அஸ்ரயா யோகம் என்றால் என்ன? அதன் வகைகள் எத்தனை?

10 May 2020 ஜோதிடம்
nineplanets.jpg

யோகங்களில் பல யோகங்கள் பல சுப பலன்களையும், தகுதியினையும், தரமான வாழ்க்கையையும் வழங்க வல்லவை. அதே போல, ஒரு சில யோகங்கள் பல கெடுதல்களை அள்ளித் தந்து வாழ்வினை இருளாக்கி விடுபவை. இந்த யோகங்களுக்கு முக்கியக் காரணமாக இருப்பது கிரகங்களின் சேர்க்கையே ஆகும்.

அஸ்ரயா யோகம் என்பது, கிரகங்கள் இருக்கும் இடத்தினைப் பொருத்து உருவாகும் யோகமாகும். ராசி மண்டலங்களில், சர, ஸ்திர மற்றும் உபய ராசிமண்டலகள் என மூன்று வகைகள் உள்ளன. இதனைப் பொறுத்தே இந்த, அஸ்ரயா யோகம் உண்டாகின்றது. இதில், மூன்று வகைகள் உள்ளன. இந்த அஸ்ரயா யோகத்தில் ரஜ்ஜூ யோகம், முசல யோகம், நள யோகம் உள்ளிட்டவைகள் உள்ளன.

அஸ்ரயா ரஜ்ஜூ யோகம்

சர ராசிகளில் ஒன்பது கிரகங்களும் நின்றால், இந்த அஸ்ரயா ரஜ்ஜூ யோகம் உண்டாகும். இந்த யோகத்தினை உடையவர், அதிக பிரயாணங்களை மேற்கொள்வார். பார்ப்பதற்கு லட்சமாக காட்சியளிப்பார். பெண் என்றால், உடலானது எடுப்பாக இருக்கும். வாழ்வில் குறிக்கோளும், அந்தக் குறிக்கோளினை அடைய வெறித்தனமும் இருக்கும். கொடூரமான குணமும் இருக்கும். வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று, பொருள் ஈட்டும் பாக்கியம் உண்டாகும்.

ரஜ்ஜூ யோகம்

இந்த யோகமும் லக்னம் முதலாக, பெரும்பாலான கிரகங்கள், சர ராசிகளில் நிற்பதால் ஏற்படுவதே ஆகும். சர ராசிகளான மேஷம், கடகம், துலாம், மகர ராசிகளில் நிற்பதால் ஏற்படுவது ஆகும். இந்த யோகத்தினை உடையவர்கள், பணம், புகழ், செல்வாக்கிற்காக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு, நகர்ந்து கொண்டே இருப்பர். இவர்களை நம்பது சற்று கடினமான விஷயமே. பெரிய விசாலமான அறிவினை உடையவர். ஒரு விஷயத்தில், இவரால், நிலையாக இருக்க இயலாது. பெரிய அளவில் இவர்களால், அசையாத சொத்துக்களை வாங்குவது முடியாது.

அஸ்ரயா முசல யோகம்

இந்த யோகமானது, அனைத்துக் கிரகங்களும், ஸ்திர ராசிகளில் நிற்பதால் ஏற்படுகின்றது. இந்த யோகத்தினை உடையவர்கள், பெருமைக்குடையவர்கள் ஆவர். செல்வந்தர்கள், படித்தவர்களாக இருப்பர். ஆட்சியாளர்களாகவும், ஒரே திடகாத்திரமான, தீர்க்கமான மனநிலையினை உடையவர்களாகவும் இருப்பர்.

முசல யோகம்

லக்னம் ஸ்திர ராசிகளில் அமர்ந்து, பெருவாரியான கிரகங்கள் ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பத்தில் அமர்ந்தால், இந்த யோகம் உண்டாகின்றது. இந்த யோகத்தினை உடையவர்கள், நன்கு படித்தவர்களாகவும், ஆட்சியாளர்களாவும், பிரபலமானவர்களாகவும் இருப்பர். தீர்க்கமான மனநிலையுடன் காணப்படுவர். எடுக்கின்ற முடிவுகளில் உறுதியாக இருப்பர். இவர்களுக்கு அழகிய மகன்கள் பிறப்பார்கள். இவர்கள் மிகவும், நம்பிக்கையானவர்கள்.

இவர்களை நம்பி எதையும் செய்யலாம். இவர்களால், தெளிவான முடிவினை எடுக்க இயலும் என்றாலும், வேகமாக எடுக்க இயலாது. பொறுமையாகவே, இவர்கள் முடிவுகளை எடுப்பர். இது இக்கட்டான சூழ்நிலைகளில், தர்ம சங்கடமான நிலையை உருவாக்கும். மாற்றங்களை இவர்களால், அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளவும் இயலாது.

அஸ்ரயா நள யோகம்

லக்னம் முதலாக ஒன்பது கிரகங்களும், உபய ராசிகளில் நிற்பதால் இந்த யோகம் உண்டாகின்றது. இந்த யோகத்தினை உடையவர்கள், அதிபுத்திசாலிகள். நிலைமைக்கு ஏற்றபடி, தங்களை மாற்றிக் கொண்டு காரியம் சாதிப்பவர்கள். குறிக்கோளுடன் வாழ்பவர்கள். பார்க்க அழகாக காட்சித் தருவர். இவர்களைச் சுற்றி, எப்பொழுதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

நள யோகம்

லக்னம் முதலாக பெருவாரியான கிரகங்கள் உபய ராசிகளான, மிதுனம், கன்னி, தனுசு, மீனம் உள்ளிட்டவைகளில் நின்றால் இந்த யோகம் உண்டாகின்றது. இவர்கள் மிகவும் புத்திசாலிகள். பண வரவு என்பது, ஒரு சமயம் அதிகமாக இருக்கும். ஒரு சமயம், குறைவாக இருக்கும். அதிக மாற்றங்களை சந்திப்பவர்களும், அதிக உறுதியானவர்களும் இவர்களே. பார்ப்பதற்கு அழகாக இருப்பர். அதிக வாய்ப்புகள் கிடைக்கின்ற போதிலும், பிடித்தை செய்ய வேண்டும் என்பதற்காக, பல வாய்ப்புகளை இழந்து கஷ்டப்படுபவர்கள்.