கன்னி குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020!

24 October 2019 ராசிபலன்
kanni.jpg

குரு பகவான் வரும் தீபாவளிக்கு அடுத்த நாள், அதாவது அக்டோபர் 28ம் தேதி அம்மாவாசை அன்று, சுவாதி நட்சத்திர நாளில் இந்தப் பெயர்ச்சி நடைபெறுகிறது. குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து, தன்னுடைய முதல் சொந்த வீடான தனுசு ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார்.

அனைத்து உயிர்களுக்கும் சகல மங்கலத்தை அருளும் குரு பகவான், இந்த முறை தன்னுடைய சொந்த வீட்டிற்குச் செல்வது மாபெரும் நன்மையாகும். அவ்வாறு செல்லும் குரு பகவான், தன்னுடைய ஐந்தாம் பார்வையாக மேஷத்தையும், ஏழாம் பார்வையாக மிதுனத்தையும், ஒன்பதாம் பார்வையாக சிம்மத்தையும் பார்க்கின்றார்.

தனுசு ராசியில் சனீஸ்வரன் மற்றும் கேது பகவானுடன் இணையும் குரு பகவான், அங்கு குரு சண்டாள யோகத்தினை உருவாக்குகின்றார். அங்கிருந்து கொண்டு, தன்னுடைய ஏழாம் பார்வையாக, ராகு பகவானைப் பார்க்கின்றார். இதன் காரணமாக, ராகு சுபத் தன்மை அடைகின்றார். இதனால், இதுவரை, அனைவருக்குமே, சங்கடத்தையும், கஷ்டங்களையும் வழங்கி வந்த ராகு பகவான், குருப் பெயர்ச்சிக்குப் பின், 50% நன்மைகளை வழங்க ஆரம்பிப்பார்.

ஜனவரி 24ம் தேதி, சனிப் பெயர்ச்சி நடைபெற உள்ளது. அதற்குப் பின், சனி பகவானும், தன்னுடைய சொந்த வீடான மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். அதன் காரணமாக, அவருடையப் பார்வை, ராகுவின் மீதிருந்து விலகிவிடும். அப்பொழுதில் இருந்து 2020ம் ஆண்டு முடியும் வரை, ராகு பகவான் 100% சுபத் தன்மை அடைந்து, தன்னுடைய முழு அதிர்ஷ்டத்தையும், எளிய வழிகளையும், குறுக்கு வழிகளையும் காட்டி, வாழ்வில் பல வளர்ச்சிகளை ஏற்படுத்துவார். இது அடுத்த நடக்க இருக்கும், ராகு-கேது பெயர்ச்சி வரை நீடிக்கும்.

சனி பகவான் ஜனவரி 24ம் தேதி தன்னுடைய முதல் ஆட்சி வீடான, மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகின்றார். அங்கிருந்து, தன்னுடைய மூன்றாம் பார்வையை மீன ராசியின் மீதும், ஏழாம் பார்வையை கடக ராசியின் மீதும், 10ம் பார்வையை துலாம் ராசியின் மீதும் பதிக்கின்றார். இதனால் ஏற்படும் பலன்களைப் பற்றியும் பார்ப்போம்.

புத பகவானை அதிபதியாகக் கொண்ட, கன்னி ராசி அன்பர்களே! சாதூர்யமாக நடந்து கொண்டு, நேரத்திற்கு ஏற்றாற் போல் செயல்பட்டு, தொடர்ந்து வெற்றியை வசமாக வைத்திருக்கும், உங்கள் ராசிக்கு இந்த குருப் பெயர்சிக்குப் பின், என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

அக்டோபரில் நடக்கும் குருப் பெயர்ச்சிக்குப் பின், தன்னுடைய சொந்த வீடான தனுசு ராசிக்கு குரு பகவான், பெயர்ச்சி அடைகிறார். அது உங்கள் ராசிக்கு நான்காம் இடமாகும். முதலில் நாம் இந்தக் குருப் பெயர்ச்சியை, இரண்டு கட்டங்களாகப் பிரித்துப் பார்ப்போம். முதலில், அக்டோபர் 28 முதல் ஜனவரி 24 வரை. மற்றொன்று ஜனவரி 24க்கு பின்.

இவை இரண்டிற்கும் மாபெரும் வித்தியாசம் உண்டு. இவை இரண்டுமே, மாபெரும் மாற்றத்தை உங்கள் வாழ்க்கையில் உண்டாக்கும் என்பதில், மாற்றுக் கருத்து இல்லை.

அக்டோபர் 28 முதல் ஜனவரி 24 வரை

இந்தக் காலக் கட்டத்தில், குரு பகவான், தன்னுடைய தனுசு ராசியில் நுழைகின்றார். அங்கு கேது மற்றும் சனி பகவானுடன் இணைந்து குரு சண்டாள யோகத்தினை உண்டு பண்ண உள்ளார். அவர் அங்கிருந்து, மேஷம், மிதுனம் மற்றும் சிம்மம் ஆகிய வீடுகளைப் பார்ப்பார்.

சனி மற்றும் குரு பகவான் ஆகியோர் இணைந்து இருப்பது, பெரிய அளவில் ஆன்மீக ஈடுபாட்டினை அதிகரிக்கும். முதலில் நீங்கள் கடந்த மார்ச் முதல் மே 15 வரை என்னென்ன நடந்தது, நீங்கள் என்னென்ன செய்தீர்கள் என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். அவைகள் பெரும்பாலும், மீண்டும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்தக் காலக் கட்டத்தில், நீங்கள் எதனையும் ஆரம்பிக்கக் கூடாது. காரணம், நீங்கள் இந்தக் காலக் கட்டத்தில், எதையாவது ஆரம்பித்தால், அது பெரிய அளவில் வளர்ச்சி பெறும். நீங்களும், மேலும், அதில் முதலீடு செய்வீர்கள். அதுவும் பெரிய அளவில் வளரும் பொழுது, உங்களுடைய மனநிலையின் காரணமாக, நீங்கள் அதனைக் கைவிடும் நிலைமை உண்டாகும்.

இதன் காரணமாகவே, இந்தக் காலக் கட்டத்தில் யாரும், எதையும் ஆரம்பிக்கக் கூடாது. மேலும், இந்தக் காலக் கட்டத்தில் அதிர்ஷ்டம் என்பது 50% மட்டுமே வேலை செய்யும். மீதி 50% வாய்ப்புகளை சனிபகவான் உழைப்பாக மாற்றி விடுவார். உழைத்த உழைப்புக்கேற்றப் பலன்களைப் பெற வேண்டும் என்றால், இறையருள் வேண்டும். மேலும், சனி, கேதுவுடன் இணைந்திருக்கும் குரு, ராகுவின் பார்வையையும் பெறுவதால், இந்தக் காலக் கட்டத்தில் அனைவருமே, கோவிலுக்குச் சென்று புண்ணியங்களை செய்வது நல்லது.

ராகு பகவான், உங்கள் ராசிக்கு 10ல் இருக்கின்றார். இதன் காரணமாக, அதிர்ஷ்டத்தை வழங்க வேண்டிய ராகு பகவான் வருமானத்திற்குத் தடையாக இருக்கின்றார். கவலை வேண்டாம். இந்த குருப் பெயர்ச்சிக்குப் பின், குரு பகவான் தனுசி ராசிக்குப் பெயர்ச்சி வருகிறார். இதன் காரணமாக, ராகுவால் ஏற்பட்ட பிரச்சனைகள் 50% நீங்கும். இருப்பினும், சனியின் பார்வையில் இருப்பதால், ராகுவால் அள்ளித் தர இயலாது.

குரு பகவான், உங்கள் ராசிக்கு நான்காம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகின்றார். இதன் காரணமாக, அவர் நேராக, உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தையும், 10ம் இடத்தையும், 12ம் இடத்தையும் பார்க்க உள்ளார். இந்தப் பார்வைகள், உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ளத் தடைகளை நீக்கும்.

குரு பகவான், சனி மற்றும் கேதுவுடன் இணைந்து இருக்கின்றார். குரு தன்னுடைய சொந்த வீட்டில் இருந்தாலும், இரண்டு இருள் கிரகங்களுடன் சேர்ந்து இருக்கின்றார். இதன் காரணமாக, தன்னுடைய பலத்தை அவர்களுக்கு வழங்கி, அவர்கள் மூலம் ஏற்பட்ட கஷ்டங்களைத் தீர்ப்பார். உடல்நலம் நன்றாகவே இருக்கும். கடன்களை அடைக்க வழிகள் உண்டாகும்.

சனி பகவான் குரு பகவானுடன் இணைந்து இருப்பதால், திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். குரு பகவான், ராகு பகவானைப் பார்ப்பதனால், குரு சண்டாள யோகத்தினை உண்டாக்குகின்றார். சனி பகவான் தொடர்ந்து, கடன் பிரச்சனைகளின் மூலம் ஏற்படும் கஷ்டத்தை உங்களுக்கு உணர்த்தியிருப்பார்.

இந்த ஜனவரி 24 அன்று தனுசு ராசியில் இருந்து, தன்னுடைய சொந்த வீடான மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகின்றார். இதனால், இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த மறைமுகமானக் கஷ்டங்கள் ஒரு முடிவிற்கு வரும்.

ஜனவரி 24க்குப் பின்

ஜனவரி 24 அன்று, சனி பகவான் தனுசு ராசியில் இருந்து, மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். உங்கள் ராசிக்கு, ஐந்து மற்றும் ஆறாம் இடத்திற்கு அதிபதியான சனி பகவான், உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். மகரத்தில் இருந்து கொண்டு அங்கிருந்து மீனம், கடகம் மற்றும் துலாம் ராசிகளைப் பார்க்கின்றார்.

சனி பகவான் பெயர்ச்சிக்குப் பின், குழந்தைப் பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு அழகிய குழந்தைகள் பிறக்கும். குல தெய்வக் கோவிலுக்குச் சென்று வருவீர்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு, புண்ணியம் செய்வீர்கள். தெய்வத்தின் பரிபூரண அருளை நீங்கள் அனுபவிக்க வேண்டிய தருணம் எனக் கூறலாம்.

சனி பகவானின் பார்வையின் காரணமாக, திருமணம் நடைபெற தாமதம் உண்டாகலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் பொழுது கவனம் தேவை. தேவையற்ற வாக்குறுதிகளைத் தர வேண்டாம். வெளியுலக தொடர்புகளில் சற்றுக் கவனமாக இருக்கவும். தொழில் மூலம் வரும் வருமானம் சரியான நேரத்தில் வருவதற்குச் சற்றுத் தாமதம் ஆகலாம். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்துச் செல்லவும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பேச்சில் கணிவினைப் பேணவும்.

தனுசில் இருக்கும் குரு பகவான், உங்கள் ராசிக்கு நான்கு மற்றும் ஏழாம் இடத்திற்கு அதிபதி ஆவார். அவர் உங்கள் ராசிக்கு, நான்காம் இடத்தில் இருக்கின்றார். இதனால், உங்கள் தாயின் உடல்நிலை சீராகும். அவர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். அவர் மூலம் பல நன்மைகள் உங்களுக்கு உண்டாகும். புதிய சொத்துக்கள், நகைகள், வாகனங்கள் வாங்கும் பாக்கியம் உண்டாகும். உயர்கல்வியில் இதுவரை இருந்து வந்த தடை நீங்கும். ஒழுக்கம் அதிகரிக்கும். உயர்கல்விக்காக காத்திருந்தவர்களுக்கு, நல்ல கல்லூரியில் பிடித்த கல்விப் பிரிவு கிடைக்கும். பொதுத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு, அருமையான ஆண்டாக இது இருக்கும்.

குருவின் பார்வை பலத்தால், உங்கள் ஆயுள் அதிகரிக்கும். இதுவரை நீண்ட நாட்களாக, கட்டாமல் இருந்து வந்த கடன்களை அடுத்த குருப் பெயர்ச்சிக்குள் கட்டி முடிப்பீர்கள். இருப்பினும், இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்கவும். கணவன் மற்றும் மனைவியிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். தொழிலில் இருந்து வந்தத் தடை நீங்கும். ஒன்றுக்குப் பல தொழில் செய்யும் வாய்ப்புகளும் உண்டாகும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு, நல்ல வேலை அமையப் பெறும். வேலையில், அதிர்ஷ்டமும் உண்டாகும். சுபச் செலவுகளும் அதிகரிக்கும். நிம்மதியான உறக்கம் உண்டாகும். கோவில்கள், தீர்த்த யாத்திரைகள் சென்று வருவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும்.

தனுசு ராசியில் இருக்கும் குரு பகவான், ராகு பகவானைப் பார்த்து தொடர்ந்து, குரு சண்டாள யோகத்தை உண்டாக்கி கொண்டே இருக்க உள்ளார். இதன் காரணமாக, அதிர்ஷ்டம் தேடி வரும். அவர் உங்கள் ராசிக்கு 10ல் இருக்கின்றார். இதனால், அவர் இதுவரை கொடுத்து வந்த தொந்தரவுகள் நீங்கி, நன்மைகள் உண்டாகும். மேலும், ராகு பகவான் தொழிலில் மாற்றம், தொழில் முன்னேற்றம், தொழில் மூலம் வரும் புகழ் ஆகியவற்றை அதிகரிப்பார். குருவின் நேரடிப் பார்வையில், இருப்பது மாபெரும் சுப அமைப்பு எனலாம்.

ஜனவரி 24 வரை, குறைந்த பலத்துடன் இருந்து வந்த ராகு, ஜனவரி 24க்குப் பின், முழு சுப பலத்துடன், உங்களுக்கு பல நன்மைகளை வழங்குவார். அதவும் குறிப்பாக, ஏப்ரல் மாதத்தில் இருந்து, மிக அதிக அளவில் நனமைகளை வழங்கி, மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்து விடுவார்.

குரு, கேது பகவானுடன் இணைந்து இருப்பதால், நீங்கள் ஆன்மீகப் பயணங்களையும், குல தெய்வ வழிபாட்டினையும் தொடரும் வாய்ப்புகள் உண்டாகும். மனதில், தொடர்ந்து தெய்வத்தை வைத்து இருக்கவும். தீர்த்த யாத்திரைகள், மலைகளில் இருக்கும் கோவில்கள் ஆகியவைகளுக்குச் சென்று வரும் வாய்ப்புகள் பிரமாதமாக உள்ளன.

ஆக மொத்தம் இந்த குரு பெயர்ச்சியில் உங்கள் கன்னி ராசிக்கு, நூற்றுக்கு 88% நன்மைகள் மட்டுமே நடக்கும். மேலும், பல நன்மைகள் நடக்க, தெட்சிணாமூர்த்தி, கணபதி, சித்தர்கள், சிவ பெருமான், பெண் தெய்வங்கள் ஆகியோரில், உங்களுக்கு விருப்பமானவரைத் தொடர்ந்து வணங்கவும். மறக்காமல், குல தெய்வ வழிப்பாட்டினை மேற்கொள்வது நல்லது.