும் ஒன்பதாம் இடத்திற்கு அதிபதியான சனி பகவான், எட்டாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைவதைப் பற்றி இனியும் சொல்ல வேண்டுமா என்ன? அங்கிருந்து மீனம், கடகம் மற்றும் துலாம் ராசிகளைப் பார்க்கின்றார்.

சனிபகவான், உங்களுக்கு இந்த முறை சிறப்பான அமைப்பில் உள்ளார். இதன் காரணமாக, இதுவரை கட்ட முடியாமல் இருந்து வந்த கடனை, இந்த சனிப் பெய்ர்சியில், கண்டிப்பாக அடைத்துவிடுவீர்கள் என உத்திரவாதம் தரலாம். ஏனெனில், சனிஸ்வரன் கடன் மூலம் வரும் கஷ்டங்களை இவர், உங்களுக்கு கற்றுக் கொடுத்து இருப்பார். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அலைந்து திரிந்து வேலை செய்யும் நிலை உண்டாகலாம். குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். குழந்தைப் பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு, சற்று தாமதமாக குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். குல தெய்வத்தைத் தொடர்ந்து வணங்கி வரவும். பெண் குழந்தைகளுக்கு, வயதில் முதிர்ந்தவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யவும். தந்தையுடன் மனக் கசப்பு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளவும். அவருக்கு பணிவிடைகள், உபகாரங்கள் செய்வதன் மூலம், சனீஸ்வரனின் அருளைப் பெற இயலும்.

தனுசு ராசியில் இருக்கும் குரு பகவான், ராகு பகவானைப் பார்த்து தொடர்ந்து, குரு சண்டாள யோகத்தை உண்டாக்கி கொண்டே இருக்க உள்ளார். இதன் காரணமாக, அதிர்ஷ்டம் தேடி வரும். ராகு பகவான் உங்களுக்கு நன்மைகளை செய்யக் கூடியவர் என்பதனை மறக்க வேண்டாம். அவர் உங்கள் ராசியில் இருக்கின்றார். இதனால், குடும்பத்தினரின் மூலம் அதிர்ஷ்டங்கள் உண்டாகலாம். குறுக்கு வழிகளில், எப்படி பணம் சேர்ப்பது எனத் தெரிந்து கொள்வீர்கள். குழந்தைப் பிறப்பு தாமதம் ஆகும் வாய்ப்புகளும் உள்ளன. தொடர்ந்து, பெண் தெய்வங்களை வணங்கி வரவும். அதிர்ஷ்டத்தின் மூலம், பல காரியங்களை சாதித்துக் கொள்ள இயலும்.

ஜனவரி 24 வரை, குறைந்த பலத்துடன் இருந்து வந்த ராகு, ஜனவரி 24க்குப் பின், முழு சுப பலத்துடன், உங்களுக்கு பல நன்மைகளை வழங்குவார். அதவும் குறிப்பாக, ஏப்ரல் மாதத்தில் இருந்து, மிக அதிக அளவில் நனமைகளை வழங்கி, மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்துவிடுவார்.

குரு, கேது பகவானுடன் இணைந்து இருப்பதால், நீங்கள் ஆன்மீகப் பயணங்களையும், குல தெய்வ வழிபாட்டினையும் தொடரும் வாய்ப்புகள் உண்டாகும். மனதில், தொடர்ந்து தெய்வத்தை வைத்து இருக்கவும். தீர்த்த யாத்திரைகள், மலைகளில் இருக்கும் கோவில்கள் ஆகியவைகளுக்குச் சென்று வரும் வாய்ப்புகள் பிரமாதமாக உள்ளன.

குரு பகவான் தொடர்ந்து தன்னுடைய ஐந்தாம் பார்வையாக மேஷ ராசியைப் பார்த்துக் கொண்டு இருக்க உள்ளார். இதனால், தொழில் மூலம் வரும் வருமானத்திற்கு குறை இருக்காது. மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். ஈடுபடும் காரியங்களில் வெற்றி உண்டாகும்.

ஆக மொத்தம், இந்த குரு பெயர்ச்சியில் உங்கள் மிதுன ராசிக்கு, நூற்றுக்கு 94% நன்மைகள் மட்டுமே நடக்கும். மேலும், பல நன்மைகள் நடக்க, சிவ பெருமான், மற்றும் விநாயகரைத் தொடர்ந்து வணங்கவும். மறக்காமல், குல தெய்வ வழிப்பாட்டினை மேற்கொள்வது நல்லது.