இந்து மத சாஸ்திரங்களின் அடிப்படையில், திருமணம் செய்யும் போது மணமக்களுக்கிடையே ஜாதகப் பொருத்தம் பார்க்கப்படுகிறது. இருவரின் ஜாதகமும், பொருந்தினால் அவர்களின் வாழ்க்கை எந்தக் குறையுமின்றி நன்றாக அமையும் என நம்பப்படுகிறது. லக்கனம், நட்சத்திரம் மற்றும் இராசிகளே இந்த மணமக்களின் ஜாதகத்தை உருவாக்குகின்றன. இதில் நாம் இராசிகளின் அடிப்படையில் சிறந்த ஜோடிகளைப் பற்றிப் பார்ப்போம்.
பொதுவாக ஒரே இராசியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வது, அவ்வளவு சிறப்பான அம்சம் இல்லை. எனினும், கும்பராசிக்கார்ரகள் செய்வதை நல்லது என இந்து சாஸ்திரங்கள் விளக்குகின்றன. இந்த இராசிக்கார்ரகள் இணைவதன் மூலம், இறை அருளை அதிகம் பெற்று எந்தக் குறையுமின்றி வளமுடன் வாழ்வர். ஒரு சிலத் தம்பதிகள் இளமையில் கஷ்டப்பட்டாலும், இளமைக்குப் பின் சுக போக வாழ்க்கையைக் கண்டிப்பாக அனுபவிப்பர். மேலும், தனுசு இராசிக்காரர்களை திருமணம் செய்வது, தெய்வ அருள் விரைவில் கிடைக்க வழி செய்யும்.
மேஷ இராசிக்கார்ரகள், மகர இராசியுடன் இணையும் அமைப்பானது, மிக உத்தமமான ஒரு அமைப்பாகும். இந்த இராசியைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்வதால் அமைதியான வாழ்க்கையையும், குறைவில்லாத செல்வத்தையும் பெற்று வாழ்வர். அதே சமயம் மேஷ இராசியைச் சேர்ந்தவர்கள் கும்ப இராசியைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்வதும் மிகச் சிறந்த அமைப்பாகக் கருதப்படுகிறது.
ரிஷப இராசியைச் சேர்ந்தவர்கள் மீன இராசியைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்வதன் மூலம், நிம்மதியான வாழ்க்கையைப் பெற முடியும். இந்த அமைப்பு நல்ல வாழ்க்கைக்கு வழிவகுக்கும். இதைப் போல மகர இராசியைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்வதன் மூலம், ரிஷப இராசிக்காரர்கள் நல்வாழ்க்கையை, நீண்ட ஆயுளுடன் வாழ முடியும்.
மிதுன இராசிக்காரர்களுக்கு ஏற்ற ஜோடியாக சிம்ம இராசியைச் சேர்ந்தவர்களும், தனுசு இராசியைச் சேர்ந்தவர்களும் விளங்குகின்றனர். இந்த இராசிக்காரர்கள் சேரும் பொழுது கணவன், மனைவி இருவர் செய்கின்ற எந்த செயலும் வெற்றியையேத் தரும்.
கடக இராசியைச் சேர்ந்தவர்கள் மீன இராசிக்காரர்களையும், மகர இராசிக்காரர்களையும் திருமணம் செய்வது இராஜ யோகத்தைக் கண்டிப்பாக, வாழ்வின் பின் பகுதியில் வழங்கும். மேலும், கடக இராசியைச் சேர்ந்தவர்கள் விருச்சிக இராசியைச் சேர்ந்தவர்களை மணப்பதன் மூலம் அமைதியான இல்லறத்தை அமைத்திட இயலும்.
சிம்ம இராசிக்காரர்கள் தனுசு இராசியுடன் இணைவதன் மூலம் இல்லத்தில் செல்வ வளம் பெருகும். மேலும் சிம்ம இராசிக்காரர்கள் மிதுன இராசியைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்வதன் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கையை இறைவன் அருளுடன் பெற வாய்ப்புண்டு. துலாம் இராசியைச் சேர்ந்தவர்களை, சிம்ம இராசியினர் திருமணம் செய்வதன் மூலம் எக்குறையுமின்றி மிக்கக் குழந்தைச் செல்வத்தைப் பெற்று வாழ்வர்.
கன்னி இராசிக்காரர்கள் விருச்சக இராசிக்காரர்களை கல்யாணம் செய்வதன் மூலம், வாழ்நாள் முழுவதும் புதுமணத் தம்பதிகளைப் போலவே வாழ முடியும். மேலும், கன்னி இராசியைச் சேர்ந்தவர்கள் மீன இராசிக்காரர்களை திருமணம் செய்வதால், எந்த பிரச்சனையும் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழ்வர்.