காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். வைணவ திவ்ய தேசங்களிலேயே, முதன்மை ஸ்தலமாக இந்த திருத்தலம் கருத்தப்படுகிறது. இங்குள்ள பெருமாள் கேட்டதை வழங்குபவர் என்பதால், வரதராஜ பெருமாள் எனப் பெயர் பெற்றார். இந்நிலையில், அந்தக் கோவிலின் குளத்தில் அத்தி வரதராஜ பெருமாள் பற்றித் தெரியுமா?
இந்த அத்தி வரதராஜ பெருமாளே 16ம் நூற்றாண்டு வரை, கோவிலின் மூலவராக இருந்தார். இந்த பெருமாளை, விஸ்வகர்மா வடிவமைத்ததாக நம்பப்படுகிறது.
இஸ்லாமியர்கள் படையெடுக்கும் பொழுது, மூலவரைக் காப்பாற்ற கோவிலின் குளத்தினுள் பெருமாளை மறைத்து வைத்தனர். அப்படி மறைத்து வைத்தவர்கள் ஒரு கட்டத்தில் இறந்தும் விட்டனர். காஞ்சிபுரம் கோவிலில் 40 வருடங்கள் அந்தக் கோவிலில், மூலவரே இல்லாமல் பூஜைகளும் செய்ய முடியாமல் இருந்தது. மூலவருக்கு வேறு சிலையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்பொழுது உடையார் பாளையம் காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட உற்சவ மூர்த்திகளைக் கண்டுபிடித்து கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
பின்னர், மூலவருக்குப் பதிலாக பழைய சீவரம் என்ற கூரில் இருந்த பத்ம கிரி மலைக்கு அருகில் உள்ள முக்கூடல் பகுதியில் கல்லால் ஆன, தேவராஜா சுவாமி என்னும் பெருமாள், அத்தி வரதரைப் போல இருந்ததால், அவரை கோவிலுக்கு கொண்டு வந்து, அந்த விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர்.
இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவருக்கு அத்ரி ரிஷி கராச்சித மூர்த்தி எனப் பெயர் வைத்தனர். 1709ம் ஆண்டு கோவிலின் குளம் வற்றியது. அப்பொழுது, கோவிலின் குளத்தில் அத்தி வரதர் இருப்பதை அறிந்து, அனைவரும் வியந்தனர். அதனை கண்டு பிடித்தாலும், மூலவரை ஏற்கனவே பிரதிஷ்டை செய்துவிட்டதால், இவரை அக்குளத்திலேயே வைத்துப் பூஜை செய்தனர்.
40 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும், கோவிலின் குளத்தை வற்ற வைத்து, அதிலிருந்து அத்தி வரதரை வெளியே எடுத்து ஒரு மண்டலம், அதாவது 48 நாட்கள் பூஜைகள் செய்வர். பின்னர், மீண்டும் அவரை குளத்திற்குள் வைத்து, நீரால் நிரப்பி விடுவர். இதுவே அத்தி வரதராஜப் பெருமாளின் வரலாறு.
40 வருடங்கள் கழித்து வரும் ஜூலை 1ம் தேதி முதல் சுமார் 48 நாட்களுக்கு, காஞ்சிபுரத்தில் அத்தி வரதராஜப் பெருமாள் நமக்கு குளத்தில் இருந்து, வெளியே வந்து காட்சித் தருவார். அவரை தரிசிக்க இலவச தரிசனமும், 50 ரூபாய் டோக்கன் தரிசனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அத்தி வரதரை தரிசிக்க விரும்புபவர்கள் மறக்காமல், உங்களுடைய ஆதார் கார்டை எடுத்துச் செல்லவும். உள்ளூர் மக்களுக்கு ஒரு நேரமும், வெளியூர் நபர்களுக்கு மற்றொரு நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் காலை 5.30-7.00 மணி வரையிலும், பின்னர் மாலை ஒரு மணி நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.