விநாயகரின் அறுபடை வீடுகளைப் பற்றித் தெரியுமா?

24 October 2019 கோவில்கள்
pillayar.jpg

முருகப் பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பது போல், விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளன. அவை அனைத்தும் தமிழகத்தில் உள்ளது தான் பெரிய விஷேஷமே. அத்தகைய அறுபடை வீடுகளைப் பற்றிப் பார்ப்போம்.

1 திருவண்ணாமலை அல்லல்போம் விநாயகர்

தேடி வந்தவர்களின் அல்லல் போக்குவார் என்பதால், இவரை அல்லல்போம் விநாயகர் என்று அழைக்கின்றனர். திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலின், கிழக்குத் திசையில் உள்ள ராஜகோபுரத்திற்குள்ளேயே செல்வக் கணபதியாக காட்சி அளிக்கிறார். இதுவே அறுபடை விநாயகரின் வீடுகளில், முதல் வீடாகும்.

2 ஆழத்து விநாயகர்

விருத்தாசலத்தினை திருமுதுகுன்றம் என அழைப்பர். இந்த ஊரில் உள்ள ஆலயத்தில் இருக்கும் விநாயகர், ஆழத்தில் அமைந்துள்ளார். இவரைத் தரிசிக்க 16 படிக்கட்டுகள் மிதித்து இறங்கி சென்று தான் பார்க்க முடியும். அவரைப் பார்த்துவிட்டு, மேலேறி வருவது போல, வாழ்க்கையிலும் நம்மை மேற்றி வைப்பார் இந்த விநாயகர்.

3 திருக்கடவூர் விநாயகர்

திருக்கடவூர் நகரில் அமைந்துள்ள விநாயகர் கோவில், மூன்றாவது படைவீடாகும். இங்குள்ள விநாயகர் கள்ள வாரணப் பிள்ளையாராக அருள்பாலிக்கிறார். இந்திரன் முதலான தேவர்கள் விநாயகரை வணங்க மறந்தனர். இதனால், அமிர்தக் கலசத்தை எடுத்து மறைத்து வைத்தார் விநாயகர். இதனால், இவரை கள்ள வாரணப் பிள்ளையார் என அன்புடன் அழைக்கின்றனர். இந்த பிள்ளையாரை வணங்கினால், நீண்ட ஆயுள் வழங்குவார் என்பது நம்பிக்கை.

4 மீனாட்சி அம்மன் கோவில் சித்தி விநாயகர்

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முகவரித் தேவையில்லை. அதுவே மதுரையின் முகவரி ஆகும். அந்தக் கோவிலில், குளத்தின் அருகே உள்ள, ஊஞ்சல் மண்டபத்திற்கு அருகில், சித்திவிநாயகர் எழுந்தருளியுள்ளார். இந்த விநாயகரை மாணிக்கவாசகர் வணங்கியுள்ளார் எனப் புராணங்கள் கூறுகின்றன. இவரை வணங்குவதால், நாம் செய்யும் மற்றும் நினைக்கும் காரியங்கள் சித்தியாகும் என்பது நம்பிக்கை.

5 பிள்ளையார்பட்டி-கற்பகவிநாயகர்

காரைக்குடி செல்லும் வழியில் பிள்ளையார்பட்டி அமைந்துள்ளது. உலகளவில் பிரசித்திப் பெற்ற திருத்தலமான இக்கோவிலில், குடைவரைக் கோவிலாக கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இங்குள்ள விநாயகர் வலது கையில், சிவலிங்கத்தைக் கையில் வைத்துள்ள நிலையில் அருள்பாலிக்கிறார். இவரை வணங்குவதன் மூலம், நல்ல ஞானத்தையும், அறிவையும் பெற இயலும்.

6 திருநரையூர் பொள்ளாப் பிள்ளையார்

சிதம்பரத்திற்கு அருகில் உள்ள திருநரையூரில், விநாயகரின் ஆறாவது படை வீடு உள்ளது. இங்குள்ள விநாயகரை பொள்ளாப் பிள்ளையார் என அன்புடன் அழைக்கப்படுகிறார். இவர் தானாகத் தோன்றிய சுயம்பு ஆனவர். இவரைப் போற்றி அப்பர், சம்பந்தர் முதலான நாயன்மார்கள் வணங்கி உள்ளனர். இவரை வணங்குவதன் மூலம் வெற்றிகள் மற்றும் செய்யும் செயல்களுக்கு கை மேல் பலன் கிடைக்கும்.