ஆடி 18 கோவில்களில் குவிந்த கூட்டம்! பக்தர்கள் குல தெய்வத்தை வணங்கினர்!

24 October 2019 சாஸ்திரம்
aadi18.jpg

இன்று ஆடி 18 திருநாளை ஒட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களுடைய குல தெய்வத்தை வணங்க, கோவில்களில் குவிந்தனர். இதனால், கோவில்களில் கூட்டம் அலை மோதியது.

ஆடி மாதத்தின் 18வது நாளான இன்று, ஆடிப்பெருக்குத் திருவிழா, தமிழகம் முழுக்கக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தீர்த்தங்களில் நீராடுவது, கடற்கரைகளில் குளிப்பது, குடும்பத்தில் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது என, இன்றைய நாளில் தமிழக மக்கள் கோவில்கள், தீர்த்தங்கள் மற்றும் கடற்கரைகளில் குவிந்தனர்.

மதுரையில் உள்ள திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில், காலையிலேயே திரளான பக்தர்கள் ராக்காயி அம்மன் கோவிலில் உள்ள, நூபுரகங்கைத் தீர்த்தத்தில் குளித்துவிட்டு, பதினெட்டாம் படி கருப்பசாமியை தரிசனம் செய்தனர்.

அங்கு மதுரை மக்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பலப் பகுதிகளிலும் இருந்து, பக்தர்கள் குவிந்தததால், போலீசார் பல சிரமங்களுக்கு உள்ளாகினர். நூபுர கங்கையில் குளிக்க, இரண்டு கிலோ மீட்டருக்கு பக்தர்கள் வரிசையில் நின்று சென்றனர். பின்னர், அழகரை தரிசிக்கவும் கூட்டம் கூடியது. பதினெட்டாம் படி கருப்பசாமியை வணங்கி, பொங்கல் வைத்து, கிடா வெட்டி தங்களுடைய பக்தியையும், மரியாதையும் கடவுளுக்குச் செய்தனர்.