10 மகா தேவிகள் பற்றி தெரியுமா?

24 October 2019 சாஸ்திரம்

மூன்று தேவர்களைத் தெரியும். பத்து தேவிகளைப் பற்றித் தெரியுமா? சிவனின் மனைவி சக்தி. பிரம்மனின் மனைவி சரஸ்வதி. மஹா விஷ்ணுவின் மனைவி மஹா லெட்சுமி. பிரம்மனின் புதல்வனான, தக்ஷப் பிராஜாபதி சிவனின் தீவிர பக்தன். அவனுக்குக் காட்சிக் கொடுத்தார் சிவபெருமான். அப்பொழுது, சிவனின் மனைவி சக்தி தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என வரம் வேண்டினான். அவரும், அவ்வாறே ஆகட்டும் என வரமளித்தார். சக்தியும் தக்சனுக்கு மகளாக, சதி எனும் பெயருடன் பிறந்தார். பிரம்மனின் தலை வெட்டப்பட்டதற்கு சிவனேக் காரணம் என அறிந்த தக்சன், சிவனை எதிரியாக நினைத்தான்.

சதியும் வளர்ந்தாள். சிவபெருமான் மீது காதல் கொண்டாள். சிவனுக்கும், சதிக்கும் இடையே திருமணம் நடக்க வேண்டிய தருணம். தக்சன் திருமணத்திற்கு சம்மதம் அளிக்கவில்லை. தீவிர விஷ்ணு பக்தனான, தக்சனுக்கு விஷ்ணு தாத்தா முறை. திருமணத்திற்காக, அனைவரும் வந்திருந்தும், சிவனுக்கு மகளை மணமுடித்துத் தர வேண்டிய தருணத்தில் தர மாட்டேன் எனப் பிடிவாதம் பிடித்தான் தக்சன். அப்பொழுது விஷ்ணு கோபத்துடன் வந்து, நீ அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறினார். அதனை ஏற்று திருமணம் செய்து வைத்தார் தக்சன்.

பின்னர், சிவனை அழைக்காமல், அனைத்துத் தேவர்களையும் அழைத்து, மாபெரும் யாகத்தை வளர்த்தான். ஆதி இறைவனான சிவனை அழைக்காத செய்தியை, நாரதர் மூலம் தெரிந்து கொண்டார் சிவனின் மனைவியான சதி. இதனை சிவனிடமும் கேட்டார். அதற்கு சிவபெருமான், நீ அங்கு அழைக்கப்படவில்லை, அழையா வீட்டிற்கு சென்றால், அவமானமே மிஞ்சும் என கூறினார். இப்பிரபஞ்சத்தின் தாய் என்பதை மறந்த சதி, என்னைத் தந்தை வீட்டிற்கு செல்ல விட மாட்டேன் என்கின்றீர்களே எனக் கோபப்பட ஆரம்பித்தார். அவருடைய உடலில், இருந்து அவருடைய சக்தியானது, பத்து தேவதைகளாக மாறி வெளியேறியது. மொத்தம் 64 சக்திகள் இருந்தாலும், இந்த பத்து தேவதைகளுக்குள் அந்த 64 சக்திகளும் அடக்கம். அந்த பத்து தேவதைகள் பற்றியும், அவற்றின் பலத்தைப் பற்றியும் காண்போம்.

1 காளி

kaali

இவரைப் பற்றி அனைத்து இந்து மதத்தைச் சேர்ந்தவர்களும் அறிவர். ஒரு கையில் வாள், ஒரு கையில், அரக்கனின் தலை, ஒரு கையில் சூலம், மற்றொரு கையில் சட்டி என பார்ப்பதற்கு கொடூரமாக காளி காட்சித் தருகிறார். இவர் மண்டை ஓட்டினை மாலையாக மாற்றி, தன்னுடையத் தோளில் அணிந்திருப்பார். நெற்றிக் கண்ணை உடையவர். அகோரமான பற்கள், நிர்வாணமான உடல், ஆழமானப் பார்வை, உறத்த குரல் ஆகியவை காளியின் ரூபமாக சித்தரிக்கப்படுகிறது. இவரே, ஒவ்வொரு மனிதனின் மோட்சத்தினை தீர்மானிப்பவர் எனக் கூறலாம். காளி வழிவிட்டால் மட்டுமே, ஒரு மனிதனுக்கு மோட்சம் கிடைக்கும். பல அசுரர்களை வதம் செய்தவர். தன்னிடம் அடைக்கலம் என வந்தவருக்கு, துணையாக நிற்பவர். ஜாதகத்தில் 12ம் வீட்டினை மோட்சத்தினைக் குறிக்கும் இடம் என்பர். அந்த இடத்தின் அதிபதியின் கடவுள் யாராக இருந்தாலும், காளிக்கே அந்த இடத்தில் அதிக உரிமை வழங்கப்பட்டுள்ளது. காளியை வணங்குபவர்களுக்கு பயம் இருக்காது.

2 பகலா

bagalamukhi

இந்த தேவி காளிக்கு அடுத்ததாக கருதப்படுகிறார். இவர் பலராலும் வழிபடப்படுவதில்லை. இருப்பினும், இவரை இன்னும் ஒரு சிலர் வணங்கி வருகின்றனர். ஒரு முறை ரூரூ என்ற அரக்கன் பிரம்மரிடம் வரம் வாங்குவதற்காக, தவம் புரிந்து வந்தார். அவர் ஏற்கனவே மிகவும், பலம் மிக்கவர். அவர் பிரம்ம தேவரின் அருள் பெற்று விட்டால், அவரை யாராலும், வெல்ல முடியாது என நினைத்த தேவர்கள், மஞ்சள் நிற நதிக்கு அருகில் பூஜைகளும், ஆராதனைகளும் செய்தனர். அப்பொழுது, அவர்கள் முன் தோன்றிய பகலா தேவி, அவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினார். மேலும், அந்த ரூரூ அரக்கனின் நாவையும் அறுத்தார். இவருக்கு அனைத்து நிகழ்வுகளையும், நிறுத்தி வைக்கும் சக்தி உள்ளது. இவர் அசுரர்களின் பேச்சையும், நாக்கையும் கட்டுப்படுத்தும் சக்தியும் உள்ளது.

3 சின்னமஸ்தா

chinamasta

இருப்பதிலேயே மிகவும் கொடூரமாக காட்சி அளிக்கும் தெய்வமாக இவர் உள்ளார். ஒரு முறை இப்பிரபஞ்சத்தின் தாயான பார்வதி, தன்னுடைய தோழிகளான தாகினி மற்றும் வர்ணிணி ஆகியோருடன், மந்தாகிணி நதிக்கரைக்குக் குளிக்கக் சென்றார். அப்பொழுது, அவர் அந்த இயற்கை அழகைப் பார்த்து ரசித்தார். மனதில் ஒரு வித ஆனந்தம் உருவானது. அப்பொழுது அவருடைய தோழிகள் அவரிடம் மிகவும் பசிப்பதாக கூறியுள்ளனர். அப்பொழுது, கொஞ்சம் பொறுத்திருங்கள். நான் உணவு வழங்குகிறேன் எனக் கூறியுள்ளார். அவர்களும் அமைதியாக இருந்துள்ளனர். சிறிது நேரம் கழித்து, மீண்டும் பசிக்கின்றது எனக் கூறியுள்ளனர். அதற்கு பார்வதி, நான் இப்பிரபஞ்சத்தின் தாய் என்றும், உங்கள் பசிக்கு நான் உணவு வழங்குவேன். வீட்டில் உணவு உண்ணலாம் எனக், கூறியுள்ளனர். மீண்டும் சிறிது நேரம் சென்றதும், பசிக்கின்றது எனக் கூறியதும், பார்வதி, தன் கை நகத்தால், ஒரே வெட்டில், தன் தலையை அறுத்துள்ளார். அதிலிருந்து பீறிட்ட இரத்தத்தை குடிக்கக் கூறியுள்ளார். அதனை அவர்களுடைய தோழிகள் குடித்தனர்.

இந்த தேவி, அர்ப்பணிப்பின் சிறந்த எடுத்துக்காட்டாக, விளங்குவதாக பஞ்சரத்ன கிரந்தம் விவரிக்கிறது. இந்த தேவி, தைரியத்தையும், பராக்கிரமத்தையும் வழங்க வள்ளவர் ஆவார்.

4 புவனேஷ்வரி

bhuvaneswari

பிரம்மன் உலகைப் படைக்கும் முயற்சியின் பொழுது, தன்னிடிம் அவ்வளவு சக்தி இல்லை என்பதை உணர்ந்தார். அப்பொழுது, பார்வதியை நோக்கித் தவம் புரிந்தார். பிரம்மனுடைய தவத்தின் பலனாக, தாய் பார்வதி கிரியா சக்தியை வெளிப்படுத்தினார். அதனைப் பயன்படுத்தி, இப்பிரபஞ்சத்தைப் படைத்தார் பிரம்மன் என, பிராணதோஷினி எனும் கிரந்தம் விவரிக்கிறது. சகலபுவனங்களுக்கும் தாய் என்பதால், புவனேஷ்வரி என்றும், சகலத்தையும், காத்து ஆள்பவள் என்பதால், ராஜ ராஜேஸ்வரி எனவும் இவர் அழைக்கப்படுகிறார். இரண்டு கரங்களில், ஆயுதங்களுடன், இரண்டு கைகளில் அருள் வழங்கும் புவனேஷ்வரி, அமர்ந்த நிலையில், காட்சித் தருகிறார்.

5 மாதங்கி

mathangi

மாதங்கி எனும் தேவியானவர், அனைவருடைய ஆசைகளையும் நிறைவேற்றி வைப்பவர் ஆவார். இவர், பச்சை நிறத்தில் காட்சி தருகிறார். இவரிடம் நாம் வேண்டினால், வேண்டியதை வேண்டியவாரே வழங்குபவர். இவரே அனைத்து சந்தோஷங்களுக்கும், ஆசைகளுக்கும் அதிபதி ஆவார்.

6 சோரஷி

sorashi

பதினாறு வயது குழந்தையாக காட்சியளிக்கும் இவர், பார்வதியின் மற்றொரு அம்சமாவார். ஒரு முறை சுமேரு மலையில், பார்வதி தவம் செய்து வந்தார். அப்பொழுது வந்த நாரதர், நீங்கள் இல்லாத நேரத்தில், சிவபெருமான் வேறு யாருடனோ, வாழ்ந்து வருகிறார் எனக் கூற, பார்வதிக்கு கோபம் வந்தது. இதனையடுத்து, 16 அழகிய பெண்ணாக மாறிய பார்வதி, சிவன் முன் வந்து நின்றார். சிவனின் மனதில் ஒரு பெண்ணின் நிழல் இருப்பதைப் பார்த்து மேலும் கோபம் கொண்டார். அதனைக் கவனித்த சிவபெருமான், சற்று உற்றுப்பார் எனக் கூறினார். ஆம், அது அந்தப் 16 வயது பெண்ணின் நிழல். பார்வதி மனம் மகிழ்ந்தார். அன்று முதல் அந்த ரூபம் சோரஷி என அழைக்கப்படுகிறார். இவரே, அழகு, ஆசை, அன்பிற்கு அதிபதியாக வணங்கப்படுகிறார்.

7 தூமவதி

dhumavathi

ஒரு முறை சிவ பெருமான் கையால மலையில் அமர்ந்திருக்கும் பொழுது, அருகில் அமர்ந்திருந்த பார்வதி பசிக்கிறது என்றார். கொஞ்சம் பொறுத்திரு என்று என, சிவன் கூறினார். சிறிது நேரம் கழித்து மீண்டும் பசிக்கிறது என்றார். அதற்கு சிவபெருமான் சிறிது நேரம் பொறுத்திரு என்றுக் கூறினார். பசி தாங்க முடியாமல், பார்வதி சிவனையே விழுங்கிவிட்டார். அவர் சிவனை விழுங்கியதும், பார்வதியின் உடலில் இருந்து, புகை கிளம்ப ஆரம்பித்தது. வயிற்றுக்குள் இருந்த சிவன் தன்னுடைய நெற்றிக் கண்ணை திறந்து விட்டார். அப்பொழுது, பார்வதியிடம் பேசிய சிவன், எண்ணை நீ வெளியே விடாவிட்டால், இவ்வுலகம் அழிந்து விட்டது. நீ மட்டுமே எஞ்சி இருப்பாய் எனக் கூறினார். பின்னர், சிவனை வெளியே விட்டு மன்னிப்புக் கேட்டார் பார்வதி. புகை வந்த உடலுடன் பார்வதி காட்சித் தந்ததால், தூமவதி என அழைக்கப்பட்டார். தூம என்றால் கரும்புகை என்றுப் பொருள்.

இந்த தேவி, நகைகள் ஏதும் இன்றி, வெண்ணிற உடை அணிந்து, விதவையாக காட்சித் தருவார். இவர், கிளர்ச்சிகள், ஏமாற்றங்கள், பிரச்சனைகள், மற்றும் தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுதலை அளிப்பவர் ஆவார்.

8 திரிபுர சுந்தரி

tiripurasundari

இவர், தாமரையில் அமர்ந்திருப்பார். இவரைக் கமலா எனவும் அழைப்பார். இவர் மகாலெஷ்மியின் அம்சமாவார். தங்க நிறத்தில் காட்சியளிக்கும் திரிபுர சுந்தரி, தங்கத் தாமரையில் அமர்ந்திருப்பார். இவரே, மூன்று உலகின் அழகாகவார். உலகில் உள்ள அனைத்து சௌந்தர்களும், ஐஸ்வர்யமாகவும் இவர் உள்ளார்.

9 தாரா

tara

தாரா நீண்ட நாக்குடன், நீல நிறத்தில் காட்சி அளிக்கிறார். புலித் தோல் அணிந்துள்ள இவருடைய தலை முடியாது, பாம்பைப் போன்று நெலிந்து கொண்டே இருக்கும். இவர் நான்கு கரங்களுடன் மூன்று கண்களுடன் காட்சித் தருவார். இவரே, அனைத்து காரியங்களுமாக இருக்கிறார். இவரே நம்முடையப் பழக்க வழக்கங்களையும் தீர்மானிப்பவர் ஆவார்.

10 பைரவி

bairavi

இவருக்கு திரிபுர பைரவி, சம்பத்து பிராஜா பைரவி, கௌலேஷ் பைரவி, சைதன்ய பைரவி, காமேஷ்வரி பைரவி, நித்ய பைரவி, ருத்ர பைரவி போன்ற எண்ணற்றப் பெயர்கள் உள்ளன. சிவந்த நிறத் தோலை உடையவர். கழுத்தில் பவளத்தால் ஆன ஆபரணத்தை அணிந்திருப்பார். சிவந்த மார்பகத்தையும், சிவந்த நான்கு கரங்களையும் உடைய இவர், கரங்களில் ஜெப மாலையையும், புத்தகம் வைத்திருப்பார். மற்ற இரு கைகள் அருளை வழங்கும் விதத்தில் வைத்திருப்பார். இவர் சுதந்திரம் மற்றும் பயமற்றத் தன்மையை வழங்குபவர் ஆவார். இவர் பிறை அணிந்திருப்பார். இவருக்கும் மூன்று கண்கள் உண்டு. இவர் காளியின் அம்சமாகவே கருதப்படுகிறார். இவர் சண்டா மற்றும் முண்டா என்ற அசுரர்களை வதம் செய்தவராவார்.